கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி…!!
திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா. இவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுடைய மகள் மோனிகா (வயது 22). இவர் திருச்சியில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மோனிகாவின் வீட்டின் அருகே குடியிருந்து வருபவர் பாலமுருகன் (27). இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மோனிகா தினமும் வீட்டில் இருந்து பிச்சாண்டார்கோவில் பஸ் நிறுத்தம் வரை நடந்து சென்று, அங்கு பஸ் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம். மோனிகா தினமும் கல்லூரிக்கு சென்று வரும்போது, அவரை ஒரு வருடமாக பாலமுருகன் பின்தொடர்ந்து சென்று தான் காதலிப்பதாகவும், தன்னுடைய காதலை ஏற்கும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் மோனிகா காதலை ஏற்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். நேற்று மாலை கல்லூரி முடிந்து மோனிகா பஸ்சில் பிச்சாண்டார்கோவில் சென்றார். அங்கு பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த பாலமுருகன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து திடீரென்று மோனிகாவின் முதுகில் குத்தினார். இதனால் வலியால் அலறி துடித்த அவர் அப்படியே சுருண்டு விழுந்தார். ஆனாலும் பாலமுருகன் கத்தியால் அவரது கழுத்து, கை, கால்களில் 8 இடங்களில் சரமாரியாக குத்தினார்.
இதனை கண்ட அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் கீழே கிடந்த கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீசினர். பின்னர் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்தனர். உடனே அவர் கத்தியை கீழே போட்டுவிட்டு ஓடாமல் கைகளை மேலே தூக்கி நின்று விட்டார்.
பொதுமக்கள் அவரை பிடித்து டோல்கேட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது, பாலமுருகன் விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. உடனே அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த மோனிகாவை மீட்டு அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலமுருகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மோனிகாவின் தந்தை ரவி, தாய் பாத்திமா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மகளை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating