கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை திறந்து படித்தாரா வைகோ..!!
திமுக தலைவர் கருணாநிதிக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் திகதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்திய இராணுவம் அனுப்பிய ஐபிகேஎப் குழு அங்கு அநீதியைக் கட்டவிழ்த்துவிட்டதாக அக்கடிதத்தில் பிரபாகரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த கடிதத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் வைகோ கூறியபோது, ‘‘இலங்கை வனப்பகுதியில் பிரபாகரனை சந்தித்தபோது, அவர் என்னிடம் இந்த கடிதத்தை கொடுத்தார். அதில் இருந்து ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் அதை கருணாநிதியிடம் கொடுத்தேன்.
ஆனால், அந்த கடிதத்தை அழித்துவிட்டதாக கருணாநிதி பின்னாளில் என்னிடம் கூறினார். அதன் பிரதி ஒன்றை இன்றளவும் நான் பாதுகாத்து வைத்துள்ளேன். அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே அதை இப்போது வெளியிடுகிறேன்’’ என்றார்.
அந்த கடிதத்தின் விவரங்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியாகி இருந்தன. இதைத் தொடர்ந்து, ‘தி இந்து’ இணையதள பக்கத்தில் ராஜன் கிட்டப்பா என்ற வாசகர் பின்னூட்ட கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
‘தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தை, அதை சுமந்து சென்றவர் (வைகோ) பிரித்து படித்திருக்கிறார். அதோடு, அதை பிரதியெடுத்து 28 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருக்கிறார். வைகோவின் நேர்மை சந்தேகத்துக்கு இடமாகிறது’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது இதற்கு வைகோ பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:
கருணாநிதிக்கு பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை. பிரபாகரனை நான் சந்தித்தபோது, கருணாநிதிக்கு ஒரு கடிதம் தருவதாக கூறி, அன்று இரவே எழுதி முடித்தார். திடீரென நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால் எங்கள் உடைமைகள் அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு வேறு இடத்துக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.
பாதுகாப்பு கருதி என்னை உடனடியாக தமிழகத்துக்கு அனுப்பினார்கள்.
இந்நிலையில், சில நாட்களுக்கு பிறகு சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசை என்னை சந்தித்தார். அப்போதுதான் கருணாநிதிக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தின் ஒரு நகலை எனக்கும், மற்றொரு நகலை கருணாநிதியிடம் கொடுத்துவிடுமாறும் கூறினார்.
எனக்கு கொடுத்த நகலைதான் நான் படித்தேன். கருணாநிதிக்கு கொடுத்த கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை, இவ்வாறு வைகோ கூறினார்.
Average Rating