ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டுவந்த வங்கிப் பணம் ரூ.1 கோடி கொள்ளை: வாகனத்தின் டிரைவரே திருடிச்சென்றதால் பரபரப்பு…!!
சென்னை கோடம்பாக்கத்தில், காரில் பணத்தை எடுத்துச் சென்று ஏ.டி.எம் மையங்களில் உள்ள எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று மதியம் ரூ.2 கோடியே 29 லட்சம் பணத்தை ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக காரில் எடுத்துச் சென்றனர். டிரைவர் இசக்கிபாண்டி காரை ஓட்டினார். அவருடன் ஜோயல் முல்லா (வயது 32) என்ற துப்பாக்கி ஏந்திய காவலரும், பணத்தை எந்திரங்களில் நிரப்பும் பாபு, சதீஷ்குமார் ஆகியோரும் சென்றனர். சுமார் 10 ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பி விட்டு, மாலையில் திருவேற்காட்டை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்புவதற்காக சென்றனர்.
பணம் எடுத்து வந்த காரை ஏ.டி.எம் மையத்தின் முன்பு நிறுத்தி விட்டு பாபு, சதீஷ்குமார் ஆகிய இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம் மையத்துக்குள் சென்றனர். காரில் இசக்கிபாண்டியும், ஜோயல்முல்லாவும் மட்டும் இருந்தனர். சிறிது நேரத்தில் ஜோயல்முல்லாவிடம் பேச்சுக் கொடுத்த இசக்கிபாண்டி, அருகில் உள்ள கடைக்கு சென்று பாக்கு வாங்கி வரலாம் என்று கூறி காரை ஓட்டிச்சென்று சாலையின் எதிர் திசையில் நிறுத்தினார்.
பின்னர், கடைக்கு சென்று பாக்கு வாங்கி வரும்படி ஜோயல் முல்லாவை, இசக்கிபாண்டி அனுப்பினார். ஜோயல் முல்லா இறங்கிச்சென்று கடையில் பாக்கு வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போக்குவரத்து நெரிசலால் டிரைவர் காரை சற்று தள்ளி நிறுத்தி இருக்கலாம் என்று நினைத்து சிறிது தூரம் சென்று பார்த்தார். ஆனால் எந்த இடத்திலும் கார் இல்லை.
இதுகுறித்து ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிக்கொண்டிருந்த ஊழியர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் இசக்கிபாண்டியை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது ‘செல்போன் சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் ஏதோ தவறு நடந்துள்ளது என அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் திருவேற்காடு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் வேலப்பன்சாவடியை அடுத்த புளியம்பேடு செல்லும் வழியில் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அங்கு நின்றது பணம் எடுத்துச்சென்ற கார் என தெரியவந்தது.
ஆனால் அந்த காருக்குள் பணப்பெட்டி இல்லை. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது டிரைவர் இசக்கிபாண்டி, தன்னுடன் வந்த ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி ரூ.1 கோடியே 18 லட்சம் பணத்துடன் காரை ஓட்டிச் சென்றதும், பின்னர் காரை அனாதையாக நிறுத்திவிட்டு அந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவந்தன. இசக்கிபாண்டி கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்ப அவர்தான் காரை ஓட்டிச் செல்வார். எனவே நீண்ட நாட்களாக திட்டமிட்டு பணத்தை அவர் கொள்ளை அடித்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
தன்னுடன் வந்த ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி காரை புளியம்பேடு பகுதிக்கு ஓட்டிச்சென்று அங்கு நிறுத்தி விட்டு, அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, அங்கு தனது நெருங்கிய நண்பர்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த மற்றொரு காரில் ஏறி தப்பிச்சென்றது தெரியவந்து உள்ளது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். இசக்கிபாண்டியின் செல்போன் எண்ணை வைத்து அவர் யார்-யாரிடம் எல்லாம் பேசி உள்ளார் என்பது குறித்தும், இந்த கொள்ளை சம்பவத்தில் உடன் வந்த ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இசக்கிபாண்டியை போலீசார் தேடி வருகிறார்கள்.
பணம் கொள்ளை அடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான குடோன்கள் அதிக அளவில் உள்ளது. எனவே போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அப்பகுதியில் எங்காவது பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பல்வேறு கோணங்களில் திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating