‘சாரதிகளே பார்த்துப் போங்க… எமன் படுத்து கிடக்கிறான்…!!
வடக்கில் இரத்த துர்நாற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் கழுவப்படும் நிலையில், அவற்றுக்கு இடம்கொடுக்காது மனித உயிர்களை வெடுக்கெனப் பறித்து, மனித இரத்தத்தை ருசித்து, மாமிசத்தைத் துண்டு, துண்டுகளாக்கி சதைகளைச் சப்பையாக்கி போர்வையாய் ஏ-9 வீதி போர்த்திக்கொள்கிறது.
வீதி விபத்துகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது, ஏ-9 வீதியில், வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 150ற்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் இடம்பெறுகின்றன. அதில், நாளாந்தம் 7 பேர் மரணிக்கின்றனர். 2016ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியிலிருந்து 15 நாட்களில் வடக்கில் இடம்பெற்ற கொடூரமான விபத்துகளில் 18 பேர் மரணித்துவிட்டனர். மிகவும் இளம் வயதுடைய 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, மரணங்களுக்கு வழி வகுப்பதாக இலங்கை வீதிகள் மாறியுள்ளன. 2015ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மாத்திரம் சுமார் 2,700க்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 300 பேருக்கும் அதிகமானோர் 2015ஆம் ஆண்டில் மரணித்துள்ளனர்.
இதன் அர்த்தம், சராசரியாக 7 பேர், நாளாந்தம் எமது வீதிகளில் மரணிக்கின்றனர். சராசரியாக 6 பேர் என்ற அளவிலிருந்த இந்தத் தொகையே கடந்தாண்டு மேற்குறிப்பிட்டளவுத் தொகையை எட்டியுள்ளது.
விசேடமாக ஏ-9 வீதியில் குறிப்பாக வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நாளில், நாளுக்கு நாள் இடம்பெறும் விபத்துகளைப் பார்க்கின்றபோது, சாரதிகளின் கவனயீனமாக இடம்பெறுகின்றதா? அல்லது அவ்வீதி குறித்த போதியளவான தெளிவு இன்மையால் இடம்பெறுகிறதா? என்று யோசிக்கவைத்துள்ளது.
இவ்வாறே, ஏ-9 வீதியில் கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணிப் பகுதியில் கடந்த 15ஆம் திகதி அதிகாலை 5.45க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
ஸ்தலத்திலேயே நால்வர் பலியானதுடன் மற்றுமொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்தக் கோர விபத்தில் மேலும் 10 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
வானும், தனியார் பஸ்ஸொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் சிக்குண்ட வான், வீதிக்குக் குறுக்காக நின்றதுடன், வானின் முன்பாதி அறுக்கப்பட்டதைப் போலவே காட்டியளித்தது.
ஏ-9 வீதியின் அவ்விடம் இரத்தக்கறைகளால் தோய்ந்திருந்தது. எனினும், விரைந்துசெயற்பட்ட பிரதேசவாசிகளும், பொலிஸாரும், இரத்தக்கறைகளுக்கு மண்ணைப் போட்டு மறைத்ததுடன், தம்மிடமிருந்த ஆடைகளைக் கொண்டு சடலங்களை மறைத்தனர்.
இந்த விபத்தின் போது, தனியார் பஸ், மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததாகவும், மின்னல் வேகத்தில் வந்த வானே, பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகப் பளைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறே, யாழிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மினி பஸ்ஸொன்றும், வன்னி – கொக்காவில் பகுதியில் கடந்த 7ஆம் மாதம் 24ஆம் திகதி, நேருக்கு நேர் மோதுண்டதில் இளம் தம்பதி பலியாகிய துயர சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
அவர்களின் ஒன்றரை வயதுக் குழந்தை காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் வீதி விபத்துகள் தற்போது அதிகரித்தவண்ணம் உள்ளன. கண்களை மூடிக்கொண்டு வாகனத்தை ஓட்டுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகின்றது.
அபிவிருத்தி எனும் பேரில் செப்பனிடப்பட்டு வரும் வீதிகளும் இதற்கு வழியமைத்துக் கொடுத்திருக்கின்றன. அவசரம் மற்றும் பண ஆசை போன்றன வீதி விபத்துகளால் மரணத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, பணம் உழைக்கும் ஆசையில் ஒருசில சாரதிகள் தூக்கம் விழிக்கும் வகையில் பல நாட்களுக்குத் தொடர்ந்து வாடகைக்குத் தமது வாகனத்தைச் செலுத்துகின்றனர். காலைப்பொழுதில், யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை கொழும்புக்கு அழைந்து வந்து விட்டு, அன்றைய இரவுப் பொழுதே, வேறு பயணிகளை அழைந்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்லும் வாகன சாரதிகளும் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து நித்திரை விழிப்பதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கத்துடன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், தூரப் பயணிக்கும் வாகன சாரதிகள், ஓய்வு எடுப்பதற்கான ஓய்வு அறைகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
கிட்டத்தட்ட 60 சதவீதமான ஆபத்தான விபத்துகள், ஒற்றை வாகனங்களாலேயே ஏற்படுகின்றன. கனரக வாகனங்கள் வேகமாகப் பயணித்து, பாதசாரிகள் கடவை அல்லது வேறொரு அசையாத பொருள் இருக்கும் இடத்தில் சடுதியாக நிறுத்தும் போது பொரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற அபாயகரமான விபத்துகளின் பகுப்பாய்வின் பிரகாரம், மோட்டார் சைக்கிள் விபத்துகள் பிரதான பங்கை வகிப்பதுடன், இதனால் சுமார் 1,035 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், முச்சக்கரவண்டி விபத்துகள் மூலம் 363 உயிரிழப்புக்களும் லொறி விபத்துகள் மூலம் 338 உயிரிழப்புக்களும், தனியார் பஸ் விபத்துகள் மூலம் 220 உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
விபத்துகள் மூலம் உயிரிழப்புக்கள் ஏற்படும் மாகாணங்களில் மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன்பிரகாரம், மேல் மாகாணத்தில் 750 உயிரிழப்புக்களும் வடமத்திய மாகாணத்தில் 404 உயிரிழப்புக்களும் தென் மாகாணத்தில் 332 உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளதாக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வாறான ஆபத்தான விபத்துகளுக்கு 23 சதவீதமான காரணம் சாரதிகளின் கவனயீனமே. சரியான சாரதிப்பயிற்சியைப் பெறாமல் தவறான முறையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றமையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
மோசமான முறையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்துகின்றமையால் 49 சதவீதமான விபத்துகளும் 14 சதவீதமான விபத்துகள் லொறி சாரதிகளினாலும், 11 சதவீதமான விபத்துகள் வான் சாரதிகளினாலும் ஏற்படுத்தப்படுகின்றன.
இதேபோன்று, மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாகவும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறும் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளமையும் விபத்துகள் அதிகம் இடம்பெறுவதற்கு ஒரு பிரதான காரணியாகும். ஏனெனில், குறித்த வீதிகளைச் சரியாகக் கையாளும் தன்மை நம் சாரதிகள் மத்தியில் இல்லையென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்துள்ள மதுபாவனையும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துளளது.
விபத்துகள் இடம்பெறுவதும் உயிர்கள் பறிபோவதுமான செய்திகளை வாசிப்பதோடு மாத்திரம் நின்றுவிடக்கூடாது. நம் வாழ்வில், நாம் அவற்றுக்கு முகங்கொடுக்காதிருப்பதற்கான
வழிகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவ்வழிகளைப் பின்பற்றுதலும் கட்டாயமாகும்.
வீதி விபத்துகள், பெரும்பாலும் அதிகாலை மற்றும் நள்ளிரவு வேளைகளிலேயே இடம்பெறுகின்றன. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனத்தைச் செலுத்துவதே இதற்கான பிரதான காரணமாகும்.
வேகமாக வாகனத்தை ஓட்டினால் அதனை நிறுத்த முடியாது. அதற்கான நேர இடைவெளி தேவை. ஒரு வாகனத்தை நிறுத்தும் தூரமானது அதன் வேகத்துக்கு ஏற்ப அதிகரிக்கின்றது. ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை திடீரென நிறுத்துவதற்குப் பிடிக்கும் தூரமானது நாம் நினைப்பதைப் பார்க்கிலும் அதிகமாகும். இதனைப் பின்வரும் வரைகலையில் காணலாம்…..
எனவே, இவற்றைக் கவனத்தில்கொள்ளுதல் சிறந்தது. வவுனியா, நொச்சுமோட்டைப் பிரதேசத்தில் சல்லிக்கல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்று, மரத்தில் மோதி வித்துக்குள்ளாகியது. வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கிப் பயணித்த குறித்த டிப்பர், முந்திச்செல்ல முற்பட்ட வாகனமொன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்ட வேளை, பள்ளத்துக்கு மேலாக அமைக்கப்பட்ட பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது அருகில் இருந்த மரத்தில் சாய்ந்தமையினால் ஆற்றுப்பள்ளத்தில் விழாது பெரும் விபத்து அண்மையில் தடுக்கப்பட்டது.
வீதிகளின் பெறுமதிகளை உணர்ந்திராத, சிறந்த வாகனமொன்றை, அதன் தரம் அறிந்து, கையாளத் தெரியாதவர்களாலேயே, பெரும்பாலும் வீதி விபத்துகள் ஏற்படுத்தப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட தகவலின்படி, இலங்கையின் வீதிகளில் 23,000க்கும் அதிகமான மக்கள், கொல்லப்பட்டுள்ளதுடன், 50,000க்கும் அதிகமான மக்கள் நீடித்திருக்கக்கூடிய கடுமையான உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். தேசிய சுகாதாரத்துக்கான செலவீனங்கள் அதிகரிப்பதற்கும் இதுவொரு காரணமாக அமைந்துள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு இதுவொரு பாரிய சிக்கலாகும்.
போக்குவரத்துத் தொடர்பான சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் அனேகர் அதனைக் கவனத்தில் எடுத்துப் பின்பற்ற முன்வருவதில்லை. சாதாரணமாகப் பாதசாரிக் கடவையில் உள்ள சமிக்ஞை விளக்கு எரிவதற்கு ஆகக் குறைந்தது 10 செக்கன்கள் பொறுமையாக நின்று பாதையைக் கடப்பதற்குக் கூடப் பலர் சிரமப்படுகின்றனர். இந்த அவசரத்தில் போனால் விபத்துக்கு முகங்கொடுக்க முடியாதிருக்க முடியுமா?
வீதிகளில் வாகனங்கள் பயணிக்கும் போது ஒவ்வொரு வாகனங்களுக்கிடையேயும் சாதாரணமாக மூன்று அடி இடைவேளி இருக்க வேண்டும் என்பது சட்டம். எனினும், இலங்கையின் பிரதான வீதிகளின் வாகனப் போக்குவரத்துகளில் இரண்டு வாகனங்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் அரை அடியேனும் இடைவேளியைக் காண்பது அரிதாகத்தான் உள்ளது.
வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான சட்டங்கள் என்னதான் கடுமையாக்கப்பட்டாலும், தனி நபர் ஒருவர், தானாகவே அதனை உணர்ந்து நடக்கும் போதுதான் விபத்துகள் குறைவடையும். அது குறித்த சரியான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். இயங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இயக்கம் தானாக நடக்கும்.
வாகனங்களின் சில்லுகளை கண்மூடித்தனமாக சுழல விடுவதனால், இதயங்களின் துடிப்புகள் அவ்விடத்திலேயே அறுத்தெடுக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின் நிதானமும், அவசரமின்மையும் மிகவும் இன்றியமையாததாகும்.
அத்துடன், எந்தப் பயணமும் தடுமாற்றம் இல்லாத பயணமாக இருக்க வேண்டும். மேலும், சக மனிதனை நேசிக்கின்ற, அடுத்தவரின் உயிருக்கு மதிப்புக் கொடுக்கின்ற மனிதநேயம் ஒவ்வொரு சாரதிகள் மத்தியிலும் எழ வேண்டும். அப்போதுதான் விபத்துகள் ஒழிக்கப்படும்.
ஏ-9 வீதியில் இடம்பெறும் விபத்துகளில் மரணித்தவர்கள் அப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலைமை நீடித்தால் வடக்கு சனத்தொகையின் விகிதாசாரம் இன்னும் சில வருடங்களில் கேள்விக்குறியாகிவிடும்.
இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது ‘தன் சட்டடைக்குத் தீப்பிடிக்கும்வரை இங்கே எவனுக்கும் சமுதாய அக்கறை இல்லை’ என்ற கவிவரிகள் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து மூளையை சுரண்டிக்கொண்டிருக்கின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating