.குழந்தைகளின் உலகில் திருட்டுத்தனமாக நுழையும் சாத்தான்கள்…!!

Read Time:17 Minute, 13 Second

article_1472639530-unnamedசிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது, களங்கம் அற்றது. வளர்ந்த மனிதர்களின் வன்மமான உலகம் குறித்து அவர்கள் அறிவதில்லை. அதனாலேயே, குழந்தைகளின் ‘சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்பார்கள்.

சிறுவர்களுடனும் குழந்தைகளுடனும் பேசிக்கொண்டிருப்பது அலாதியான அனுபவமாகும். உற்றுக் கவனித்தால், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பிஞ்சுகளுக்கு வன்மங்களையே அதிகமாகக் கற்றுக்கொடுக்கின்றோம். எம்மிடமுள்ள அருவருப்புகளையே அவர்கள் மீது திணிக்கத் தொடங்குகின்றோம்.
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகப்பெரும் கொடுமையாகும். இது குறித்து எழுத ஏராளமான கதைகள் உள்ளன. அவை கண்ணீராலும் துயரங்களாலும் நிறைந்தவை. பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் அநேகமான சிறுவர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே வேட்டையாடப்படுகின்றார்கள் என்கிற தகவல்களே பெரும் அதிர்ச்சியாகும்.

பருவம் அடையாத தனது பெண் பிள்ளையை, தந்தை ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிகழ்வு, 2014ஆம் ஆண்டு அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தைக் காரியாலயத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றிருந்தது. முன்னொரு காலத்தில் இப்படியான சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டு வந்தன. குடும்ப கௌரவம், குழந்தையின் எதிர்காலம் என்கிற போலியான காரணங்களை முன்னிறுத்தி, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்செயல்கள், சட்டத்தின் முன்பாகக் கொண்டு செல்லப்படுவதில்லை. ஆனால், இப்போது, இந்த நிலையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் நிகழ்ந்துள்ளதாக மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.ஏ.ஏ.வசீர்தீன் கூறுகின்றார். 30 வருட சேவைக் காலத்தைக் கொண்ட இவர், தற்போது சிறுவர் நன்னடத்தை கல்முனைக் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் சிறுவர் நன்னடத்தைக் காரியாலயங்கள் 04 இயங்குகின்றன. அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் மேற்படி காரியாலயங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு காரியாலயத்தின் அதிகார எல்லைகளுக்குள்ளும் பல பிரதேசங்கள் அடங்குகின்றன.
அக்கரைப்பற்று காரியாலயத்தின் அதிகார எல்லைக்குள் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன. அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தைக் காரியாலயத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே ஏனைய பிரதேசங்களை விடவும், அதிகமான அளவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

‘சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான சூழலை பல காரணங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. பிள்ளைகளை விட்டு பெற்றோர் வெளிநாடு செல்கின்றமை மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்கக்கூடிய இயலுமை பெற்றோர்களுக்கு இல்லாமல் போகின்றமை அவற்றில் முக்கிய காரணங்களாகும்’ என்கிறார், மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்;தர் எம்.ஏ.ஏ.வசீர்தீன்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஒவ்வொரு மாதமும் ஆகக்குறைந்தது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எவ்வாறாயினும், தற்போது சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில் 2014ஆம் ஆண்டு சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மிகவும் குறைந்தளவில் இடம்பெறும் பிராந்தியமாக கல்முனை சிறுவர் நன்னடத்தைக் காரியாலயத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பிள்ளைகளை விட்டு வெளிநாடு செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள குடும்பங்களிடையே சமூகப் பிணைப்பு அதிகமாகக் காணப்படுவதாகவும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘இப்போதெல்லாம் மிக இளவயதுக் குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுவதாக செய்திகளில் படிக்கக் கிடைக்கின்றது. உங்கள் தொழில் அனுபவத்தில், இப்படி மிகக் குறைந்த வயதில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான பிள்ளைகளைக் காணக் கிடைத்துள்ளதா’ என்று சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் வசீர்தீனிடம் கேட்டோம். ‘சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 02 வயதுக் குழந்தை ஒன்றைக் காணக் கிடைத்தது. அந்தக் குற்றத்தைப்; புரிந்தவர் 10 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு 02 முதல் 20 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது’ என்று வசீர்தீன் கூறினார்.

மதரசா ஒன்றில் கற்றுக்கொடுக்கும் மௌலவி ஒருவர், அங்கு கற்கும் சிறு பிள்ளையுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. மேற்படி சம்பவத்தைச் சிலர் வீடியோவாக எடுத்து வைத்திருந்தனர். இதனை அடுத்து, இவ்விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். ஆனால், பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை அதற்கு விரும்பவில்லை. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால், தனது பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அந்தத் தந்தை கூறினார். தனது எதிர்ப்பையும் மீறி, இது குறித்து யாராவது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தால், தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அந்தத் தந்தை அச்சுறுத்தினார். இதன் காரணமாக, குறித்த சம்பவம் அப்படியே புதைந்து போனது. குற்றவாளி தப்பித்துக்கொண்டார்.

சிறுவர்கள் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குறித்து புகார் செய்வதும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சம்பந்தப்பட்ட தனது பிள்ளையின் எதிர்காலத்தை பாதிக்கச் செய்துவிடும் என்று சில பெற்றோர் இன்னும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கையில் ஒரு துளிகூட உண்மை கிடையாது. பெற்றோர்களின் இந்த நம்பிக்கையானது, குற்றவாளிகளைத் தண்டனைகளிலிருந்தும் தப்பிக்கச் செய்வதைத் தவிர, வேறு எதையும் நிகழ்த்தி விடுவதில்லை.

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களம், பிரதேச மட்டத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று மாவட்ட உத்தியோகஸ்;தர் வசீர்தீனிடம் கேட்டபோது, அவர் பல விடயங்களை விபரித்தார். ‘பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவற்கான உத்தியோகஸ்தர் மூலம் இந்த நடவடிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் உத்தியோகஸ்தர் ஒருவர் கடமையாற்றுவார். மேலும், சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமாக இடம்பெறும்; பகுதிகளை அடையாளம் கண்டு, அங்குள்ள பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றோம்’ என்றார்.
‘இவை மட்டுமன்றி, பராமரிப்பதற்கு எவரும் அற்ற, சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட பிள்ளைகளை நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் பராமரிப்பு இல்லங்களுக்கு நாம் அனுப்பி வைக்கின்றோம். மேலும், வலிந்துதவும் சமூக சேவை நிறுவனங்கள், சிறுவர் பராமரிப்பு இல்லங்களை நிறுவிப் பிள்ளைகளைப் பராமரிக்கும்போது, அங்குள்ள ஒவ்வொரு பிள்ளைக்குமான பராமரிப்புச் செலவாக தலா 500 ரூபாயை சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களம் வழங்கி வருகின்றது. அதேவேளை, பராமரிப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதோடு, அவர்கள் அங்கிருந்து வெளியேறும்போது, தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களம் உதவி புரிகின்றது’ என்று வசீர்தீன் கூறினார்.
பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் சிறுவர்கள், மருத்துவ மற்றும் சட்ட ரீதியான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, மேற்கொள்ளும் போக்குவரத்துகளுக்கான செலவுகளையும் தமது திணைக்களம் வழங்கி வருவதாகவும் மாவட்ட உத்தியோகஸ்தர் வசீர்தீன் சுட்டிக்காட்டினார்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பெற்றோர்களிடம் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பது கவலையான விடயமாகும். தமது பிள்ளைகள் எங்கு செல்கின்றார்கள், யாருடன் பழகுகின்றனர் போன்ற விடயங்களில், கணிசமான பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை என்பது கசப்பு மிகுந்த உண்மையாகும்.

பிள்ளைகளுடன் நெருங்கிய உறவினர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதை அநேகமான பெற்றோர்கள் அவதானிக்கத் தவறி விடுகின்றனர். பிள்ளைகள் மீது நெருங்கிய உறவினர்கள் பாலியல் துஷ்பிரயோகம் புரிவதற்குத் துணியமாட்டார்கள் என்பது அநேகமான பெற்றோர்களின் நம்பிக்கையாகும். ஆனால், நெருங்கிய உறவினர்களாலேயே சிறுவர்கள் மீது அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நபர் ஒருவரின் முதல் திருமணத்தில் பிறந்த மகன், அதே நபரின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த மகள் மீது அதாவது, சகோதரியை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சம்பவமொன்று அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தைக் காரியாலயத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசமொன்றில் மூன்று வருடங்களுக்கு முன்னர் பதிவானமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இன்னொருபுறம், குடும்பப் பராமரிப்பு அற்ற அல்லது கைவிடப்பட்ட சிறுவர்களும் கணிசமானளவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் எனத் தெரியவருகிறது. இவ்வாறான சிறுவர்களைப் பராமரிப்பதற்கான இல்லங்களை வலிந்துதவும் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ச்; சமூகத்தினால் இவ்வாறான 14 சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், முஸ்லிம் சிறுவர்களை குறிப்பாக, முஸ்லிம் சிறுமிகளை பராமரிப்பதற்கென முஸ்லிம்களிடையே இந்த மாவட்டத்தில் எந்தவொரு பராமரிப்பு இல்லங்களும் இல்லை என்பது கவலை தரும் தகவலாகும்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றமொன்று எமது சூழலில் நடைபெற்றதாகத் தெரியவரும்போது மட்டும் பொங்கியெழுந்து உணர்ச்சி வசப்படுவதும் பின்னர் அடங்கிப் போவதும் எம்மவர்களில் அதிகமானோரிடையே உள்ள பலவீனமாகும். சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான பிள்ளைகளில் பராமரிப்பு அற்றோருக்கான ஆதரவை வழங்குவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் எம்மில் அதிகமானோர் முன்வருவதில்லை.

வெறும் உணர்ச்சி வசப்படுதல்களும் வெற்றுக் கோபங்களும் சமூகத்தில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்திவிடாது. குழந்தைகளின் உலகத்தில் திருட்டுத்தனமாக நுழையும் சாத்தான்களையும் அவை தடுத்து நிறுத்திவிடப் போவதில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரப்பிரதேசம்: கார் விபத்தில் 5 பேர் பலி…!!
Next post இப்படி ஒரு நிலைமை எந்த ஆணுக்கும் வரக் கூடாது ! பாருங்கள்! வீடியோ…!!