காவிரி பிரச்சினை கலவரத்தின் சில ஆறுதல்கள்…!!
கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் இருந்து கவலையளிக்கும் செய்திகளே வந்துக் கொண்டிருக்க ஒரு சிலத் தகவல்கள் குறைந்தபட்ச ஆறுதலை அளிக்கின்றன. காவிரியை மையமாக வைத்து தொடர்ந்து பெங்களூருவில் பல ஆண்டு காலமாக கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்போது காவிரி பிரச்னையை வைத்து கலவரத்தில் ஈடுபடலாம் என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் நகரம் பற்றி எரிந்த சமயத்தில் ஒரு சிலர் ஓடி ஓடி இனம் , மதம் , மொழிகளை கடந்த உதவி செய்வதற்காக பம்பரமாக சுற்றி திரிந்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரீத்து சிங். சாஃப்ட்வேர் என்ஜீனியர். இவரது மனைவி ரேஷ்மி. வழக்கமாக ரேஷ்மி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப அரை மணி நேரம்தான் ஆகும். கலவரம் நடந்த திங்கள்கிழமையன்று ரேஷ்மி வீடு திரும்ப இரண்டு மணி நேரம் ஆகியுள்ளது. வழியெங்கும் தீக்கிரையாக்கிக் கிடக்கும் லாரிகள், உடைத்து நொறுக்கப்பட்ட கார்கள், தடியடி ஆகியவற்றைக் கடந்தே ரேஷ்மி வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய ரேஷ்மி கண்ணில் கண்டவற்றை மக்கள் பட்ட அல்லல்களை கணவர் ரீத்துவிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார்.
இதனால் மனம் வெதும்பிய ரீத்து சிங், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”பெங்களூருவில் யார் எங்கே இருந்தாலும் வீடு திரும்ப முடியாமல் போனாலும் எனது வீட்டுக்கு வந்துவிடுங்கள். எனது வீடு உங்களுக்கு பாதுகாப்பளிக்கும் என வீட்டு விலாசத்துடன் ‘#WinBackbengaluru என ஹேஸ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். அந்த ஃபேஸ்புக் பதிவு பல ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டது. அதே வேளையில், ரீத்து சிங்கிற்கு எந்த மிரட்டலும் வரவில்லை. இது குறித்து ரீத்துசிங் கூறுகையில், ” எனது மனைவி கண்ணில் கண்டவற்றை என்னிடம் சொன்ன போது, மனம் பதைபதைத்தது. யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய நாஙகள் தயராக இருந்தோம் ” என்கிறார்.
கனகசபாபதி என்ற துணிக்கடை வியாபாரி தனது காரில் அவசரத்திற்கு மூத்த குடிமக்களுக்கும் உதவத் தயார் என போஸ்டரை ஒட்டி கலவரத்தினங்களில் பெங்களூரு நகரம் முழுவதும் சுற்றியுள்ளார். கலவரத்தின் போது தனது அனுபவங்கள் குறித்து கனகசபாபதி கூறுகையில், ” கடந்த 3 கர்நாடக பந்த்தின் போது, என்னால் முடிந்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறேன். இதுவரை 60க்கும் மேற்பட்டவர்களை அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளேன். இந்த கலவரத்தின் போதும் வொயிட்ஃபீல்ட் பகுதியில் நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
மற்றொருவரை ஜெயாநகர் இதய நோய் மையத்தில் கொண்டு சேர்த்தேன். மேலும் இரு நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு கொண்டு போய் விட்டேன். கலவரத்தின் போது என்னால் வீட்டில் அடைந்து கிடந்து விட முடியாது. ஒவ்வெரு கலவரத்தின் போதும் மக்கள் அடையும் துயரங்களை பார்க்கிறோன். அதனால், காரை எடுத்துக் கொண்டு கலவரப் பகுதிகளுக்கு போய் விடுவேன். எனது மனைவியும் குழந்தைகளும் கூட என்னைத் தடுப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கும் இதில் சந்தோஷம் ” என்றார்.
லோகித் நஞ்சுண்ட ஷெட்டி என்பவரும் அவரது நண்பர்களும் எரிக்கப்பட்ட லாரிகளின் ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்துள்ளனர். மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வட பெங்களூருவில் வீடு திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு டாக்டர். ஹேமந்த்குமார் என்பவர் பாதுகாப்பளித்து உணவு வழங்கியுள்ளார். கலவரத்தின் போது ஹேமந்த்குமாருக்கு 40 முதல் 50 அழைப்புகள் வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை தமிழ் குடும்பங்களில் உதவி கோரி வந்த அழைப்புகள். பெரும்பாலானத் தமிழ்ர்கள் கலவரத்தின் போது வீட்டை வெளியே வர முடியாத நிலையில், நகரின் மற்றப் பகுதிகளில் தவித்த தங்கள் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து உதவி புரியுமாறு ஹேமந்த்குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹேமந்த்குமாரும் பலத் தமிழர்களை பாதுகாப்புடன் மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்பெண் ஒருவர் ஹேமந்த் குமாருக்கு போன் செய்து, ”தனது கணவர் புறநகர் பகுதியான மார்த்தஹல்லியில் தவிப்பதாகவும் அவர் வீட்டுக்கு வர உதவுமாறும் வேண்டியுள்ளார். ஹேமந்த்குமாரும் அவரது நண்பர்களும் அந்த அந்த பெண்ணிண் கணவரைக் கண்டுபிடித்து வீடு திரும்ப உதவியுள்ளனர். கடைகள் மூடப்பட்ட நிலையில், பலத் தமிழ் குடும்பங்களுக்கு கன்னட நண்பர்களே உணவு அளித்து வந்துள்ளனர்.
இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக தமிழகத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து ஒரு குடும்பத்தினர், தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர். கன்னியாகுமாரி பெங்களூரு சாலையில் திண்டுக்கல்லில் அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது. அந்த பகுதியில் இருந்த மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடி வந்தனர்.
காரில் இருந்தவர்களுக்கோ ஒரே பயம். கன்னடர்கள் என்றால் தாக்குவார்களோ என்ற பீதியுடன் இருந்துள்ளனர். ஆனால், அங்கே வந்த தமிழர்கள் அந்த கன்னட குடும்பத்தினரை தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறிதோடு சுற்றி நின்று பாதுகாப்பளித்து தேவையான உதவிகளையும் செய்துள்ளனர். பின்னர் போலீசார் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால், நெகிழ்ந்து போன அந்த குடும்பத்தினர் அங்கிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating