மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது: 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவு…!!
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.
தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து தகர்க்கும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அவர்கள் கட்டிடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி வந்தனர்.
இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த 11 மாடி கட்டிடத்தை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்து இருப்பதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.
கட்டிடத்தை தகர்க்க வெடி மருந்துகள் நிரப்புவதற்காக தரைதளம், 5-வது மாடி மற்றும் தரை தரைதளத்துக்கு கீழ்ப்பகுதியில் உள்ள மற்றொரு தளத்தில் உள்ள தூண்களில் துளை போடப்பட்டு உள்ளது. அந்த துளைகளில் வெடிமருந்துகள் நிரப்பும் பணி இன்று இரவோ அல்லது நாளை காலையோ நடைபெறும் என தெரிகிறது.
இந்த கட்டிடத்தை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளை சி.எம்.டி.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் மொத்தம் 124 வீடுகள், கடைகள் மற்றும் சிறு கம்பெனிகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. கட்டிடத்தை இடிக்கும் போது இந்த வீடுகளில் குடியிருப்பவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. இவர்கள் இன்று இரவோ அல்லது நாளை காலையோ வீட்டை காலி செய்து விட்டு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.
இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் மவுலிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் தங்கி கொள்ளவும், அதன் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாளை கட்டிடம் இடிக்கப்பட உள்ளதை அடுத்து உதவி கமிஷனர் பரந்தாமன் தலைமையில் போலீசார் நேற்று கட்டிடத்தை சுற்றிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்டிடம் இடிக்கப்படும் போது அதனை படம்பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும் வரும் பத்திரிகையாளர்களுக்காக ராஜராஜேஸ்வரி நகர் பின் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.
போலீசார் மற்றும் சி.எம்.டி.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கும், அவர்கள் அமர்ந்து பார்க்கவும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வி.ஐ.பி.க்கள் யாராவது வந்தால் தங்குவதற்கு கேரவன் ஒன்றும் கட்டிட வளாகத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
கட்டிடம் இடிக்கும் போது இந்த சாலையில் தடுப்புகள் அமைத்து தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி செல்லும் வாகனங்கள் மதனந்தபுரம் வழியாகவும், குன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் பாய்கடை வழியாக பட்டூர் கூட்டு சாலைக்கு சென்று மாற்றுப்பாதையில் போரூர் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாளை கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. ஆனால் எந்த நேரத்தில் தகர்க்கப்படும் என்று இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் முடிந்த பிறகு கட்டிடம் தகர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating