கர்நாடகத்தை கண்டித்து சிவகங்கை-விருதுநகர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்…!!
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன.
சிவகங்கை பஸ் நிலையம், மக்கள் கூடும் இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தன.
காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், காளையார்கோவில், இளையான்குடி ஆகிய பகுதிகளிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்களும், மறியல்களும் நடைபெற்றன.
விருதுநகரில் கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு குறைந்த அளவே காணப்பட்டன. பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அரசு பள்ளிகளுக்கும் மாணவர்களின் வருகை குறைந்த அளவே இருந்தன.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்புக்கு ஆதரவுகள் இருந்தன. இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு இருந்தன. ராமநாதபுரம் அரண்மனை, பஸ் நிலையம், கீழக்கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சில தனியார் பள்ளிகள் இயங்கின. அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்ட நிலையில் கூட்டம் குறைந்தளவே காணப்பட்டது.
ராமேசுவரத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. கோவிலை சுற்றியுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவை கண்டித்து ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பரமக்குடி, கமுதி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
மதுரையில் இன்று காலை அரசு பஸ்கள், ஒரு சில ஆட்டோக்கள் இயங்கின. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
தனியார் பஸ்கள் இயங்காததால் மதுரை பஸ் நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் அருகேயுள்ள ஒரு சில டீக்கடைகளும், டிபன் சென்டர்களும் இயங்கின. ஆனால் ஓட்டல்கள், பெரிய கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன.
இதேபோல மதுரை சென்ட்ரல் மார்க்கெட், பரவை மார்க்கெட்கள் முடுப்பட்டன. இவ்விரண்டு மார்க்கெட்டுகளும் இயங்காததால் இன்று ஒரு நாள் மட்டும் வர்த்தகம் சுமார் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
இன்று முழு அடைப்பையொட்டி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர்.
மதுரையில் இருந்து நாள்தோறும் 2,600 லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஈடுபடுவதால் லாரிகளும் ஓடவில்லை.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating