கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள்…!!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கம் அல்லது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் தொடர்பாக, இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இரண்டு மூத்த அதிகாரிகளின் கருத்துக்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன.
ஒருவர், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன; இலங்கை இராணுவத்தின் அதிசிறப்பு படைப்பிரிவு எனக் கருதப்படும், 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இறுதிக்கட்டப் போரில் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி, இராணுவத்தின் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த செப்டெம்பர் ஐந்தாம் திகதி தான் ஓய்வு பெற்றார்.
“நந்திக்கடலுக்கான பாதை” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 780 பக்கங்களிலும், சிங்களத்தில் 870 பக்கங்களிலும் நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார் அவர்.
இன்னொருவர், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க. இறுதிக்கட்டப் போரின் போது, அதற்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் வலது கரமாக – இராணுவச் செயலராக இருந்தவர். இப்போது அவர் தான், யாழ். படைகளின் தலைமையகத் தளபதி. அதுமாத்திரமன்றி, அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கும் வாய்ப்புகளைப் பெறக்கூடியவர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்படுபவர்.
இவர்கள் இருவருமே, இராணுவத்தில் கிட்டத்தட்ட சமகாலத்தில் இணைந்து கொண்டவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் போரைத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, இறுதிக்கட்டப் போரின் நிறைவு வரையில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
இளநிலை அதிகாரிகளாக புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர்கள், பின்னர், கட்டளை அதிகாரிகளாக புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்றிருந்தார்கள்.
போரியல் ரீதியாக மாத்திரமன்றி, கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பலம், பலவீனம் ஆகியவற்றையும் நன்கு அறிந்திருந்தவர்கள் இவர்கள்.
ஆனாலும், புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிந்திய காலகட்டம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் புலிகள் இயக்கம் மீள உருவாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் முரண்பாடானவையாக இருப்பது முக்கியமான விடயமாகத் தெரிகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தனிநாட்டுக் கொள்கை தோற்கடிக்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலைகள் சரியாக கையாளப்படா விட்டால், மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம், வடக்கில் ஆரம்பிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனினும், பிரபாகரன் போன்று அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவர் கிடைத்தால் புலிகள் இயக்கம் மீளப் பலம் பெறலாம். ஆனாலும், புதிய தலைமைத்துவம் பிரபாகரனுக்கு நிகரானதாக உருவாகுவது சாத்தியமில்லை என்று கூறியிருந்தார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.
“டெய்லி பினான்சியல் ரைம்”சுக்கு அளித்திருந்த நீண்ட பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்றுடன், பலாலிப் படைத் தலைமையகத்தில் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது, புலிகள் இயக்கம் மீண்டும் தலையெடுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும், இந்த விடயத்தில் இராணுவம் மிகக் கவனமாக இருப்பதாகவும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்ட போது, அதனைப் புலிகளின் மீள் எழுச்சியாக காண்பிக்க தென்னிலங்கை சிங்களத் தீவிரவாத சக்திகள் முற்பட்டபோதும், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, விடுதலைப் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறச் சாத்தியமில்லை என்றே கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், சமகாலத்தில் இராணுவத்தின் உயர்மட்டப் பதவிகளில் இருந்த முக்கியமான அதிகாரிகள் இருவருக்கிடையில், இந்த விவகாரத்தில் உடன்பாடின்மை இருப்பது முக்கியமான ஒன்று.
புலிகள் இயக்கம் மீள உருவாக்கம் பெறுமா – இல்லையா என்று ஆராய்வது இந்தப் பத்தியின் நோக்கமன்று.
இந்த விடயத்தில் இலங்கை இராணுவத்தின் உயர் மட்டத்திலேயே ஒருமித்த கருத்து இல்லாமல் இருப்பது ஏன் என்பதுதான் இங்குள்ள முக்கியமான கேள்வி.
விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், அப்பொழுது இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தவரும், பின்னர் தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளராக இருந்தவரும், தற்போது, இந்தோனேசியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருப்பவருமான றொபேர்ட் ஓ பிளேக், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஓர் எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட்டு, நிலையான அமைதியும், நல்லிணக்கமும் ஏற்படுத்தப்படாவிட்டால், ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் மீண்டும் போர் ஒன்று ஏற்படலாம் என்பதே அவரது எச்சரிக்கையாகும்.
பல்வேறு நாடுகளில் தமக்கு இந்த விடயத்தில் அனுபவம் இருப்பதாகவும் றொபேர்ட் ஓ பிளேக் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டது போன்று, போர் முடிந்து ஐந்து ஆண்டுகளையும் தாண்டி, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.
இதுவரையில் இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவுமில்லை; அரசியல் தீர்வு காணப்படவுமில்லை; நிலையான அமைதி ஏற்படவுமில்லை; நல்லிணக்கம் உருவாகவுமில்லை.
அதேவேளை, அமெரிக்கா எச்சரித்தது போன்று போருக்கான அல்லது புலிகள் இயக்கம் மீள உருவெடுப்பதற்கான சூழல் உருவாகவுமில்லை.
அதற்காக எதிர்காலத்தில் இப்படியான சூழல் ஒன்று ஏற்படவே ஏற்படாது என்று அறுதியிட்டுக் கூறும் நிலையில் யாருமில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே புலிகளை இராணுவ ரீதியாகத் தான் தோற்கடிக்க முடிந்தது. அவர்களின் தனிநாட்டுக் கொள்கை இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அதனைத் தோற்கடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பலமுறை கூறிவிட்டார்.
இராணுவ ரீதியாகப் புலிகளின் மீள் உருவாக்கம் என்பது சாத்தியமா என்ற கேள்விகள் இருந்தாலும், சித்தாந்த ரீதியாக அத்தகைய வாய்ப்புகள் நிராகரிக்கப்படாத நிலையே காணப்படுகிறது.
ஏனென்றால், புலிகள் இயக்கத்துக்கு அப்பால், இலங்கையில் போருக்கான அடிப்படைக் காரணிகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. அண்மையில் ஸ்லோவேனியாவுக்குச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
போருக்கு அடிப்படையான காரணிகளைக் கண்டறிவதற்கு முடிந்துள்ள போதிலும், அந்தக் காரணிகளுக்குத் தீர்வு காண்பதற்கு முடியாத நிலையில் தான் இலங்கை அரசாங்கம் இன்னமும் இருக்கிறது.
இராணுவத்துக்குள் இருக்கும் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் இருவேறு நிலைகளில் இருந்தே இந்த விவகாரத்தைப் பார்க்கின்றனர்.
ஒன்று – தமது பாதுகாப்பு வல்லமையின் மீதான நம்பிக்கை.
இரண்டு – அரசியல் ரீதியான சூழ்நிலைகளைச் சமாளித்தல்.
தற்போதைய சூழ்நிலைகளைச் சரிவரக் கையாளாது போனால், மீண்டும் புலிகள் இயக்கம் மீண்டெழக் கூடும் என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கூறியிருப்பதற்கு அவரது அரசியல் நிலைப்பாடு ஒரு காரணம்.
இறுதிப்போரில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்ற வகையில், இராணுவத் தளபதியாகும் வாய்ப்புகள் இருந்தும், தற்போதைய அரசாங்கத்தினால் அந்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு, ஓய்வுபெற வேண்டிய நிலைக்கு உள்ளானவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.
தான் அரசியல் சார்பற்றவர் என்று கூறியிருந்தாலும், “நந்திக்கடலுக்கான பாதை” வெளியீட்டு விழாவுக்கு அவர் மஹிந்த ராஜபக்ஷவையும் கோத்தாபய ராஜபக்ஷவையும் மட்டுமே அழைத்திருந்தாரே தவிர, தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரையுமே அழைத்திருக்கவில்லை. எனவே, அரசியல் நோக்கில் தற்போதைய அரசாங்கத்தைக் குறைகூறுவதற்கான வாய்ப்பாக, இதனை அவர் பயன்படுத்தியிருக்கலாம்.
மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைப் பொறுத்தவரையில், முன்னைய அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டு, நாட்டை விட்டே விரட்டப்பட்டவர். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே நாடு திரும்பி, மீண்டும் இராணுவ சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே யாழ். படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்ட அவர், அரசியல் நிலையில் இருந்து இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை, அவருக்கு தாம் உருவாக்கியுள்ள பாதுகாப்பு வலையமைப்பின் மீது அதீத நம்பிக்கை இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த நம்பிக்கை மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு இல்லாமல் இருக்கும் என்று கூறு முடியாது. என்றாலும், அரசியல் ரீதியாக அவர் தற்போதைய நல்லிணக்க நடவடிக்கைகளை விரும்புபவராகத் தெரியவில்லை.
இது இந்த இரண்டு தளபதிகளின் கருத்துக்களில் காணப்படும் முரண்பாடுகளுக்கு முக்கியமான காரணமாக இருக்கக் கூடும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating