சேலத்தில் மகன் கொலை- தந்தை மர்மச்சாவு: இன்று நடைபெற இருந்த இளம்பெண் திருமணம் நிறுத்தம்…!!
சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சல தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சக்திவேல் (வயது 21). வெள்ளி பட்டறை தொழிலாளி.
கடந்த 11-ந்தேதி அன்னதானப்பட்டி பகுதியில் சக்திவேல் நின்ற போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்றது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மாலை சக்திவேல் ஓமலூர் அருகே சிக்கம்பட்டி நரிப்பள்ளம் என்ற இடத்தில் பெங்களூர் பைபாஸ் சாலையோரம் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் கொலையாளிகளை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம் என்று கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் சக்திவேலின் உடலை வாங்கி சென்று இறுதி சடங்கு செய்தனர்.
இதற்கிடையே மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின பேரில் டவுன் உதவி கமிஷனர் ரவீந்திரன், அன்னதானப்பட்டடி இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் சக்திவேல் முன் விரோதம் மற்றும் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவரை கொலை செய்ததில் செவ்வாய்பேட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் தேடிய போது 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து சங்கரின் கூட்டாளிகள் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மகன் இறந்ததால் அவரது தந்தை சுப்ரமணி துக்கம் தாங்காமல் கடந்த 2 நாட்களாக கதறி அழுத படி இருந்தார். நேற்று மதியம் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கழிவறையை திறந்து பார்த்த போது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சுப்ரமணியின் மனைவி நளினி, மகள் கோகிலா, மற்றொரு மகன் தமிழரசன் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
இந்த நிலையில் சக்திவேலின் சகோதரி கோகிலா (வயது 26) என்பவருக்கும், நாமக்கல்லை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று (15-ந்தேதி) திருமணம் நடைபெற நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
சக்திவேல் கொலை செய்யப்பட்டதும், தொடர்ந்து அவரது தந்தை நேற்று மர்மமான முறையில் இறந்ததாலும் உறவினர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளனர். இதனால் இன்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
மகள் திருமணம் நடைபெற்று வீடுகளை கட்ட இருந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டதும், அதையடுத்து தந்தையும் தற்போது மர்மமாக இறந்ததும் அவர்களது வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுப்ரமணியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் பதட்டம் நிலவுவதால் அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating