மதுவில் முதலிடம் பெற்ற நாம் கல்வியைக் கடைசியாக்கினோம்…!!

Read Time:5 Minute, 28 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்று தான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர்.

இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது.இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை.

இன்று பல்வேறு தளங்களில் எமது பண்பாட்டு கோலங்களை நாம் இழந்து வருந்துகிறோம்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதையற்ற நாடு என்ற தொனிப்பொருள் கொண்ட நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்.

அங்கு உரையாற்றிய அவர், மதுபான விற்பனையில் யாழ்ப்பாண மாவட்டம் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்த போது நெஞ்சு அடைத்துக் கொண்டது.

கல்வி கற்ற ஒரு சமூகமாக, பண்பாட்டின் அடித்தளமாக, தமிழ் என்றால் யாழ்ப்பாணம் என்று கூறக்கூடிய பெருமைக்குரியதான எம் மண்ணில் இன்று மது விற்பனை முதலிடத்தைப் பெற்றுள்ளது எனில், எங்கள் நிலைமை என்ன?

இதுபற்றி யார் தான் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விகள் எழுகின்றன.

இலங்கையின் மதுபான விற்பனையில் யாழ்ப்பாணம் முதலிடம் என்று இந்த நாட்டின் ஜனாதிபதி கூறுகின்ற அளவில் எங்கள் நிலைமை அவலமாகி வருவதை உணரமுடிகின்றது.

தமிழ் மக்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்குடன் தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்கள் வாழ்ந்த பூமியில் இப்படி ஓர் அவலம் ஏன் நடக்கவேண்டும்?

எங்கள் இளம் சமூகம் மதுபானத்துக்கு அடிமையாகி விட்டதா? என்றெல்லாம் மனம் நினைந்து நினைந்து வெதும்புகிறது.

ஓ! யுத்தத்துக்கு பின் எங்கள் மண்ணில் சாதாரண சூழ்நிலை இருக்கவில்லை. தமிழ் மக்கள் தங்களின் வாழ்வியல் கோலங்களில் இருந்து பிறழ்வு அடைய வேண்டும் என்ற திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக சில தீயசக்திகள் எங்கள் இளம் சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சதி வேலைகளைச் செய்தன.

இதுதவிர வேலை வாய்ப்புகள், உயர் கல்விக்கான சந்தர்ப்பங்கள் என்பன கிடைக்காத நிலையில் உழைப்பாளர் படையாகிய இளம் சமூகம் தவறான பாதையில் செல்லத் தலைப்பட்டது.

இத்தகைய நிலைமையின் முடிவுதான் இலங்கைத் திருநாட்டின் மதுபான விற்பனையில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் என்ற பெயரை பெற காரணமாயிற்று.

ஒரு காலத்தில் கல்வியில் முதலிடம் என்றிருந்த யாழ்ப்பாண மண் இன்று கல்வியில் கடைசி நிலை என்ற இடத்தை பிடித்துக்கொண்டு மது பாவனையில் முதலிடம் என்றதாக தன்னை மாற்றியுள்ளது.

இத்தகைய பாதகமான நிலைமையை நாம் எப்பாடுபட்டாவது மாற்றியமைக்க வேண்டும்.

இது விடயத்தில் வீடும், பாடசாலைகளும், மக்கள் சமூகமும், பொது அமைப்புக்களும் கடுமையாகப் பங்காற்றுவது கட்டாயமானதாகும்.

இன்றைய யாழ்ப்பாணம் என்பது மதுபானத்துடன் போதை வஸ்து என்ற விடயத்தில் சிக்கியுள்ளது என்பதால் இந்த விடயத்தை முதன்மைப்படுத்தி அதனை வேரறுக்க காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தேவையானதாகும்.

சட்டவிரோத மதுபாவனை, போதை வஸ்து விநியோகம் என்ற தீய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.

அப்போதுதான் பண்பாடு மிகுந்த எங்கள் யாழ்ப்பாணத்து மண்ணை காப்பாற்ற முடியும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 மாத குழந்தையை 17 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற தாய்… காரணம் தெரிந்தால் கொந்தளிச்சிடுவீங்க…!! வீடியோ
Next post மஹிந்தவை மீண்டும் வீழ்த்திய மைத்திரி! சமூக வலைத்தளங்களில் தீவிர போட்டி…!!