சதுரம் 2….!!
நடிகை சனம் ஷெட்டி
இயக்குனர் சுமந்த்
இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஓளிப்பதிவு சதிஷ் ஜி
விமர்சிக்க விருப்பமா?
தொழிலில் நேர்மையாக இருக்கும் டாக்டர் தன்னுடைய குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார். அவரும், பணத்துக்காக பெரிய கோடீஸ்வரர்களின் அந்தரங்க வாழ்க்கையை படம்பிடித்துக் கொடுக்கும் போட்டோ கிராபர் ஒருவரும் சதுரமான அறையில் ஒரு காலில் சங்கிலியுடன் எதிரெதிர் மூலையில் கட்டப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் இருவருடைய பேண்ட் பாக்கெட்டிலும் அவர்கள் பெயர் போடப்பட்ட ஆடியோ கேசட் ஒன்று உள்ளது. அதில் இருவருக்கும் ஒரு தகவல் இருக்கிறது. அவர்கள் அங்கிருந்து தப்பிப்பதற்கு அந்த அறைக்குள்ளேயே அவர்களுக்கு சில அடையாள குறிப்புகள் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு மாலை 6 மணி வரை காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவார்கள் என்று தகவல் இருக்கிறது.
இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக இவர்கள் அங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்களை யார் அடைத்து வைத்துள்ளார்? என்பதே மீதிக்கதை.
ஆங்கிலத்தில் வெளிவந்த ‘Saw’ என்ற படத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார் சுமந்த் ராதாகிருஷ்ணன். அந்த படத்தில் வித்தியாசமாக கொலை செய்யும் காட்சிகளை கொடூரமாக காட்டியிருப்பார்கள். ஆனால், இதில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அளவான, ரொம்பவும் கொடூரமான காட்சிகள் இல்லாமல் திரில்லராக கொடுத்திருப்பது சிறப்பு.
படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஒரு பூட்டிய அறைக்குள்ளேயே நடக்கிறது. மற்ற சில காட்சிகள் அங்கும் இங்குமாக விரிகிறது. ஆரம்பத்தில் அமைதியான கணவராக வரும் பிரகதீஷ் கௌசிக், கடைசியில் கொடூரமானவராக மாறும் விதம் அருமை. சங்கிலியில் பிணைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், யோக் ஜேப்பி, ரியாஸ் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நாம் இறந்துவிடுவோமோ என்ற பயத்தினால் இவர்கள் நடுங்கும் காட்சி நம்மையும் நடுங்க வைக்கிறது.
சனம் ஷெட்டி ஒரு சில காட்சிகளே வந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். யோக் ஜேப்பியின் மனைவியாக நடித்திருப்பவருக்கு நிறைய காட்சிகள் அழுது வடிகிற மாதிரியான காட்சிகள்தான். அதற்கு ஏற்ப இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சுஜா வருணி நிறைமாத கர்ப்பிணியாக வருகிறார். அவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவும், எதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக திரில்லர் காட்சிகள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசியில், யோக் ஜேப்பி தனது காலை வெட்டிக் கொள்ளும் காட்சியில்கூட பெரிய அளவில் பயம் இல்லாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய தொய்வுதான்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் ஒரேயொரு பாடல்தான். படத்தின் டைட்டில் கார்டு போடும்போது வரும் பாடல் ரசிக்க வைக்கிறது. அதற்கேற்றாற்போல் அதில் கார்ட்டூன்களாக காட்சிகள் விரிவதும் அருமை. சதீஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘சதுரம் 2’ மிரட்டல்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating