பொலிஸ் நிலையங்கள், சிறைகளில் தொடரும் மர்ம மரணங்கள்…!!

Read Time:13 Minute, 22 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய வகையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார்.

புஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் இவர் தண்டப்பணத்தை செலுத்துவதற்கு மாற்றீடாக சமூக சேவைகளில் ஈடுபட சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் நீதிமன்றம் சமூக சேவைகளில் இவரை குறித்த மணித்தியாலங்கள் ஈடுபடுவதற்கு உத்தரவிட்டிருந்தது.

இருந்த போதிலும் இவர் நீதிமன்றின் உத்தரவுக்கமைய சமூக சேவையில் ஈடுபடாதிருந்தமையை அடுத்து இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை புஸல்லாவைப் பொலிஸார் இவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். சிறைக்கூடத்திலுள்ள கம்பியில் அவரது டீசேட்டினால் தூக்கிட்டு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பொலிஸாரின் இந்தக் கூற்றினை இளைஞனது உறவினர்கள் நம்பவில்லை. பொலிஸாரின் தாக்குதலினாலேயே குறித்த இளைஞன் பலியானதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்து புஸல்லாவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கண்டி-, நுவரெலியா வீதியை மறித்து போராட்டம் நடத்திய மக்கள் இளைஞனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரியிருந்தனர்.

சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பி. திகாம்பரம் மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை மாற்றுவதற்கான உறுதிமொழியை வழங்கியதை அடுத்து மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

தற்போது புஸல்லாவைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ நேரம் கடமையிலிருந்த பொலிஸார் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனையை அடுத்து அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இளைஞன் உயிரிழந்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனாலும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இளைஞன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமையானது பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பத்தக்க வகையிலேயே அமைந்திருக்கின்றது.

புஸல்லாவைப் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நான்கு அடி உயரமான சிறைக்கூட கம்பியில் அவர் டீசேட்டினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகவே தென்படுகின்றது.

மலையகத்தில் புஸல்லாவையில் நடைபெற்ற இந்த சம்பவத்தைப் போன்று தென்பகுதியில் பல பொலிஸ் நிலையங்களில் இவ்வாறான உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதேபோல் மாத்தறை சிறைச்சாலையில் கைதியொருவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பல பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் மர்மமான முறையில் கைதிகள் உயிரிழப்பதை இனியும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு எதிர்காலத்திலாவது இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.

பொலிஸாரினால் கைது செய்யப்படும் பல சந்தேக நபர்கள் விசாரணைக்காக அழைத்து சென்ற போது தப்பியோட முயன்றனர் அல்லது பொலிஸாரை தாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் முன்னைய காலங்களில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இத்தகைய சம்பவங்களையும் ஒருபோதும் இனிவரும் காலங்களில் அனுமதிக்க முடியாது.புஸல்லாவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன் என்ற இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலும் சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.

பொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டிலிருந்த இளைஞன் உயிரிழந்த சம்பவமானது பாரதூரமானதாகும். அதற்கு நாம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

தோட்டப்புற மக்களின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் பொலிஸாரே பொறுப்பாகும்.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு இதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தினேஷ் குணவர்த்தன எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது உயிரிழக்க முடியாது. அவ்வாறு உயிரிழந்தால் அதற்கு பொலிஸாரே பொறுப்புக்கூற வேண்டும்.

தோட்டப் புற மக்கள் இலங்கையில் வாழும் மிகவும் ஏழ்மையான மக்கள். இந்த இளைஞனுக்கு மட்டுமல்ல தோட்டப்புறத்திலுள்ள மக்கள் .அனைவருக்கும் உயிர் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினேஷ் குணவர்த்தன எம்.பி. பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், இளைஞன் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உரிய ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நபரொருவரை 30 நிமிடங்க ளுக்கு ஒருதடவை கண்காணித்து பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

புஸல்லாவைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த சம்பவத்தில் இந்த ஒழுங்கு விதிமுறை பின்பற்றப்படவில்லை.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் உள்ளிட்ட அதிகாரிகளினால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடமையில் இருந்த அதிகாரிகள் அதில் தவறிழைத்திருந்தாலோ அல்லது ஒழுக்கத்தை மீறி நடந்திருந்தாலோ உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாகல ரட்ணாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இதிலிருந்து புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியின் உயிரிழப்புக்கு பொலிஸாரே பொறுப் புக்கூற வேண்டும் என்ற விடயம் தெளிவாகியுள்ளது.

பொலிஸ் நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு என்ன வழி என்பது குறித்து அரசாங்கமானது ஆராயவேண்டியுள்ளது.

பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் சி.சி.டி.வி. கமராக்களை பொருத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் வசதிகள் குறித்து ஆராயுமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் சி.சி.டி.வி. கமராக்களை பொருத்துவதன் மூலம் எத்தகைய குற்றச் செயல்கள் இங்கு நடந்தாலும் அதனை கண்டுபிடிக்கக்கூடிய நிலை உருவாகும்.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுவதுடன் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.

அவ்வாறான தண்டனைகள் மூலமாகத்தான் இத்தகைய சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் பெண்ணை கடத்திய இளைஞரும் அதற்கு உதவிய தந்தையும் கைது…!!
Next post வீட்டுக்குள் புகுந்த பாரிய பாம்பினால் பதற்றம்…!!