ஹிஸ்புல்லா கடும் போர்: இஸ்ரேல் வீரர்கள் 15 பேர் காயம்
லெபனானில் தென்பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே புதன்கிழமை கடும் போர் நிகழ்ந்தது. இதில் இஸ்ரேல் வீரர்கள் 15 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் ஹிஸ்புல்லா இயக்க தரப்பில் ஏற்பட்ட உயிர்சேதம் பற்றிய விவரம் தெரியவில்லை. லெபனானின் தென்பகுதியை ஹிஸ்புல்லா தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டுள்ளனர். லெபனான் நாட்டின் எல்லைக்குள் அப்பகுதி இருந்தபோதிலும், லெபனான் அரசின் கட்டுப்பாட்டில் அப்பகுதி இல்லை.
லெபனானின் தென்பகுதி இஸ்ரேல் எல்லைக்கு அருகே உள்ளது. எனவே அப்பகுதியில் பதுங்கியுள்ள ஹிஸ்புல் ், இஸ்ரேல் எல்லையோர நகரமான கிர்யத் சமோனா மீது ஏவுகணைகளை சரமாரியாக வீசி பெருத்த சேதத்தை விளைவித்து வருகின்றனர். மேலும் எல்லைப் பகுதியிலிருந்து இஸ்ரேல் வீரர்கள் இருவரை ஹிஸ்புல்லா கடத்திச் சென்று விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், லெபனானின் தென்பகுதி மீது விமானங்கள் மூலம் குண்டுகளைவீசி நாசப்படுத்தி வருகிறது. அத்துடன் ஹிஸ்புல்லாவாதிகளை அடியோடு ஒழிக்க தரைப்படையையும் இஸ்ரேல் களத்தில் இறக்கியுள்ளது.
எல்லையோர நகரமக்கள் கூண்டோடு வெளியேற்றம்
இதற்கிடையில் கிர்யத் சமோனா மீது ஹிஸ்புல்லாவாதிகளின் ஏவுகணை தாக்குதல் அதிகரித்து வருவதால் அந்நகரை காலி செய்ய இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லைப்பகுதிக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்நகரில் 24 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். இவர்களில் 15 ஆயிரம் பேர் ஏற்கெனவே இருப்பிடங்களை காலிசெய்துவிட்டு வேறிடங்களுக்கு சென்றுவிட்டனர்.
எஞ்சிய 9 ஆயிரம் பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுமாறு இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனினும் கட்டாயமாக வெளியேறுமாறு கோரவில்லை என்றும் அது கூறியுள்ளது.
1948-ல் இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து இதுவரை இத்தகைய நிலைமை ஏற்படவில்லை. ஒரு நகரையே காலிசெய்ய இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
போரை வழிநடத்த புது தளபதி
லெபனானுக்கு எதிரான போரை வழிநடத்த புது தளபதியை இஸ்ரேல் நியமித்துள்ளது. மேஜர் ஜெனரல் மோஷிகப்லின்ஸ்கி இப்பொறுப்பை ஏற்றுள்ளார். போரில் முப்படைகளையும் வெற்றிகரமாக வழிநடத்த இவருக்கு இஸ்ரேல் தலைமைத் தளபதி டான் ஹலூட்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் லெபனானுக்கு எதிராக தரைப்படை தாக்குதலை தொடர்வதா அல்லது கைவிட்டு விமானப்படை தாக்குதலை மட்டும் மேற்கொள்வதா என்பது குறித்து இஸ்ரேல் அமைச்சரவை விரைவில் முடிவெடுக்க உள்ளது.
வெற்றியா? தோல்வியா?: மாறுபட்ட கருத்து
லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் போரில் இதுவரை வெற்றி கிடைத்துள்ளதா, இல்லையா என்பது குறித்து மாறுபட்ட கருத்து நிலவிவருகிறது.
இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் 48 சதவீதம் பேர் எந்த வெற்றியும் கிடைத்ததாகத் தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இஸ்ரேலுக்கு வெற்றி கிடைத்துள்ளது என 28 சதவீதம் பேரும் ஹிஸ்புல்லாவுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது என 12 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.