சர்வதேச பாடசாலைகளை ஒழுங்கமைக்கும் திட்டம் விரைவில்…!!
உள்நாட்டில் இயங்கி வருகின்ற அனைத்து சர்வதேச பாடசாலைகளையும் ஒழுங்கமைப்பதற்கான திட்டமொன்றை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பயிற்றப்பட்ட சிறந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் குறிப்பிட்டார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதியிலுள்ள பாதுகாப்பு பாடசாலையின் பத்தாவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கல்வியமைச்சு தொடர்ந்தேர்ச்சியான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஆசியாவிலேயே நமது நாட்டின் கல்வித்துறை மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அதற்காக நாம் வரலாற்று காலம் தொட்டு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளோம். நமது ஆசிரியர் வளம், பாடசாலை அபிவிருத்தி போன்றன ஏனைய நாடுகளுக்கு உதாரணமாக உள்ளன. இருந்த போதிலும் நவீன தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற வகையில் பாடசாலைக்கல்வியை தயார்ப்படுத்த வேண்டும்.
அதற்கென ஆசிரியர்கள் விசேடமாக பயிற்றுவிக்கப்படுவர். நம் நாட்டின் பாதுகாப்புப் படையினர் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். எனவே பாதுகாப்புப் படை பாடசாலைகளையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும். அதற்கென விசேட நிதியுதவிகள் வழங்கி வருகின்றோம்.
பாடசாலைகளை சர்வதேச தரத்தில் அபிவிருத்தி அடையச் செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச பாடசாலைகளையும் முறையாக ஒழுங்குபடுத்தலுக்கு உட்படுத்தவுள்ளோம். சர்வதேச பாடசாலைகளில் உள்ள வளங்களைப் போன்றே அனைத்து வளங்களையும் தேசிய பாடசாலைகளுக்கும் வழங்க தீர்மானித்துள்ளோம்.
அத்தோடு எதிர்வரும் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இத்தினத்திலாவது நாம் ஆசிரியர்களை நினைவுபடுத்த வேண்டும். இதற்கென தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்த வேண்டும். சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது. கல்விக் கண்ணை திறந்த ஆசிரியர், தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை. தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும். தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சிறந்த நிலையில் இருந்தாலும் ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை மறந்துவிடக் கூடாது.
தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள ஆசிரியர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொலைபேசி ஊடாகவேனும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கின்றேன். நாம் ஆசிரியர்களை மதித்தால் மட்டுமே உயர முடியும் என்பதை நம்புகின்றேன் என்றார்.
Average Rating