பான் கீ மூனின் நம்பிக்கை…!!
நிரந்தர நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஐ. நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கையையும், வரவேற்பையும் வெளிக்காட்டியிருக்கிறார்.
அதே சமயம் இலங்கையின் சமாதானம் மாற்றம் தொடர்பிலான பங்குதாரர்கள் நாட்டின் இளைஞர் சமுதாயமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இலக்குகளை அடையும் வகையில் இன்றைய அரசின் முன்னெடுப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வொன்றின் போதே மேற்படி நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அலுவலகம், ஐ. நா வின் இலங்கை கிளையும் இணைந்து நேற்று முன்தினம் காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பான் கீ மூன் இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படையாகவே பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.
ஒரு நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும், சகவாழ்வு நிலைபெறவும் இளைஞர்களின் பங்களிப்பானது இன்றியமையாத தொன்றாகும் என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
உண்மையிலேயே நாடு செழித்தோங்கவும், அமைதி நிலைக்கவும் இளைஞர்களது பங்கு மிக முக்கியமான தொன்றாகும்.
கடந்த காலத்தில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதன் விளைவாக இந்த தேசம் பேரழிவுக்குள் தள்ளப்படும் நிலைக்குள்ளானது.
இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யார்? என்பதை சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.
தற்போது இலங்கை அபிவிருத்திக்கான பயணத்தை முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன் நல்லிணக்கம், சமாதானம், சக வாழ்வு போன்ற விவகாரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதை தம்மால் அவதானிக்க முடிவதாக தெரிவித்திருக்கும் ஐ. நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த விடயத்தில் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால் இளைஞர்களின் பங்களிப்பே மிக முக்கியமானதெனவும் இதனை ஜனாதிபதி, பிரதமர் போன்றோரிடம் வலியுறுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இளைஞர்கள் நாளைய தலைவர்கள், அவர்களது கனவுகளுக்கு உயிர் கொடுத்து பலப்படுத்தப்பட வேண்டும்.
இனம், மதம், மொழி கடந்த செயற்பாடுகளின் மூலம் எமது இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல முடியும்.
மோதல்களின் போது உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர். அதேபோன்று அமைதிச் சூழல் ஏற்படும் போது அனைத்தையும் இழந்து நிற்பவர்களும் இளைய சந்ததியினரே.
எனவே தான் 70 ஆண்டுகள் கடந்த நிலையில் ஐ. நா சபையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதேபோன்று தான் பெண்கள் தொடர்பிலும் ஐ. நா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த காலத்தைப் பாடமாகக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிய பயணம் அமையவேண்டும்.
அந்த எதிர்காலம் இளைய சமுதாயத்தின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது. எதிர்காலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாகவே ஒளிபெறமுடியும்.
இதனை கருத்தில் கொண்டே ஐ.நா. செயலாளர் நாயகம் நல்லிணக்கத்தின் பாதை மிகவும் அவசியமான தென்பதை வலியுறுத்தி இருக்கின்றார்.
இந்த நல்லிணக்க பாதையில் சீராகப் பயணிக்க வேண்டுமானால் இளைய சந்ததியினருக்கு தரமான கல்வியூட்டப்பட வேண்டுமென்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும் மிக முக்கியமானதெனக் கருதுவதன் காரணமாகவே ஐ. நா சபை இது விடயத்தில் கூடுதல் கரிசனை கொண்டிருப்பதாக பான் கீ மூன் குறிப்பிட்டிருக்கிறார்.
மீண்டுமொரு தடவை இந்த நாட்டுக்கு வரத்தூண்டியதே அதுதான் காரணமாகும்.
கடந்த தடவை வந்த போது எதிர்காலம் குறித்த கேள்விக்கு சாத்தியமான பதிலை எம்மால் கண்டுகொள்ள முடியாது போனதாகவும் ஆனால் இந்த தடவை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னெடுப்பு குறித்து நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றார்.
இனம், மதம், மொழி கடந்த இலங்கையில நிரந்தர சமாதானத்தையும், நல்லிணக்கத்தையுமே உலகம் எதிர்பார்க்கின்றது.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது.
ஆனால் அவறறை நல்லெண்ணத்தின் அடிப்படையில் சுமுகமாக பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எமது நாடு பல தசாப்தங்களைக் கடந்தே சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.
ஆயுதப் போராட்டங்களால் பேரழிவைச் சந்தித்ததன் பின்னரே ஞானம் பிறந்துள்ளது.
இருந்தபோதிலும் கூட இனவாதத் தீ முற்றாக அணைந்து போனதாகக் கூற முடியவில்லை. ஆங்காங்கே அந்தத் தீ எரிந்துகொண்டு தானிருக்கின்றது.
அதனை முற்றாக அணைக்க வேண்டுமாக இருந்தால் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு அடிப்படையில் சகலரும் நடந்துகொள்ள வேண்டும்.
விட்டுக்கொடுப்பு காரணமாக ஒரு தரப்பு தோற்றுப்போனதாக எண்ணும் போக்கு தவிர்க்கப்படவேண்டும்.
யாரும் தோற்றுப்போகவில்லை, அனைவரும் வெற்றி பெற்றவர்களே என்ற மனநிலை ஏற்படவேண்டும்.
ஐ. நா. செயலாளர் நாயகத்தின் எதிர்பார்ப்பு நேர்மையானதாகவும் நியாயமானதாகவுமே கொள்ளப்பட வேண்டும்.
தனது 6வது வயதில் கொரியாவில் ஏற்பட்ட போரில் மூன்று மில்லியன் மக்கள் உயிரிழந்த பின்னணியில் பசி, பட்டினியால் எதிர்கொண்ட வலியை அவர் இங்கு நினைவு கூர்ந்ததன் மூலம் உலகம் நிலையான அமைதி, சமாதானத்தை எட்ட வேண்டுமென்ற நீண்ட நாள் கனவையே இலங்கை மக்களுக்கும் எடுத்துச் சொல்ல முற்பட்டுள்ளார்.
இதில் அவர் யார் பக்கமும் நின்று பக்கச்சார்பாக பேச முற்படவில்லை. மனிதநேயச் சிந்தனையுடன் கூடிய எதிர்பார்ப்பையே வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் கனவு எமது மண்ணில் விரைவாக நனவாக மாற்றம் பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating