சுவாதி கொலை வழக்கு:தற்கொலை செய்துகொண்ட ‘ராம்குமாரின் கையில் சிராய்ப்பு..!!
சுவாதி கொலை வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும் அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வந்தது. அதற்கு அடுத்த சில நிமிடங்களில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
‘‘ராம்குமாரைக் கொண்டுவந்தபோது நீங்கள் பார்த்தீர்களா?’’
“பார்த்தேன். 4.45 மணிக்கு தற்கொலை செய்துகொண்டதாக ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் நவீன் சொன்னார். வரும் வழியில் துடிப்பு இருந்து என்றும், பாதி வழியில்தான் உயிரிழந்தார் என்றும் அவர், என்னிடம் தெரிவித்தார். அதனால், நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை. பின்னர், ரிஜிஸ்டரில் 5.45 மணி என பதிவுசெய்துவிட்டு மார்சுவரிக்கு அனுப்பிவைத்தோம். அப்படிப் பார்க்கும்போது ராம்குமார் 5 மணிக்கு உயிரிழந்திருக்கலாம். ராம்குமாரின் உடலைப் பார்த்தபோது அவரது இடது தோள்பட்டையில் சிராய்ப்பு இருந்தது. வாயிலும் காயம் இருந்தது.’’
‘‘ஒயரை கடித்து உயிரிழந்தவருக்கு, எப்படிக் காயம் வந்தது?’’
‘‘ஒயர், எங்கெல்லாம்படுகிறதோ அங்கெல்லாம் காயம் ஏற்படும்.’’
‘‘கரன்ட்ஷாக்கில் இறந்ததற்கான அடையாளம் இருக்கிறதா?’’
‘‘அவ்வாறுதான் தெரிகிறது. எப்படி இருந்தாலும் உடற்கூறு ஆய்வறிக்கை வந்தால் மட்டுமே எதையும் சொல்ல முடியும்.’’
சுவாதி கொலை வழக்கில் போலீஸாரால் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில், சுவாதியின் நண்பர் என்று கூறப்பட்டுத் தீவிர விசாரணை வளையத்துக்குள்போன முகமது பிலால் சித்திக்கிடம் ராம்குமாரின் தற்கொலை குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
‘‘ராம்குமார் உயிரிழந்திருப்பது குறித்து?’’
‘‘சிறைத்துறை கவனமாக இருந்திருக்க வேண்டும். காவல் துறை சரியான நிலையில் இந்த வழக்கைக் கொண்டு சென்றார்கள். ஆனால், அது கவனமில்லாமல் நடந்துகொண்டதே ராம்குமார் தற்கொலைக்குக் காரணம். இதனால், இது மீண்டும் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.’’
‘‘ராம்குமார் தற்கொலையால் உங்களுக்கு நெருக்கடி உள்ளதா?’’
‘‘எந்த பிரச்னையும் இல்லை. இந்த வழக்கு முடியும்வரை காவல் துறையின் தொடர்பில் இருக்க வேண்டும். விட்னஸ் ஒன்றை கொடுத்துள்ளோம். இருப்பினும், விசாரணை மீண்டும் ஆரம்பிக்கும் என்ற கவலை இருக்கிறது. இந்த வழக்கில் முதலில் இருந்து எப்படிச் செயல்பட்டேனோ அவ்வாறே மீண்டும் செயல்படுவேன். ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.’’
‘‘ ‘உங்களுடைய தோழியைக் கொன்றவர்’ என்று கூறப்பட்டவர், ‘தற்கொலை செய்துகொண்டார்.’ அதை, நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
ராம்குமார் செய்தது தவறு. அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். கடைசியில் இப்படி நடந்துவிட்டது. விசாரணையைப் பொறுத்தே இனி என்ன நடக்கும் என்பது தெரியும்.’’
‘‘இது, சரியானா தண்டனையா?’’
‘‘தற்கொலை சரியான தண்டனை இல்லை. அவருக்குள் குற்ற உணர்ச்சி இருந்திருக்கலாம். அதனால், அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.’’
‘‘இது, தற்கொலை அல்ல… கொலை என்று கூறுகிறார்களே?’’
‘‘அதுகுறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. விசாரணையின் முடிவில்தான் தெரியும்.’’
‘‘சி.பி.ஐ. விசாரணை நடத்துவது நல்லது!’’
இந்த வழக்கில் முகமது பிலால் சித்திக்கை விசாரணைக்கு அழைத்தபோது ஆரம்பத்தில் இருந்து அவருக்கு உதவியாக இருந்தவர், அவருடைய சித்தப்பா அப்சர் பாஷா. அவரிடம் பேசினோம். ‘‘ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் பிடித்தாக போலீஸார் சொன்னார்கள். தற்போது தற்கொலையிலேயே முடிந்துள்ளது. சிறையில் அவருடன் 6 பேர் இருந்ததாகக் கூறுகிறார்கள். தீவிரமாகக் கண்காணித்து வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இது எப்படி நடந்தது என்றுதான் தெரியவில்லை.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாகக் காவல் துறை கூறியிருந்தது. இதற்கிடையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த வழக்கில் குழப்பங்கள் தீரவேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணை நடத்துவது நல்லது. அதேபோன்று சுவாதியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்த வேண்டும். அதேபோன்று, ராம்குமார்தான் குற்றவாளி என்று காவல் துறை உறுதி செய்திருந்தால் குற்றப்பத்திரிகையை காவல் துறை விரைந்து தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமாரைப் பார்த்ததாகக் கூறுகிறார். அப்படியே ஏதாவது பிரச்னை என்றாலும் அவர் உடனடியாக மீடியாவிடம் கூறிவிடுவார். மிருகத்தனமாக ஒரு பெண்ணை கொலை செய்ததாகக் கூறப்படும் ஒருவர் தற்கொலை செய்துகொள்வாரா? இந்த வழக்கு, மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திரும்பவும் என் மகனை, இந்த வழக்கு விசாரணைக்குள் கொண்டு செல்வார்கள்.’’
Average Rating