சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்..!!
நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற போது, கரையோர மாவட்டம், கரையோர அல்லது தென்கிழக்கு அலகு, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற எல்லா வார்த்தைகளும் ஒரு தெளிவில்லாத அடிப்படையிலேயே மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு சொற்றொடரினதும் சொற்பொருள் விளக்கத்தையும் அறியாதிருப்பதை முஸ்லிம் அரசியலில் தெட்டத் தெளிவாக காணலாம்.
இதில் அடிப்படையாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில், இனப்பிரச்சினை தீர்வுத்திட்டத்துக்காக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமானால் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் உருவாக வேண்டும். இவ்விணைப்பு இடம்பெறவில்லை என்றால் தென்கிழக்கு அலகே சாத்தியமாகும். இவ்வலகு தற்போதுள்ள கிழக்கு மாகாணத்துக்குள் உருவாகும். ஆனால் தீர்வுத்திட்டப் பொதிக்கும் கல்முனையை மையமாகக் கொண்ட கரையோர மாவட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கரையோர மாவட்டம்
சுதந்திரத்துக்குப் பிறகும் கூட, இன்றிருக்கின்ற மட்டக்களப்பும் அம்பாறையும் தனியொரு (மட்டக்களப்பு) மாவட்டமாகவே இருந்தது. கல்லோயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டப் பணிகள் 1950 களின் முற்பகுதியில் பூர்த்தியடைந்தன. இத்திட்டத்துக்கு அமைய இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு 75 வீதமான காணி வழங்கப்படும் என்றும் பிற பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு குடியேற்றப்படும் மக்களுக்கு 25 வீத காணி கிடைக்கும் என்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டி.எஸ். சேனநாயக்கவின் சிபார்சின் பேரில் குருணாகல், கேகாலை, மீரிகம, காலி, மாத்தறை, கம்பஹா போன்ற இடங்களைச் சேர்ந்த மக்கள் கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அம்பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு காணியும் வழங்கப்பட்டது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சியிலும் சிங்களவர்கள் கணிசமாக குடியேற்றப்பட்டதே வரலாறு.
இப்போதிருக்கின்ற அம்பாறை தேர்தல் தொகுதியில், அப்போது ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களே இருந்ததாக விடயமறிந்தவர்கள் கூறுகின்றார்கள். இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பிரதேசமான அம்பாறை நகரைச் சுற்றி சிங்களவர்கள் குடியேற்றப்பட்டமையால் இனப்பரம்பல் மாற்றமடைந்தது. ‘காணிகள் உங்களுக்குச் சொந்தமாகத் தேவை என்றால் நிரந்தமாக குடியிருக்க வேண்டும்’ என பண்டாரநாயக்க விடுத்த அறிவிப்பினால் கணிசமான குடும்பங்கள் கல்லோயா அபிவிருத்தித் திட்ட நிலப்பரப்புகளிலேயே நிரந்தரமாகக் குடியமர்ந்தனர். தனது கடைசிக் காலத்தில் அம்பாறையை தனியொரு தொகுதியாக உருவாக்கினார் பண்டாரநாயக்க.
1960 இன் முற்பகுதியில் பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாக ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் மக்களைக் கொண்ட மூன்று தொகுதிகளில் உள்ள ஒரு பிரதேசமே மாவட்டத்தின் தலைநகராக பிரகடனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், ஒரேயொரு தொகுதியையும் குறைவான சிங்கள மக்களையும் கொண்ட அம்பாறையே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராக முன்மொழியப்பட்டது. அச்சமயத்தில் ‘மூவேந்தர்கள்’ என்று சொல்லப்பட்ட முஸ்லிம் எம்.பிக்கள் வாளாவிருந்தனர்.
இன்று வரைக்கும் அம்பாறையிலேயே கச்சேரி இயங்கி வருகின்றது. மேலும் பல அரச காரியாலயங்களும் செறிவாக அம்பாறையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. கரையோரப் பிரதேசங்களில் காணப்படுகின்ற ஓரிரு அரச அலுவலகங்களும் என்றாவது ஒருநாள் அம்பாறை நோக்கி நகர்த்தப்பட மாட்டாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. பி.தயாரத்ன இல்லாத குறையை தயாகமகே போன்றோர் தீர்த்து வைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. இதனால், தினமும் அம்பாறைக்குச் சென்று அரச சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் கரையோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான குறைகளைத் தீர்ப்பதற்காகவே 20 வருடங்களாக இந்தக் கரையோர மாவட்டக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இக்கோரிக்கை ஓர் அரசியல் கோஷம் அல்ல. அதைவிடுத்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுக்கள் கூட இங்கு இன்னுமொரு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இனங்;கண்டுள்ளன. மாவட்டங்களை சீரமைப்புச் செய்வதற்காக 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தன, மொறகொட ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழு புதிதாக இரண்டு மாவட்டங்களை உருவாக்குமாறு பரிந்துரை செய்தது. யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் அப்போது உள்ளடக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை பிரதான நகராகக் கொண்டு ஒரு மாவட்டமும் அம்பாறை மாவட்டத்துக்குள் இன்னுமொரு மாவட்டமும் உருவாக்கப்பட வேண்டுமென அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கு அமைவாக கிளிநொச்சி தனியொரு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அம்பாறைக்குள் இன்னுமொரு மாவட்டத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சித்த வேளையில் அப்போது பலம் பொருந்திய அமைச்சரான, அம்பாறை அமைச்சர் ஒருவர் எதிர்த்தமையால் ஜே.ஆர் அரசாங்கத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில்; புதிதாக மூன்று மாவட்டங்களை உருவாக்கும் திட்டத்தை ரணில் வகுத்திருந்தார். அதில் கல்முனை கரையோர மாவட்டமும் உள்ளடங்கியிருந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைக் காரணம் காட்டிக் கொண்டிருக்கும் போதே, அவரது ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்து விட்டது.
இதற்கு மேலதிகமாக, அரசியல் ரீதியாக 1994 இல் மு.காவின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்தக் கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 2002இல் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் சங்கமித்த போதும், 2012 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க ஆதரவு நல்கிய வேளையிலும் கரையோர மாவட்டம் குறித்த உடன்பாடுகள் எட்டப்பட்டன.
அதுமட்டுமன்றி, 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மஹிந்தவிடம் கரையோர மாவட்டத்தை தருமாறு மு.கா கோரியது. ஆனால் ராஜபக்ஷாக்கள் இழுத்தடித்தனர். அதன்பின்னர், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தபோது, அதற்கான உத்தரவாதம் தரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் அதைப் பெற்றுக்கொள்ள அக்கட்சி முயற்சிகளை எடுக்கவில்லை.
இதுதான் கரையோர மாவட்டம் பற்றிய அடிப்படை விளக்கமாகும். இது ஓர் அதிகாரமுள்ள ஆட்புல எல்லை இல்லை. மாறாக, இது சிங்களவர்களை அதிகமாகக் கொண்ட மாத்தறை மாவட்டம் போல, தமிழர்களைப் பிரதானமாகக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டம் போல முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மாவட்டமாகவே அமையும். இங்கு முஸ்லிம்கள் தனி அரசாங்கம் நடத்தப் போவதில்லை. மற்றைய எல்லா மாவட்டங்களையும் போல புதிய கரையோர மாவட்டத்தையும் ஓர் அரசாங்க அதிபரே நிர்வாகம் செய்வார்.
கரையோர மாவட்டம் என்பது எவ்வகையிலும் தீர்வுத் திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கமாட்டாது. தீர்வுத்;திட்டம் வழங்கினாலும் இல்லாவிட்டாலும் கரையோர மாவட்டம் அவசியமானது. இது தீர்வுப் பொதியின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற ஒரு விடயமே அல்ல. ஆட்சியதிகாரத்தில் பலமும் கோட்பாட்டில் உறுதிப்பாடும் இருந்தால் அமைச்சரவை ஒப்புதலுடன் ஓர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சாதிக்கின்ற விடயமாகும். ஆதலால், இதை இனப்பிரச்சினையின் தீர்வுத் திட்டம் போல மக்களுக்கு காண்பிக்க முனைவதை முஸ்லிம் காங்கிரஸ்; உள்ளிட்ட கட்சிகளின் அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் மாகாணம்
இப்போது முஸ்லிம் அரசியல் பரப்பில் பேசப்படுகின்ற முஸ்லிம் மாகாணங்கள் இரண்டு வகையானவை. ஒன்று, நிலத்தொடர்பற்ற பரந்த முஸ்லிம் மாகாணம், மற்றையது தென்கிழக்கு அதிகார அலகு ஆகும்;. நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்பது மர்ஹூம் அஷ்ரபினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான சூழல், ஆயுதக் கலாசாரம் என்பவற்றின் பாரதூரத்தை அறிந்து கொண்ட அவர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அரசியல் அதிகார அலகைக் கோரினார். ‘அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளை மையமாகக் கொண்டதாகவும் மட்டக்களப்பு, திருமலை, வன்னி மாவட்டங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு முஸ்லிம் அரசியல் அதிகார அலகு எமக்கு வேண்டும்’ என்று அஷ்ரப் சொன்னார். இதுவே இன்று நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற பதத்தால் அழைக்கப்படுகின்றது.
கரையோர மாவட்டத்தைப் போலல்லாமல், நிலத்தொடர்பற்ற மாகாணம் என்பது இனப் பிரச்சினை தீர்வுத் திட்டத்தின் ஊடாக முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அதிகார எல்லையாக அமையும். இம் மாகாணம் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் அதிகாரத்தில் உள்ள பிரதேச சபைகளை உள்ளடக்கியதாக காணப்படும். இவ்விரு மாகாணங்களிலும் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் பின்னிப் பிணைந்திருப்பதால் முஸ்லிம் மாகாணத்தை உருவாக்குவது சிக்கலானதாக அமையும் என்று கூறப்படுகின்றது. நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் உருவானால் இணைந்த வடகிழக்கிலான தமிழர்களின் ஆட்சிப் பரப்பும் நிலத்தொடர்பற்றதாகவே காணப்படும். ஆனாலும், இந்தியாவின் பாண்டி ச்சேரியை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் நிலத் தொடர்பற்ற மாகாணங்களை நிர்வகிக்க முடியும் என்ற ஒரு கருத்தும் காணப்படுகின்றது.
நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்துக்கும் முஸ்லிம் அலகிற்கும் இடையில் சிறியதொரு வித்தியாசமே உள்ளது. அதாவது, வடகிழக்கு இணைக்கப்படாவிடின் அல்லது வடபுலத்தில் உள்ள முஸ்லிம்கள் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்துக்குள் இணைந்து கொள்ள விரும்பாத பட்சத்தில் உருவாகும் ஆட்சிப் பரப்பு தென்கிழக்கு அலகு எனப்படலாம். அதாவது, தென்கிழக்கை மையப்புள்ளியாக கொண்டியங்கும் ஓர் ஆட்புல எல்லையாக இது வரையறை செய்யப்படுவதுடன் பெரும்பாலும் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளையும் மட்டக்களப்பு மற்றும் திருமலையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களையும் உள்வாங்கியதாக நிலத்தொடர்பின்றி அமையப் பெறும். இதனையே கரையோர அலகு என்றும் சிலர் கூறுகின்றனர்.
தென்கிழக்கு அலகு என்பது தற்போதைய கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட ஓர் அதிகார எல்லையாக அமையும். எவ்வாறாயினும், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற உச்சபட்ச அபிலாஷையை பூர்த்தி செய்ய முடியாத ஒரு நடைமுறைச் சிக்கல் ஏற்படும் நிலையில், முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தை ஓரளவுக்கேனும் பாதுகாத்துக் கொள்வதற்காக வழங்கப்படும் அளவில் சிறிய, ஆறுதல் பரிசாகவே அது காணப்படும். ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் கரையோர (கல்முனை) மாவட்டம் தென்கிழக்கு அலகாக ஆகமாட்டாது என்பது கவனிப்பிற்குரியது.
தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றை சூழ்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கவே கூடாது என்ற நிலைப்பாடுகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து பரவலாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அதையும் மீறி இணைக்கப்படலாம் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்ட அரசியல்வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் ‘தனி முஸ்லிம் மாகாணம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில், இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் கோரிக்கைகளை, அறிக்கைகளை விடுக்கும் அரசியல்வாதிகள், அதற்கு முன்னதாக இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம், தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் என்ற சொற்பதங்களின் வேறுபாட்டை உணர்ந்து கொள்ள வேண்டும். முக்கியத்துவம்மிக்க விடயங்கள் பற்றிய விளக்கமில்லா பிதற்றல்கள் சிரிப்பைத்தான் உண்டுபண்ணும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating