மதுரை அருகே கார்கள் மோதல்: குழந்தை உள்பட நடிகரின் மகன், மகள் 4 பேர் பலி…!!
மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நடிகரின் மகன், மகள் உள்பட 4 பேர் இறந்தனர். இதில், பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையும் இறந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமதுகாசிம். இவருடைய மகன் லுக்காஹக்கீம் (வயது 36). இவருடைய மனைவி ஆயிஷா சித்திக் (26). மகன் இம்ரான்.
லுக்காஹக்கீமின் உறவினரான சபீதாபானு என்பவர் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 20 தினங்களுக்கு முன்பு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த லுக்காஹக்கீம் குடும்பத்துடன், சபீதாபானுவை பார்ப்பதற்காக திருச்சியில் இருந்து மதுரை வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சபீதாபானுவை பார்த்து விட்டு, அவரை அழைத்து செல்லலாமா என்று டாக்டரிடம் அனுமதி கேட்டார். டாக்டர்களும் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து சபீதாபானு, அவருடைய பச்சிளங்குழந்தை மற்றும் லுக்காஹக்கீம், அவருடைய மனைவி ஆயிஷா சித்திக், மகன் இம்ரான் ஆகிய 5 பேரும் காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை லுக்காஹக்கீம் ஓட்டினார்.
இதே சமயத்தில், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த செந்தில்குமரன் (42) என்பவர் மதுரை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். (இவர் மாசிலாமணி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்). இவருடைய மனைவி விஜயலட்சுமி (36), மகன் சாய்கவின் (7), மகள் சாய்தென்றல் (5) ஆகியோரும் அந்த காரில் வந்து கொண்டிருந்தனர்.
லுக்காஹக்கீம் ஓட்டி வந்த கார், கொட்டாம்பட்டி அருகே உள்ள சீயந்தான்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் வந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கார், நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதி எதிரே வந்து கொண்டிருந்த செந்தில்குமரன் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே லுக்காஹக்கீம் இறந்துபோனார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை, சிறுமி சாய்தென்றல் ஆகியோர் இறந்தனர். இதுபோல் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் சாய்கவின் இறந்து போனான். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
படுகாயம் அடைந்த செந்தில்குமரன், விஜயலட்சுமி, ஆயிஷா சித்திக், இம்ரான், சபீதாபானு ஆகிய 5 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் செந்தில்குமரன், அருப்புக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வைகை செல்வனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating