வாணியம்பாடியில் வீடு புகுந்து தாய், மகளை தாக்கி 12 பவுன் நகை-பணம் கொள்ளை…!!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் புதூரை சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மனைவி மும்தாஜ் (வயது 48). இவர்களுக்கு ஹீநாத் கவுசர் (வயது 23) என்ற மகளும், முகம்மது அலி என்ற மகனும் உள்ளனர். அஷ்ரப், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து, குடும்ப பொறுப்பை மகன் முகம்மது அலி ஏற்றுக் கொண்டார். இவர், வீட்டின் அருகே மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், முகம்மது அலி வேலை நிமித்தமாக கிருஷ்ணகிரிக்கு நேற்று சென்றார்.
இதனால் தாய் மும்தாஜ் மற்றும் மகள் ஹீநாத் கவுசர் மட்டும் வீட்டில் இருந்தனர். நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு இருவரும் வீட்டில் தூங்கினர். இன்று அதிகாலையில் வீட்டின் கதவை யாரோ? தட்டினர். சத்தம் கேட்டு எழுந்த மும்தாஜ், வெளியூர் சென்ற மகன் வீடு திரும்பி விட்டார் என நினைத்து கதவை திறந்தார்.
ஆனால், மகன் முகம்மது அலி வரவில்லை. 2 மர்ம நபர்கள் வீட்டு வாசலில் நின்றிருந்தனர். அவர்கள் யார்? என மும்தாஜ் கேட்டார். அடுத்த சில விநாடிகளில் மும்தாஜை சரமாரியாக மர்ம நபர்கள் 2 பேரும் தாக்கி வீட்டுக்குள் தள்ளினர். சத்தம் கேட்டு எழுந்த அவரது மகள் ஹீநாத் கவுசரையும் மர்ம நபர்கள் பயங்கரமாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த தாயும், மகளும் வீட்டுக்குள்ளே சுருண்டு விழுந்தனர். அவர்கள் மீது மர்ம நபர்கள் மயக்க பொடி தூவினர். இதனால் 2 பேரும் மயங்கினர். இதையடுத்து, அறைக்கு சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்தனர். பீரோவில் இருந்த பொருட்களை அறை முழுவதும் எடுத்து வீசினர்.
பிறகு, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். பொழுது விடிந்தது. ஊருக்கு சென்றிருந்த மகன் முகம்மது அலி வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தாய் மற்றும் சகோதரி படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
முகத்தில் தண்ணீர் தெளித்தார். இதையடுத்து, அவர்களுக்கு நினைவு திரும்பியது. முகம்மது அலியிடம் நடந்ததை கூறி அழுதனர். ஆறுதல் கூறிய முகம்மது அலி தாய்-சகோதரியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating