ஒரு வருடத்தில் 777 கொலைகள் : அதிக கூடிய கொலைகள் இடம்பெற்ற மாகாணம் எதுவென தெரியுமா?
2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 777 கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு மேல் மாகாணத்தில் 218 கொலைகளும் வடக்கு கிழக்கில் 96 கொலைகளும் பதிவாகியுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.ம.சு.முவின் ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எம்.பி. எழுப்பிய கேள்வி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் 443 கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் 128 கொலைகள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நாட்டில் 334 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் மேல்மாகாணத்தில் 90 கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை இடம்பெற்ற பிரதேச ரீதியாக பார்க்கையில், அநுராதபுரத்தில் 32, அம்பாறையில் 24, பதுளையில் 14, மட்டக்களப்பில் 18, பண்டாரவளையில் 15, சிலாபம் 18, வடகொழும்பு 13, தென்கொழும்பு 9, மத்திய கொழும்பு 9, எம்பிலிப்பிட்டிய 51, காலி 30, கம்பளை 5, அட்டன் 2, யாழ்ப்பாணம் 16, களுத்துறை 27, கண்டி 20, கந்தளாய் 3, களனி 25, கேகாலை 15, சீதாவக்கை 10, குருநாகல் 18, குளியாப்பிட்டிய 22, மாத்தளை 18, மாத்தறை 33, கல்கிசை 19, மொனராகலை 21, நீர்கொழும்பு 18, நுகேகொட 37, நுவரெலியா 8, நிக்கவரெட்டிய 11, பாணந்துறை 19, பொலன்னறுவை 19, இரத்தினபுரி 46, தங்காலை 37, திருகோணமலை 8, வவுனியா 9, புத்தளம் 16, காங்கேசன்துறை 3, மன்னார் 1, கிளிநொச்சி 9, முல்லைத்தீவு 05, குற்றப்புலனாய்வு திணைக்களம் 1 என பதிவாகியுள்ளன.
மொத்தமாக பதிவாகிய 777 தொகைகளில் 43 கொலைகள் வடக்கிலும், 53 கொலைகள் கிழக்கிலும் பதிவாகியுள்ளன. இந்த 777 கொலைச் சம்பவங்களில் 82 கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேவேளை 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளின் முதல் 8 மாதகாலப்பகுதியில் முறையே 402, 391, 30 என்றவாறு கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை 2015.01.01 திகதி முதல் 2016.08.01 திகதி வரையிலான காலப்பகுதியில் 267 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் 2016 ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் இடம்பெற்ற கொலை முயற்சிகள் கொலைகளின் 156 சம்பவங்களில் சுடுவிசைக்கலன்கள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating