ஆளுக்கொரு நிலைப்பாடு…!!

Read Time:22 Minute, 38 Second

article_1475215182-cfஇனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் நிரந்தரமான, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு வேண்டுமென்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் கூறிக்கொள்கின்றனர். ஆனால், அது எப்படிப்பட்ட தீர்வாக இருக்க வேண்டும்? அதன் வடிவம் என்ன என்பதை அவர்கள் இன்னும் சரியாக வரையறுத்துக் கூறவில்லை. மிகக் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாகவும் அதற்குள் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் ஆளுக்கொரு கருத்து முன்வைக்கப்பட்டாலும், ஒரு பொதுவான முடிவுக்கு முஸ்லிம் தலைவர்கள் வரவில்லை. சர்வதேசத்திடம், அரசாங்கத்திடம் அல்லது தமிழ்த் தரப்பினரிடம் முஸ்லிம்கள் தமது அபிலாஷைகள் என்ன என்பதை முன்வைப்பதற்கு முன்னதாக, தமக்கிடையே பேசி ஒரு கூட்டுத் தீர்மானத்தையும் அதன்படியான கோரிக்கையையும் வடிவமைப்புச் செய்வதற்கு இவர்கள் தவறிவிட்டனர். இது ஆரோக்கியமானதல்ல.

பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை இப்பக்கத்தில் பல தடவை எழுதிவிட்டோம். “வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இரகசியமாக இணக்கம் தெரிவித்துவிட்டார்” என்ற கருத்துக்கள் பரகசியமாகவே முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவர் இதை மறுத்துரைக்கவும் இல்லை; வடக்கு, கிழக்கு இணையக் கூடாது என்று சொல்லவும் இல்லை. மாறாக, “இனப் பிரச்சினை தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய தீர்வைப் பெறுவதில் கட்சி அக்கறையுடன் இருக்கின்றது” என்ற தோரணையிலே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். அந்தத் தீர்வு எவ்வாறானது என்று சொல்லவில்லை. சேதாரம் இல்லாத விட்டுக் கொடுப்புக்கு தயார் என சொல்லியுள்ள ஹக்கீம், ‘சேதாரம்’ என்பது என்ன என்பதையும் எதையெல்லாம் விட்டுக் கொடுக்கலாம் என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறவில்லை.

வடக்கில் இருக்கின்ற பிரதான தமிழ் அரசியல்வாதிகளையும் கிழக்கில் இருக்கின்ற மு.காவின் முஸ்லிம் ஆதரவாளர்களையும் கண்டியில் இருக்கின்ற தனது சொந்த சிங்கள வாக்காளர்களையும் சமகாலத்தில் திருப்திப்படுத்த வேண்டிய ஒரு தேவைப்பாடு அவருக்கு இருக்கின்றது.

“மிகவும் பக்குவமாகவும் சாணக்கியமாகவும் கையாளப்பட வேண்டிய விடயங்களைப் பகிரங்கமாகப் போட்டுடைத்து, குழப்பிவிடுகின்ற நிலவரங்களை ஏற்படுத்திவிடக் கூடாது” என்று அவர் கருத்துரைத்திருக்கின்றார். இது உண்மைதான். ஆனால் இது எப்போதாவது வெளியில் வரவே போகின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.

இணைந்த வடக்கு – கிழக்கிலான தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடி நிற்கின்றது. அதற்காக ஹக்கீம் போன்ற எந்தவொரு முஸ்லிம் தலைமையையும் பாதுகாக்கவும் தேவையேற்பட்டால் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக பயன்படுத்தவும் தமிழ்த் தேசியமும் சிங்கள ஆட்சியாளர்களும் ஒருக்காலும் பின்னிற்கப் போவதில்லை என்பது பட்டறிவாகும். ஆக, இரு மாகாணங்களையும் இணைத்து ஒரு தீர்வைப் பெறுவதை எதிர்க்காமல் – அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுத்தல் என்ற கோதாவில் மு.கா, இணைந்த வடகிழக்கிற்குள் ஒரு தீர்வுக்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அனுமானிக்க முடிகின்றது. ஆயினும் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்குரிய தீர்வாக ‘இதை’ தர வேண்டும் என்று எதையும் பகிரங்கமாக அக்கட்சி கோரவில்லை. வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்தையா? முஸ்லிம் அலகையா? முஸ்லிம் காங்கிரஸ் கோருகின்றது என்று குறிப்பிடவும் இல்லை. எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு என்பது இரண்டு கட்சிகள் மாத்திரம் ஏற்றுக் கொள்கின்ற தீர்வல்ல என்பதையும் அது ஒவ்வொரு பொதுமகனும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்ற அடிப்படைப் புரிதல் ஏற்பட வேண்டியுள்ளது.

இலங்கையில் இனப் பிரச்சினையும் அதற்கான தீர்வும் இரகசியமான சங்கதிகள் அல்ல! இன்று இதைப்போட்டு உடைக்காவிட்டாலும் கடைசியில் எல்லோருக்கும் தெரியவரத்தான் போகின்றது. அப்போது அது எந்த இனத்திற்காவது பாதகமாக இருக்குமென்றால், அதன் எதிர்விளைவுகள் குறுகிய காலத்துக்குள் கடுமையான தாக்கத்தை கொண்டவையாக இருக்கும். எனவே, இப்போதிலிருந்தே மக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்காக அவ்விடயங்களை வெளிப்படுத்துவதும் மக்கள் விரும்பும் தீர்வை மெல்ல மெல்ல சிருஷ்டிப்பதும் கடைசிநேர சிக்கல்களை தவிர்க்கும் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து மூடுமந்திரமாக வைத்திருப்பது தமிழர்களும் சிங்கள மக்களும் முஸ்லிம்களைத் தவறாக நினைப்பதற்கு காரணமாக அமைந்துவிடக் கூடும்.

இதேவேளை, மற்றைய முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்பாட்டுத் தளம் சூடுபிடிப்பதும், ஓய்ந்து போவதுமாகத் தெரிகின்றது. கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளும் வெளியில் உள்ள அரசியலையும் சமகாலத்தில் கவனிக்க வேண்டிய நிலையில் அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் இருக்கின்றார். இவர் வடபுலத்தில் பிறந்தவர் என்பதாலும் அகதி வாழ்க்கையை அனுபவித்தவர் என்பதாலும் சில விடயங்களில் உறுதியாக இருக்கின்றார். அந்த வகையில், “வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்றும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவிகளைத் துறந்துவிட்டு வீதிகளில் இறங்கிப் போராடுவோம்” என்றும் பகிரங்கமாக கூறியிருக்கின்றார். ஆனபோதும், இவ்விரு மாகாணங்களும் பிரிந்திருக்கும் போதோ அல்லது எல்லா எதிர்ப்புக்களையும் தாண்டி அது இணைக்கப்படும் நிலைமை ஏற்பட்டாலோ முஸ்லிம்களுக்கு எவ்வாறான தீர்வு அமைய வேண்டும் என்று ரிஷாட் சரியாக வரையறுத்துக் கூறவில்லை. இணையாமல் இருப்பதே ஒருவிதத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துவிடும் என்று அவர் நினைப்பதாகவும் கருத இடமுள்ளது. ரிஷாட்டை தவிர வடக்கில் முக்கியமான முஸ்லிம் அரசியல்வாதிகள் அதிகம்பேர் இல்லை என்பதால், இதுபற்றிய கருத்துக்கள் வடக்கில் இருந்து முன்வைக்கப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது.

கிழக்கில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்று கிழக்கில் பிரதிநிதித்துவ அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியதாகத் தெரியவில்லை. இவ்விணைப்பிற்கு சாதகமான ஒரு தீர்மானத்தை வட மாகாண சபை நிறைவேற்றியிருக்கையில் அதற்கெதிராக அல்லது அவ்வாறான தீர்மானத்தை தமது சம்மதத்துடனேயே எடுக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையைக் கூட விட முடியாதவராகவே கிழக்கு முதலமைச்சர் இருக்கின்றார். கிழக்கில் உள்ள பிரதியமைச்சர் ஹரீஸ் போன்றோர் ‘நிபந்தனையுடன் இணைப்புக்கு ஆதரவு’ எனற தொனியில் அறிக்கைகளை வெளியிட்டுள்ள போதிலும், அக்கட்சியின் கிழக்கைச் சேர்ந்த எம்.பிக்களான தௌபீக், மன்சூர், அலிசாஹிர் மௌலானா மற்றும் பிரதியமைச்சர் பைசல்காசீம் போன்றவர்கள் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவித்ததாகத் தெரியவில்லை. மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காகவாவது முயற்சிகளை மேற்கொள்ளத் தவறிவிட்டனர். கட்சித் தலைமையின் நிலைப்பாட்டுடன் அவர்கள் ஒன்றித்துப் போவார்களா? அல்லது ‘கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீன்’களாக இருப்பார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மறுபுறத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான பிரதியமைச்சரான அமீர்அலியும் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமா? இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு? இல்லாவிட்டால் என்ன தீர்வு? என்று தனது நிலைப்பாட்டைப் பொதுத்தளத்தில் முன்வைப்பதில் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாகத் தோன்றுகின்றது.

ஆனால், ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமையும் இல்லாமல் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டிருக்கின்ற அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்த அதாவுல்லா, மீண்டும் இவ்விரு மாகாணங்களும் இணையக்கூடாது என்பதை ஊருக்குஊர் மேடை போட்டுச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதற்கு ‘சுதந்திர கிழக்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. “முஸ்லிம்கள் விடயத்தில் பொதுபலசேனாவும் புலம்பெயர் (டயஸ்போரா) சக்திகளும் திரைக்குப் பின்னால் கூட்டிணைந்து செயற்படுகின்றன” என்றும் “கிழக்கில் உள்ள வளங்களுக்காகவே சர்வதேச நாடுகள் கிழக்கில் கண்வைத்துள்ளன” என்றும் திரும்பத்திரும்ப கூறிவருகின்றார். பொதுபலசேனாவின் அட்டகாசம் தலைக்குமேலால் போய்க் கொண்டிருந்த காலத்தில் மஹிந்த அரசில் மௌனமாக இருந்த அதாவுல்லா, “சிங்கள-முஸ்லிம் கலவரம் ஒன்றை ஏற்படுத்தி, சிங்களவர்களுடன் வாழ முடியாது; எனவே தமிழர்களுடன் சேர்வோம்; வடக்கு, கிழக்கை இணைப்போம் என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் இட்டுச் செல்வதற்கான சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக” இப்போது தெரிவித்துள்ளார்.

அதிகாரமிழந்துள்ள அதாவுல்லா இதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுகின்றார் என்று மாற்று அணியினர் சொன்னாலும், வடக்கு-கிழக்கு விவகாரத்தில் அவர் எப்போதும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தார் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. ஆயினும், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதை கூறிவருகின்ற தேசிய காங்கிரஸ் தலைவர், மாகாணங்கள் இணைக்கப்படாத நிலையில் ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டால் அதில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன என்பதை சொல்லவில்லை. இவ்விரண்டும் தனித்தனி மாகாணங்களாக இருந்தாலேயே பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடுமா? அன்றேல் கிழக்கு இணையாவிட்டால் கூட அதற்குள் ஒரு தீர்வு வேண்டுமா? என்று அவர் தெளிவாக எடுத்தியம்பியதாக தெரியவில்லை.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன்அலி போன்றோர் இணைந்த வடக்கு, கிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம், அவ்வாறில்லாவிட்டால் இணையாத கிழக்கில் முஸ்லிம் (தென்கிழக்கு) அலகு வேண்டுமெனக் கோரி வருகின்றனர். அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், “இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ்த் தரப்பும் பேசிக் கொண்டிருக்காமல், தமிழ்த் தரப்பும் முஸ்லிம்களும் பேசவேண்டும். மாகாண எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதியுச்ச அதிகாரத்துடனான தமிழ் ஆட்புலமும் அதியுச்ச அதிகாரத்துடனான முஸ்லிம் ஆட்புலமும் உருவாக்கப்பட வேண்டும். எது எவ்வாறாயினும் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்படுவதற்கு முன்னரே முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்பதைத் தீர்மானித்தாக வேண்டும்” என உறுதியாகத் தெரிவிக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், தமிழரசுக் கட்சியின் வாக்குறுதி, தமிழர் விடுதலைக்கூட்டணியின் உத்தரவாதம் ஆகியவற்றுக்கு அமைய, இணைக்கப்பட்ட வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனித்த சமஷ்டி ஆட்சியொன்றை வலியுறுத்தியிருக்கின்றார். அரசியல் அதிகாரமற்ற, ஓர் அழுத்தக் குழுபோல இயங்கிக் கொண்டிருக்கும் ‘கிழக்கின் எழுச்சி’ வெறுமனே இணைக்கப்படுவதை ஆட்சேபித்துள்ளது. அதாவது இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் சனத்தொகைக்கு ஏற்ப காணி உள்ளிட்ட வளங்களை உள்ளடக்கிய ஒரு முஸ்லிம் மாகாணம் உருவாக வேண்டும் என்றும், இணைக்கப்படாவிட்டாலும் தென்கிழக்கு அலகு அல்லது அதனையொத்த ஓர் அதிகார எல்லை வழங்கப்பட வேண்டும் எனச் சொல்லியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவும் வடக்கு, கிழக்கு இணைப்பை மேலோட்டமாக எதிர்த்திருக்கின்றார்.

எனவே, எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டுக்களை கொண்டிருக்கின்றார்களே தவிர, தீர்வுத்திட்ட விடயத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதைச் சரியாக வரையறை செய்து, பொதுவான ஒரு கோரிக்கையை முன்வைக்கும் பணியை நூறுவீதம் மேற்கொள்ளவில்லை என்பதைக் காண்கின்றோம். மு.கா, இவ்விணைப்பிற்கு இணக்கம் தெரிவிக்கும் என்பதை ஊகிக்க முடிந்தாலும், அதனைப் பகிரங்கமாக அக்கட்சி அறிவிப்புச் செய்யவில்லை. சரி, அவ்வாறு இணைப்பதற்கு சம்மதம் என்றாலும் முஸ்லிம்களுக்கு அதில் என்ன பங்கு தேவை என்பதை, எல்லோருக்குமான தீர்வு என்னவென்பதை… எல்லோரும் அறியும் வண்ணம் முன்னிலைப்படுத்தவில்லை.

அதேபோல், வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்கின்ற மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக இருப்பதிலேயே குறியாக இருப்பதுடன், தனியே இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று நினைப்பதாகவும் தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெறாமல், இரண்டு மாகாணங்களும் தனித்தனி ஆட்புல எல்லைகளாக இருந்தாலேயே இனப் பிரச்சினை சார்ந்த தீர்வுகள் எல்லாம் கிடைத்துவிடும் என்று நினைப்பது போலுள்ளது; இவர்களது நிலைப்பாடு, தூரநோக்கற்ற அரசியலாகும். ஏனெனில் உத்தேச அரசியலமைப்பின் ஊடான தீர்வுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஒரு பிரதான விடயம் மட்டுமே; அதற்கப்பால் பல உள்ளடக்கங்கள் இருக்கின்றன.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அரசியல்வாதிகள் சேர்ந்து இதுபற்றிப் பேசி முடிவுக்கு வர வேண்டும். முதலில், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதை முன்னுரிமை ஒழுங்கில் வரிசைப்படுத்தி தொகுப்பதுடன் அதில் முதலாவது கோரிக்கையை முன்வைக்க வேண்டும். உதாரணமாக, இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் முதலாவது தெரிவாக இருக்கலாம். இணைந்த வடகிழக்கில் தமிழ் பெரும்பான்மை மாகாணம் ஒன்றும் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் ஒன்றும் அடுத்த தெரிவாக இருக்கலாம். இரண்டு தரப்பிற்கும் சமஷ்டி ஆட்சிமுறை அதற்கடுத்த தெரிவாக இருக்கலாம். அதேபோன்று வடக்கு, கிழக்கு இணைக்கப்படாமல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படுமாக இருப்பின் அதில் தமக்கு என்ன வேண்டும் என்பதையும் முஸ்லிம் தரப்பு இப்போதே சொல்ல வேண்டும். தனித்த கிழக்கில் முஸ்லிம் அலகா? அம்பாறைக்குள் மட்டும் ஒரு குறுநிலப்பரப்பை ஆளும் ஆறுதல் பரிசா? அல்லது வேறு ஏதேனும் அடிப்படையிலான தீர்வா என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது.

காலம் போய்க் கொண்டிருக்கின்றது… முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமக்கிடையே பேசித் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை சர்வதேசமும் அரசாங்கமும் தமிழ்த் தரப்பும் காணும் விதத்தில் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும். தமக்குள் ஒரு முடிவுக்கு வராமல், ஆளுக்கொரு நிலைப்பாட்டில் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதானது சமூக மயப்படுத்தப்பட்ட அரசியலுக்கு அழகல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 4 பேர் பலி…!!
Next post எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி… மழலை என்றாலே அழகு தானே…!! வீடியோ