வதைக்கும் மூட்டுவலியை விரட்ட..!!
மூட்டுவலி… இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை யாருக்கும் ஏற்படலாம். கடந்த சில ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது இளம் வயதினரை அதிகளவில் வதைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், கணினி வாழ்க்கை முறை’’
மூட்டுவலி… ஏன்?
‘‘மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படக்கூடிய பிரச்னை என்பதில்லை. மிக அதிக வேலை, அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினருக்கும் வரக்கூடும். பொதுவாக, 45 வயதைக் கடந்தவர்களுக்கு மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைவதால், மூட்டுவலி ஏற்படலாம். மெனோ பாஸ் கட்டத்தைத் தாண்டிய பெண்களுக்கும் 40 ப்ளஸ் வயதில் இந்தப் பிரச்னை வர அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர் 8 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதையும், விளையாட்டுத் துறை யில் உள்ளவர்கள் மூட்டுகளுக்கு அதிக இயக்கம் கொடுப்பதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த இரண்டு வகையினரும் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடல் அசையாமல் இருப்பது, மாடுபோல் உழைப்பது… இரண்டுமே மூட்டுவலியை விரைவாகப் பரிசளிக்கும்.
சத்தான உணவும் போதிய உடற்பயிற்சியும் இல்லாமல் இருக்கும் வாழ்க்கைமுறையும் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணமாகிறது. தவிர, டி.பி, சர்க்கரை நோய், சொரியாசிஸ் பாதிப்பு, உடல்பருமன், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு கொண்டவர்களும் மூட்டுவலிக்கு எளிதில் இலக்காவார்கள். சிலர், கால்களில் ஏற்படும் புண்களைச் சரிவர கவனிக்காமல்விட்டு செப்டிக் ஆகும் நிலையிலும், அப்பகுதியில் உள்ள மூட்டு பாதிக்கப்படலாம்.
இளம் தலைமுறையினருக்கும்..!
கடந்த சில வருடங்களாக 15, 16 வயதில் இருந்தே கழுத்து, இடுப்பு, மூழங்கால் மூட்டு என இளம் பருவத்தினர் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. புத்தகப் பை சுமப்பது தொடங்கி, மணிக்கணக்கில் வீடியோ கேம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என கணினியில் நிமிர்ந்தே கிடப்பது மற்றும் மொபைலில் கவிழ்ந்தே கிடப்பது போன்றவை இதற்கு காரணங்களாகும்.
குழந்தைகள் கை, கால் வலிக்கிறது என்றால், முழுமையான ஓய்வு கொடுக்கவும். ஆனால், தொடர்ந்து வலி இருப்பதாகச் சொன்னால், மருத்துவரிடம் செல்லவேண்டியது அவசியம். வயதான பின் நோய் வந்தால், சிகிச்சைகள், மருந்துகள், ஓய்வு என்று கழிக்கலாம். இளம்வயதிலேயே மூட்டுகளை எல்லாம் தேயவிட்டால், ஓட வேண்டிய வாழ்க்கை தூரத்தைக் கடப்பது மிகச் சிரமமாகிவிடும்… ஜாக்கிரதை. 18 வயதைக் கடந்தவர்கள் கால்சியம் சத்து மிகுந்த கீரை, பால், முட்டை, மீன் போன்றவற்றை மாற்றி மாற்றி தினசரி உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பரிசோதனைகள், சிகிச்சைகள்!
மூட்டுவலியைப் பொறுத்தவரையில் எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் எளிமையாக குணப்படுத்திவிட முடியும். இதற்கான பரிசோதனை என்பது, வலிக்கும் இடத்தில் மருத்துவர் அழுத்திப் பார்ப்பது, மடக்கச் சொல்லிப் பார்ப்பது, நடக்கச் சொல்லிப் பார்ப்பதில் இருந்து, எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் வரை செய்யப்படும். ஆரம்ப நிலை மூட்டுவலிக்கு சில உடற் பயிற்சிகளும், வாழ்க்கை முறை மாற்ற ஆலோசனைகளும், உணவு முறைப் பரிந்துரைகளும் வழங்கப்படும். மாத்திரை, மருந்து… நோயின் தேவையைப் பொறுத்து தவிர்க்க முடியாதது. அதிகமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
அறுவை சிகிச்சை… செலவு என்ன?
மூட்டுத் தேய்மானத்தால் எலும்பு கோணலா வதில் தொடங்கி, இன்னும் பல பாதிப்புகளோடு இயக்கம் குறைந்து, சரிபடுத்தக்கூடிய கட்டத்தைக் கடந்துவிட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அதற்கு முன்பாக, அதைத் தாங்கும் தகுதி சம்பந்தப்பட்டவர் உடலுக்கு இருக்கிறதா என்பதும் பரிசீலிக்கப்படும். இல்லை எனில், அறுவை சிகிச்சை அவருக்கு மேலும் பிரச்னைகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம்வரை செலவாகக்கூடிய இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
மொத்தத்தில், மிக அதிக வேலை, உடல் இயக்கம் இல்லாத மிகக் குறைந்த வேலை… இவற்றுக்கு குட்பை சொல்வோம். சத்தான உணவுக்கும் மிதமான உடற்பயிற்சிக்கும் வெல்கம் சொல்வோம். இந்த எளிய ஃபார் முலா மூட்டுவலியை விரட்டும் என்றால், சந்தோஷமாக ஃபாலோ செய்யலாம்தானே?!
Average Rating