கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜெயவர்த்தனேயின் சதத்தால் இலங்கை மீண்டும் வெற்றி
பிரின்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரின், முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 153 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது.
இதன் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 361 ரன்னும், இலங்கை அணி 321 ரன்னும் எடுத்து ஆல்-அவுட் ஆகின. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 311 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ஜெயவர்த்தனே 77 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ஜெயவர்த்தனே 27 ரன்னுடனும் அவுட் ஆகாமல் ஆடிக்கொண்டு இருந்தனர்.
வெற்றிக்கு மேலும் 90 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஸ்கோர் 279 ஆக உயர்ந்த நிலையில் விக்கெட் கீப்பர் ஜெயவர்த்தனே 30 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஜெயவர்த்தனேயுடன், மகரூப் இணைந்து நம்பிக்கைïட்டும் விதத்தில் ஆடினார். மறுமுனையில் ஜெயவர்த்தனே கேப்டனுக்கு உரிய பாணியில் பொறுப்புடன் ஆடினார். கிடைத்த நல்ல பந்துகளை அவர் அடித்தும் ஆடினார். இதன் பயனாக அவர் சதம் அடித்தார். 187 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த சதத்தை அடித்தார்.
ஜெயவர்த்தனே-மகரூப் ஜோடியின் நிலையான ஆட்டத்தால் இலங்கை அணி வெற்றி இலக்கை நோக்கி பயணித்தது. ஸ்கோர் 341 ஆக உயர்ந்த நிலையில் 123 ரன்னுடன் ஆடிக் கொண்டிருந்த ஜெயவர்த்தனே, போஜே பந்தில் கிப்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஜெயவர்த்தனேயின் வெளியேற்றத்தை தொடர்ந்து இலங்கை அணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. வெற்றிக்கு மேலும் 11 ரன்களே தேவை என்றாலும், பின்னர் வந்த வாஸ் 4 ரன்னிலும், முரளீதரன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கையின் வெற்றி கேள்விக்குறியானது. எனினும் முடிவில் இலங்கை அணி 113.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகரூப் 29 ரன்னுடனும் (118 பந்துகளில் 2 பவுண்டரி), மலிங்கா ஒரு ரன்னுடனும் அவுட் ஆகாமல் ஆடிக் கொண்டு இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் போஜே 4 விக்கெட்டுகளையும், ஹால் 3 விக்கெட்டுகளையும், நிதினி, பொல்லாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இலங்கை அணி முதல் டெஸ்டில் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்தது. தற்போது 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதன் மூலம், 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஜெயவர்த்தனேவுக்கும், தொடர்நாயகன் விருது முரளீதரனுக்கும் வழங்கப்பட்டது.