கடையநல்லூரில் 8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தாய் கைது…!!
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மாணவி மாரியம்மாள் (வயது 13). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அந்தப் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தைக்கு சரியாக வேலை செய்ய முடியாததால் அவரின் தாய் முத்துலட்சுமி (40) சமையல் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
அப்போது சமையல் காண்டிராக்டரான, புளியங்குடி சாகுல்மைதீன், அடிக்கடி முத்துலட்சுமி வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது முத்துலட்சுமியின் 13 வயது மகள் மாரியம்மாள் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி சாகுல்மைதீன், முத்துலட்சுமியிடம் அடிக்கடி வலியுறுத்தினார். இதனால் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதை மறந்த முத்துலட்சுமி தனது மகளை, சாகுல் மைதீனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தார்.
இதைத்தொடர்ந்து சாகுல்மைதீனின், சகோதரிகள் என்று கூறி 2 பெண்கள் முத்துலட்சுமியின் வீட்டுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு வந்து, அங்கிருந்த மாரியம்மாளுக்கு பூ வைத்து நிச்சயம் செய்தனர். அப்போது தான் மாரியம்மாளுக்கு, தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்ற விபரம் தெரியவந்தது. இதனால் அவர் தாயிடம் அழுது திருமணம் வேண்டாம் என்று அடம் பிடித்தார்.
ஆனாலும் அவரது தாய், திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். இதைஅறிந்த மாணவி மாரியம்மாள், தனது பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன், நெல்லை மாவட்ட சிறுவர் நலப்பிரிவுக்கு புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு நடக்க இருந்த மாணவி மாரியம்மாளின் திருமணத்தை, நெல்லை மாவட்ட சிறுவர் நலப்பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் மாணவி மாரியம்மாளை மீட்டு, நெல்லை சந்திப்பில் உள்ள குழந்தைகள் காப்பகமான சரணாலயத்தில் தங்க வைத்தனர். சரணாலயத்தில் தங்கியிருந்த மாரியம்மாள் தையல் படித்து வந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுவர் சீர்திருத்த நிர்வாகிகளும், மாவட்ட நீதிபதியும் நேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி மாரியம்மாள், பெற்றோருடன் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் இங்கேயே தங்கி பள்ளிக்கூடத்தில் படிக்க விரும்புவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதி இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனுக்கு உத்தரவிட்டார்.
உடனடியாக புளியங்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தாய் முத்துலட்சுமி, புளியங்குடியைச் சேர்ந்த சாகுல்மைதீன் மற்றும் அவரது 2 சகோதரிகள் ஆகிய 4 பேர் மீதும் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் சிறுமியின் தாய் முத்துலட்சுமியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். சாகுல்மைதீன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating