இந்திய ‘றோ’வின் அமைப்புக்குள், ஒற்றனாக செயல்பட்ட கிட்டு!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –15)

Read Time:23 Minute, 45 Second

timthumb•இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது,
‘அது Boys Army தான் சார்! எழுபத்திரண்டு மணிநேரம் போதும். மொத்தமாகத் தீர்த்துவிடலாம்’ என்று சொன்னவர்தான் அவர்.

• ‘ராஜிவ் எங்கள் முதுகில் குத்திவிட்டார். நான் சயனைட் குப்பி கடித்து இறந்து விடலாம் என்றே நினைத்தேன்’ என்று பிரபாகரன், கூறியதாகப் பிறகு வைகோ பல பொதுக்கூட்டங்களிலும் பத்திரிகைகளிலும் குறிப்பிட்டார்.

தமிழ் மண்ணில் அவர்கள் செய்ய உத்தேசித்திருந்த ஒரு மிகப்பெரிய நாசகாரச் செயல் பற்றி வைகோவுக்குச் சற்றும் தெரியாது இருந்திருக்குமா? சரி. தெரியாது. அப்படியே வைத்துக்கொள்வோம்.

ஆனால் கொடுங்கையூரில் சிவராசனைச் சந்தித்துவிட்டு அந்த உயரமான வெள்ளை உடை மனிதர் திரும்பிச் சென்ற பிறகு, திடீரென்று முன்னறிவிப்பின்றி 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தைக் கருணாநிதி ரத்து செய்ததன் பின்னணி என்ன?

‘ஏற்கெனவே இம்மாதிரி கூட்டங்கள் ரத்தானதற்கு வரலாறு உண்டு’ என்று கருணாநிதி பிறகு சொன்னார். அவரது அந்த அறிவிப்பு வந்த பிறகு பழைய ரெக்கார்ட்களை நான் எடுத்துப் புரட்டிப் பார்த்தேன்.

அப்படி ஒருநாள் முன்கூட்டிய அறிவிப்பு கூட இல்லாமல் எந்தத் தேர்தல் பொதுக்கூட்டத்தையும் அவர் ரத்து செய்திருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு தேசியத் தலைவர் வருகிற நாளில் போட்டியாக நாம் எதற்கு இன்னொரு கூட்டம் நடத்தவேண்டும் என்றும் அவர் கருதியிருக்கலாம். அதனாலும் ரத்து செய்திருக்கலாம்.

அல்லது வாழப்பாடி ராமமூர்த்தி கவலைப்பட்டது போல, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காதிருப்பதற்காகவும் அதனைச் செய்திருக்கலாம்.

உடல் நிலை முதற்கொண்டு எத்தனையோ நியாயமான காரணங்கள் அவருக்கு இருந்திருக்கக்கூடும்.

ஆனால் புலிகளின் அக்கறை வைகோவாக மட்டுமே இருந்திருந்தாலும் வைகோவுக்குத் தமது தலைவர் கருணாநிதியின்மீது அக்கறை இருந்திருக்கும் அல்லவா?

விஷயத்தைச் சொல்லாவிட்டாலும் நிகழ்ச்சியை ரத்து செய்யவாவது அவர் வேறு ஏதேனும் சொல்லி ஏற்பாடு செய்திருப்பாரல்லவா? நிகழ்ச்சி ரத்தானதேகூட இங்கு ஒரு பொருட்டல்ல.

வைகோவுக்கு ராஜிவ் கொலை முன்கூட்டியே தெரியுமா, தெரியாதா, என்பதுதான். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யாருடைய உதவியும் இல்லாமல், தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தெரியாமல் இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்பதுதான் பிரபாகரனின் உத்தரவு.

ஆனால் தன் விருப்பமாகவே வைகோ சிவராசன் குழுவினருக்கு உதவி செய்தார் என்று எனக்கு விசாரணையில் தகவல்கள் வந்தன. அதனால்தான் அவரை விசாரிக்க மிகவும் விரும்பினேன்.

ஆனால் அந்த வாய்ப்பு வேறொரு அதிகாரிக்கே வழங்கப்பட்டது. அதன் விளைவு, ஒரு சாட்சியாக வைகோவை ராஜிவ் கொலை வழக்கில் சேர்க்க நேர்ந்தது.

இதன் பின்னணி, ராஜிவ் கொலைச் சம்பவத்துக்கு நான்கு வருடங்களுக்கு முந்தையது

1987 ஜூலை மாதம், இந்தியப் பிரதமர் ராஜிவைச் சந்திக்க யாழ்ப்பாணத்திலிருந்து புது தில்லி வந்திருந்தார் பிரபாகரன்.

இந்திய உளவுத்துறை அதிகாரிகளே அவரை அழைத்து வந்திருந்தார்கள். புது டெல்லி அசோகா ஹோட்டலில் அவர் அப்போது தங்கவைக்கப்பட்டார்.

கையெழுத்தாக இருந்த இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்துக்குப் பிரபாகரனின் சம்மதத்தைப் பெறுவதுதான் அந்தப் பயண ஏற்பாட்டின் குறிக்கோள்.

அதன்படி, பிரபாகரன் ராஜிவ் சந்திப்பு நடைபெற்றது. இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் குறித்து ராஜிவும் அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரும் பிரபாகரனுக்கு விளக்கிச் சொன்னார்கள்.

ஆனால் பிரபாகரனுக்கு அந்த உடன்பாட்டில் விருப்பமில்லை. அது இலங்கைத் தமிழர் நலனுக்குப் புறம்பாகச் செயல்படக்கூடும் என்று அவர் கருதினார்.

உடன்பாட்டை ஒப்புக்கொள்ளாமல் அவர் அசோகா ஹோட்டலுக்குத் திரும்பிய சமயம், அவரைச் சந்திக்க வைகோ அங்கு வந்தார். ஆனால் பிரபாகரனைச் சந்தித்துப் பேச வைகோவை அப்போது உளவுத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

ஹோட்டல் லாபியில் இருந்தபடியே டெலிபோனில் வேண்டுமானால் பேசலாம் என்று சொன்னார்கள்.

அப்படி இண்டர்காமில் பேசியபோது பிரபாகரன்,‘ராஜிவ் எங்கள் முதுகில் குத்திவிட்டார். நான் சயனைட் குப்பி கடித்து இறந்துவிடலாம் என்றே நினைத்தேன்’என்று கூறியதாகப் பிறகு வைகோ பல பொதுக்கூட்டங்களிலும் பத்திரிகைகளிலும் குறிப்பிட்டார்.

‘Prabhakaran thought of comitting suicide’ என்று அவர் பேசிய வீடியோ டேப் மற்றும் பத்திரிகைச் செய்திகளைக் காண்பித்து அவரை விசாரணை செய்த அந்த அதிகாரி, அதைக் கொண்டே அவரை ராஜிவ் கொலை வழக்கில் ஒரு சாட்சியாகச் சேர்க்கவும் வகை செய்தார்.

தடா நீதிமன்றத்தில் வைகோ சாட்சி சொல்ல வந்தார். (அவர் 250வது சாட்சி.) விசாரணையின்போது, ‘நான் அப்படிப் பேசவே இல்லை. வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் அந்தக் குரல் என்னுடையது இல்லை’ என்று வாக்குமூலம் அளித்தார்.

ராஜிவ் கொலை விசாரணையைப் பொருத்த அளவில் வைகோதான் முதல் hostile witness. பிறகு தடா கோர்ட் அனுமதி பெற்று அந்தக் குறிப்பிட்ட விடியோ கேசட்டைப் பரிசோதனைக்கு அனுப்பினோம்.

அந்தக் குரல், வைகோவினுடையதுதான் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமானது. ஆனாலும் அவர்மீது மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

எங்களுக்கு மேல் விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டிய கார்த்திகேயன், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்பது புரியாத புதிர்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கைப் பொருத்தவரை மரகதம் சந்திரசேகர் தொடங்கி, வைகோ, கருணாநிதி வரை அத்தனை அரசியல்வாதிகளிடமும் நிகழ்த்தப்பட்ட‘மேலதிகாரிகளின் விசாரணை’மிகவும் மேம்போக்காக அமைந்துவிட்டதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் உண்டு.

இன்னும் ஆழமான, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்கிற ஆதங்கம், என்னைப் போல் அந்த விசாரணையில் ஈடுபட்ட வேறு பல சி.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுக்கும் உண்டு.

அந்த விசாரணையை இப்போதும் மேற்கொள்ள முடியும். மரகதம் சந்திரசேகர் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் நலமாகவே உள்ளார்கள்!

இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியல் சாசனச் சட்டம் தேர்தல்களுக்கென்று சிறப்பு விதிமுறைகள் பலவற்றை வகுத்துத் தந்திருக்கிறது.

மிக நுணுக்கமான, அனைத்துவிதப் பிரச்னைகளின் சாத்தியங்களையும் யோசித்து, ஆலோசித்து, ஒவ்வொரு பிரச்னைக்கும் உரிய தீர்வுகளை அது நமக்குத் தருகிறது.

அதனடிப்படையில்தான் சுதந்தர இந்தியாவில் இதுநாள் வரை தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஒரு வேட்பாளர் உடல்நலக் குறைவினாலோ, எதிர்பாராத விதங்களாலோ தேர்தல் சமயத்தில் இறந்துபோவாரேயானால், அவர் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தேர்தலைத் தள்ளி வைக்கச் சொல்லிச் சட்டம் சொல்கிறது.

ஆனால் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயம் நமது நாட்டில் நடந்தது என்ன?

மூன்று கட்டங்களாகப் பொதுத்தேர்தல்கள் திட்டமிடப்பட்டு, முதல் கட்டத் தேர்தல்கள் மட்டுமே முடிவடைந்திருந்த சமயம் அது.

மே 23 மற்றும் 26ம் தேதிகளில் இரண்டாம், மூன்றாம் கட்டத் தேர்தல்கள் நடக்கவிருந்த சமயத்தில்தான் 21ம் தேதி ராஜிவ் காந்தி கொல்லப்படுகிறார்.

ஒரு மாபெரும் ஜனநாயக தேசத்தின் மக்கள், தமது அடுத்தத் தலைவராக யார் வரவேண்டும் என்று தீர்ப்பளிக்கத் தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில், திட்டமிட்டு, மக்களின் விருப்பம் நிறைவேறிவிடக் கூடாது என்னும் எண்ணத்துடன் ஒரு சதிச்செயல் மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டதால், அவர் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாமல், தேர்தல்கள் நடக்கவேண்டிய அனைத்துத் தொகுதிகளிலும் அது தள்ளிவைக்கப்படுகிறது.

அது, அந்தச் சமயத்தின் அவசியமாகக் கருதப்பட்டு, அரசியல் சாசன சட்டப் பிரிவு 324ன்படி அந்த நடவடிக்கையை அன்றைய தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் எடுத்தார்.

படுகொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு மறுநாளே, அதாவது மே 22ம் தேதி, டி.என். சேஷன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார். தேர்தல்கள் ஒத்திவைப்பு. சுதந்தர இந்தியாவில் அப்படியொரு சம்பவம் நடப்பது அதுவே முதல்முறை.

அத்தனை பரபரப்பான, குழப்பங்கள் மிகுந்த, கொந்தளிப்புகள் மிகுந்த நேரத்தில், அன்றைய பாரதப் பிரதமர் சந்திரசேகர் அவசரமாகத் தமது CCPA (Committee of Cabinet Affairs and Political Affairs)வைக் கூட்டினார்.

தேசத்தின் மிக உயர்ந்த, அதி முக்கியத்துவம் வாய்ந்த கமிட்டி அது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்களுள் சிலர், அப்போதைய ஐ.பி. தலைவராக இருந்த எம்.கே. நாராயணன், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவரான ஜி.எஸ். பாஜ்பாய், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் சுவாமி.

சி.சி.பி.ஏவின் அந்த அவசரக் கூட்டத்தில் பிரதமர் சந்திரசேகர், உளவு அமைப்புகளின் தலைவர்கள் இருவரிடமும், ‘இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்கள் யார்? உளவுத்துறை என்ன செய்திருக்கிறது? உங்கள் ரிப்போர்ட் என்ன?’ என்று கேட்டார்.

உளவுத் துறைத் தலைவர்கள் பதில் சொல்வதற்கு முன்னால் முந்திக்கொண்ட சுப்பிரமணியம் சுவாமி, ‘சந்தேகமில்லாமல் விடுதலைப் புலிகள்தான் இதனைச் செய்திருக்க வேண்டும்’ என்று அடித்துச் சொன்னார்.

அது அவரது யூகமா, கணிப்பா, கைவசம் அப்போதே ஏதேனும் ஆதாரம் வைத்திருந்தாரா என்பதெல்லாம் இங்கு முக்கிய மில்லை. சம்பவம் நடந்த மறுநாள் காலை சுப்பிரமணியம் சுவாமி பிரதமரிடம் ஆணித்தரமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார்.

அது உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஓர் உளவுத்துறைத் தலைவர் அதனை மறுக்க விரும்பினால் எத்தகைய வலுவான ஆதாரங்களுடன் செய்ய வேண்டும்!

ஆனால் நடந்ததை எண்ணினால் சிரிப்புத்தான் வருகிறது. ‘நோ! நிச்சயமாக அதனை விடுதலைப் புலிகள் செய்திருக்கவே முடியாது!

அவர்கள் செய்யவில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்’ என்று உடனே குறுக்கிட்டுப் பேசிய ‘ரா’ தலைவர் பாஜ்பாய், அதற்குச் சொன்ன காரணம்தான் வினோதமானது

I have a mole in LTTE. I am sure it was not done by LTTE’ பிரதமர் சந்திரசேகருக்கே அது வியப்பளித்திருக்கக் கூடிய விஷயம்தான்.

ராவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் ஓர் ஒற்றனா? யார் அது? ரா தலைவர் நிதானமாகச் சொன்னார்:

‘என் உளவாளியின் பெயர் கிட்டு.’ விடுதலைப் புலிகள் அமைப்பில் மிக மூத்த உறுப்பினரும் பிரபாகரனுக்கு வலக்கரம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தவரும், அன்றைய தேதியில் லண்டனில் உட்கார்ந்துகொண்டு, புலிகள் இயக்கம் ராஜிவைக் கொல்லவில்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தவருமான கிட்டுவையா இவர் சொல்கிறார்?

‘ஆம். சந்தேகமில்லை. கிட்டுதான்

ராவின் உளவாளி. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.’ படிப்பறிவில்லாத ஒரு சாதாரண பொதுஜனம் கூடக் கேட்டமாத்திரத்தில் சிரிக்கக் கூடிய இப்படியொரு பதிலைச் சொன்னவர், இந்தியாவின் உளவுத் துறைத் தலைவர்!

சி.சி.பி.ஏ. கூட்டத்தில் ராவின் தலைவர் இப்படிப் பேசினார் என்கிற செய்தியை சுப்பிரமணியம் சுவாமி எழுதிய ராஜிவ் படுகொலை குறித்த புத்தகத்தில் கண்டபோது அதிர்ந்து போனேன்.

இது நான் நேரடியாகப் பார்த்த சம்பவம் கிடையாது. சுவாமியின் புத்தகத்தில் வாசித்ததுதான்.

ஆனால், புலனாய்வுக்காகக் கொழும்பு சென்ற எஸ்.ஐ.டி. அதிகாரிகளைப் பணியாற்ற விடாமல் பாதியில் திரும்ப அழைத்தது இதே ரா தலைவர் பாஜ்பாய்தான்.

அது எனக்கு வெகு நன்றாகத் தெரியும். கிட்டு ஒரு திட்டம் போட்டு, அது மிகத் துல்லியமாக பலித்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

அதாவது தான் சொல்கிற எதுவானாலும் அதை இந்திய உளவுத்துறைத் தலைவர் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர் ‘தயார் செய்து’ வைத்திருக்கிறார் என்பதுதானே இதன் அர்த்தம்?

கிட்டுவைத் தன் உளவாளி என்று பாஜ்பாய் சொன்னதில் இருந்த குழந்தைத்தனம் அவருக்கே ஒரு சில தினங்களில் வெட்கம் உண்டாக்கியிருக்கும்.

ஏனெனில், ஹரி பாபுவின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு நாங்கள் ஹரி பாபுவின் வீடு, சுபா சுந்தரம், பாக்கியநாதன் என்று நகரத் தொடங்கியபோதே இது கண்டிப்பாக விடுதலைப் புலிகளின் வேலைதான் என்பதை அறிந்துவிட்டோம்.

இறுதியில் சிவராசனின் தற்கொலை வரை நீண்ட மிக நீண்ட தேடுதல் வேட்டை மற்றும் புலன் விசாரணைகளின் பலனாகக் கிடைத்த ஆதாரங்களை அடுக்கியபோது, இந்திய உளவுத்துறையின் லட்சணம் என்ன என்பது வெட்டவெளிச்சமாகிப் போனது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அந்த 22ம் தேதி அவசரக் கூட்டம் நடந்து முடிந்ததற்கு ஒருவாரம் கழித்து, அதாவது மே 30ம் தேதியன்று அதே சி.சி.பி.ஏவின் இன்னொரு கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது.

இடைப்பட்ட நாள்களுக்குள்ளாகவே சி.பி.ஐக்கு விடுதலைப் புலிகள்மீது சந்தேகம் எழுந்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன், சிபிஐயின் இயக்குநர் ராஜா விஜய் கரன், இன்னும் ஒரு சில உயரதிகாரிகள், ஆதாரம் சேகரிக்க கொழும்பு புறப்பட்டுச் சென்றிருந்தார்கள்.

அவர்கள் கொழும்பு புறப்பட்டுச் சென்றதில்ரா தலைவருக்குக் கடும் கோபம்.

‘சிறப்புப் புலனாய்வுக் குழு அவசரப்பட்டு, ஒரு முன் தீர்மானத்துக்கு வந்து, விடுதலைப் புலிகள்தாம் காரணம் என்று முடிவு செய்துகொண்டு விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

புலனாய்வு நிச்சயம் சரியாக நடக்க வாய்ப்பில்லை’ என்று அந்தக் கூட்டத்தில் அவர் பேசியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து சி.பி.ஐக்கு ஓர் அவசரத் தகவல் வந்தது. உடனே கொழும்பு சென்ற சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவரும் சிபிஐ இயக்குநரும் டெல்லி திரும்ப வேண்டும் என்பதே அது.

இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் ராவின் பணியா? என்ன நடக்கிறது நமது உளவுத்துறையில்? ஒன்றும் புரியவில்லை.

இந்தியாவின் வெளிவிவகாரங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தீர்மானிப்பது ரா தான்.குறிப்பாக, ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த சமயம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வடிவமைத்ததிலும் அதனைச் செயல்படுத்த வலியுறுத்தி, அதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்ததும் அவர்கள்தாம்.

தொடக்கத்திலிருந்தே விடுதலைப் புலிகளைக் குறைத்து மதிப்பிட்டு வந்த அமைப்பு ரா.

குறிப்பாக அதன் தலைவர் பாஜ்பாய். இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Armyதான் சார்!

எழுபத்திரண்டு மணிநேரம் போதும். மொத்தமாகத் தீர்த்துவிடலாம்’ என்று சொன்னவர்தான் அவர்.

ஆனால் நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். எழுபத்திரண்டு மணி நேரமல்ல. 720 நாள்கள் போராடியும் தோற்றுத்தான் திரும்ப வேண்டியிருந்தது.

இதனால் நமக்கு எத்தனை இழப்பு, அவமானம், கஷ்டங்கள், கெட்ட பெயர்!

ஓர் உளவு அமைப்பு பொறுப்பாக இயங்கவில்லையென்றால் நாட்டை ஆள்பவர்களுக்கு எப்படிப்பட்ட பேரபாயங்கள் எல்லாம் வரும் என்பதற்கு, ஐ.பி.கே.எஃப் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நடந்த ராஜிவ் காந்தி படுகொலை வரை நீண்ட சம்பவங்கள் சிறந்த உதாரணம்.

கொலையைச் செய்தது விடுதலைப் புலிகள் அல்ல என்ற ரா தலைவரின் தடாலடிக் கணிப்புடன் ஒப்பிட்டால், ஐ.பி. தலைவர் எம்.கே. நாராயணன், ‘விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் சொல்லிவிடுகிறேன்’ என்று நழுவியதே தேவலாம் என்று தோன்றிவிடும்.

இந்த இரண்டு அமைப்புகளாலும் இந்த விஷயத்தில் இறுதிவரை சரியான தகவல்களைத் தர முடியவில்லை என்பதுதான் இங்கே குறிப்பிடவேண்டியது.

24.5.91 அன்றே ஹரி பாபுவின் படங்கள் எங்களுக்குக் கிடைத்து, நாங்கள் விடுதலைப் புலிகளை வட்டமிட்டுச் செயல்பட ஆரம்பித்துவிட்ட பிறகும் 30ம் தேதி அன்றுகூட ராவின் தலைவர் ‘விடுதலைப் புலிகள் அல்ல’ என்று அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

தொடரும்..

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கு ஒரு உயிரினம் என்பதையும், அது எப்படி இருக்கும் என்பதையும் அறிவீர்களா? வீடியோ
Next post விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்…!!