மீரியபெத்தை சகோதரிகளின் போராட்டம் தொடர்கிறது…!!
பதுளை மாவட்டம் மீரியபெத்தை நிலச்சரிவு அனர்த்தத்தில் இழப்புகளை சந்தித்த சகோதரிகளின் நிரந்தர குடியிருப்பு உரிமைக்கான சத்தியாகிரக போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 6-வது நாளாக தொடர்கிறது.
பண்டாரவளை நகரின் மத்தியில் கடந்த திங்கள் கிழமை இந்த போராட்டத்தை ஆரம்பித்த சகோதரிகள் தற்போது அந்த இடத்தில் கறுப்புக் கொடிளை பறக்கவிட்டு அமர்ந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவு அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளான குடும்பங்கள், தற்போது அங்குள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் வேறொரு இடத்தில் இவர்களுக்கு என 75 நிரந்தர வீடுகள் இடர் முகாமைத்துவ அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் மாதம் 22-ம் திகதி, இவ் வீடுகள் கையளிக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது
பயனாளிகள் தெரிவில் தங்கள் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. பயனாளிகள் தெரிவில் அநீதி இழக்கப்பட்டுள்ளதாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 நாட்களாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், தங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அதிகாரிகளோ எவருமே வருகை தந்து தங்கள் பிரச்சினையை கேட்டறியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பயனாளிகள் தெரிவில் தங்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வேறு பெயர்கள் உள்வாங்கப்பட்டமை தொடர்பாக உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகோதரிகளில் ஒருவரான எஸ். கலைச்செல்வி இது தொடர்பாக பிபிசியிடம் பேசுகையில், தமது பெற்றோருக்குரிய வீட்டை மட்டுமே தர முடியும் என அதிகாரிகள் தற்போது கூறுவதாக தெரிவித்தார்.
தனக்குரிய வீட்டுக்கு என்ன நடந்தது என்பதை உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், மனித உரிமைகள் ஆணையகத்தினால் தனக்குரிய வீட்டு உரிமையை வழங்குமாறு பிரதேச செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அதனை கூட அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தின் போது, பெற்றோர் உட்பட மூன்று பேரை இழந்துள்ளதாக கூறும் இந்த சகோதரிகள் அனைத்து ஆவணங்களையும் இழந்துள்ள தங்களிடம் குடியிருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அதிகாரிகளை கோருவதாகவும் கூறுகின்றனர்.
2014-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்த நிலச்சரிவு அனர்த்தம் காரணமாக பெண்கள், குழந்தைகள் உட்பட 37 பேர் நிலத்தில் புதையுண்டு இறந்தும், காணாமலும் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை தொடர்பு கொள்ள முயன்ற போதிலும், வார விடுமுறை என்பதால் அவர்களின் தொடர்புகள் கிடைக்கவில்லை.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating