தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையில் தீராத காவிரிப் பிரச்சினை…!!
தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான காவிரிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. 1924 இல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடக மாநிலம் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஆனால் அம்மாநிலத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணையில் தண்ணீர் நிரம்பவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இருக்காது. இந்தப் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டதன் விளைவாக 1970 களிலேயே ‘நடுவர் மன்றம்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இறுதியில் 1990 இல் அதாவது 20 வருடம் கழித்து காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
அந்தக் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவர 17 வருடங்கள் பிடித்தன. 2007 ஆம் ஆண்டுதான் காவிரி நதி நீர்ப் பிரச்சினையின் இறுதித் தீர்ப்பு வெளியானது. ஆனால் அந்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஆறு வருடம் ஆனது. மொத்தத்தில் நடுவர் மன்றம் அமைத்து, இறுதித் தீர்ப்பு வெளியாகி, அந்தத் தீர்ப்பு அரசிதழிலும் வெளியிட (இப்படி வெளியிட்ட பிறகுதான் அந்தத் தீர்ப்பை அமல்படுத்த முடியும்) 43 வருடங்கள் ஆனது. இவ்வளவு வருடங்கள் கழித்தும் இன்னும் இறுதித் தீர்ப்பின் படி காவிரி நதியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை.
இதற்கு என்ன காரணம் என்றால் இறுதித் தீர்ப்பின்படி, தண்ணீர் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க ‘காவேரி மேலாண்மை ஆணையம்’ மற்றும் ‘காவிரி நீர் முறைப்படுத்தும் குழு’ ஆகிய இரண்டும் அமைக்கப்பட வேண்டும். இந்த இரு குழுக்களையும் அமைக்கக் கோரி தமிழகம் மத்திய அரசிடம் 2013 ஆம் வருடத்திலிருந்து கோரிக்கை முன்வைத்து வருகிறது. மூன்று வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் இந்தக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. 93 வருட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தின் படி தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள நடுவர் மன்றம் அமைத்து, தீர்ப்பளித்து 46 வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் அந்தத் தீர்ப்பின்படி தண்ணீரை பெற முடியவில்லை.
இறுதித் தீர்ப்பை அமல்படுத்த குழுக்களை அமைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. அதாவது டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறையின் பொறுப்பாக இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் தனியாக ஒரு எம்.பி கூட ஜெயிக்க முடியாது. தனியாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட ஜெயிக்க முடியாது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் அப்படியில்லை.
அங்கு ஆட்சிக்கு வரும் கட்சியாக பாரதீய ஜனதா கட்சி இருக்கிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸுக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இப்போது உருவாகி விட்டது. இதனால் கர்நாடக விவசாயிகளை பகைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரைமுறைப்படுத்தும் குழு போன்றவற்றை அமைக்க தயங்குகிறது மத்திய அரசு. இந்தத் தயக்கத்தின் விளைவாக முன்பு காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசும் காவிரிப் பிரச்சினையில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசும் காவிரிப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதைவிட, முக்கியமாக இதுவரை மத்தியில் தமிழக எம்.பிக்களின் ஆதிக்கம் இருந்தது. 1989 முதல் 2014 வரை அ.தி.மு.க அல்லது தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவில் மத்திய அரசு ஆட்சி செய்தது. அதனால் ஓரளவிற்காவது காவிரிப் பிரச்சினையில் சில காலகட்டங்களில் நடவடிக்கை எடுத்தார்கள். தி.மு.கவின் ஆதரவில் மத்திய அரசு இருந்த போது காவிரி நடுவர் மன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு போன்றவை கிடைத்தன. அ.தி.மு.க ஆதரவில் மத்திய அரசு ஆட்சி செய்த போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடுவது, காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகே மத்திய அரசாங்கம் காவிரிப் பிரச்சினையில் உத்தரவுகளைப் போட்டது. குறிப்பாக நடுவர் மன்றம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது; காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்கியது. காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் இந்திய உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்புதான் நிலுவையில் இருக்கிறது.
ஆகவே, இரு மாநில நதி நீர் பிரச்சினை தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் ‘கர்நாடக அரசியலில்’ சிக்கிக் கொண்டு தவிக்கிறது. இதனால் காவிரி டெல்டா என்றழைக்கப்படும் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களின் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இப்போது அடுத்தடுத்து போராட்டங்களை விவசாயிகள் செய்து வருகிறார்கள்.
தமிழக அரசைப் பொறுத்தவரை ‘கர்நாடகாவுடன் பேசிப் பிரயோஜனமில்லை’ என்ற முடிவிற்கு வந்து விட்டது. அதனால் எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்தின் மூலமே ஆணைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கருதுகிறது. மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி காவிரிப் பிரச்சினை குறித்து கடிதங்கள் எழுதினாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமே தமிழக அரசு இப்போதைக்கு நம்புகிறது. மத்திய அரசு கர்நாடக அரசுக்கு விரோதமாக எந்த முடிவும் எடுக்காது என்று தமிழக அரசு நம்புவதால்தான் இப்படியொரு போக்கு காணப்படுகிறது.
இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இதுவரை இரு முறை தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி விட்டது. அந்த தீர்மானத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் 55 எம்.பிக்களும் சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து கோரிக்கை வைத்து விட்டார்கள். அதன் பிறகு சமீபத்தில் இரண்டாவது வெற்றி பெற்று முதலமைச்சரான ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடியை 14.6.2014 அன்று டெல்லி சென்று சந்தித்தார்.
அன்றைய தினமும் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நதி நீரை தமிழக விவசாயிகளுக்கு கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்து விட்டார். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை முதலமைச்சர் ஜெயலலிதாவே கடந்த 18 ஆம் திபதி தமிழக சட்டமன்றத்தில் பதிவு செய்து விட்டு, ‘காவிரி நதி நீரைப் பெறுவதற்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்’ என்று அறிவித்து விட்டார். இதன் அடிப்படையில் மீண்டும் ‘இறுதித் தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து விட்டது.
ஆனால், கர்நாடக அரசோ இதற்கெல்லாம் செவி சாய்ப்பது போல் தெரியவில்லை. தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரைக் குறைக்கும் விதத்தில் புதிதாக மேகதாது அணை ஒன்றை காவிரியின் குறுக்கே கட்டப் போகிறோம் என்று அம்மாநில முதல்வர் சித்தாரமையா சுதந்திரதின உரையில் கூறி விட்டார்.
அப்படி அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு கிடைக்கும் காவிரி நீர் அறவே குறையும். ஏற்கெனவே 2015 மற்றும் 2016 ஆகிய இரு வருடங்கள் தொடர்ந்து ஜூன் 12 ஆம் திகதி காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறக்க முடியாமல் தமிழக அரசு தடுமாறி நிற்கிறது. இந்த சூழ்நிலையில் புதிய அணையும் கட்ட அனுமதித்தால் தமிழகத்துக்கு காவிரி நீர் பெருமளவில் குறையும். இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்ட நீரும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மேகதாது அணை கட்டுவதையும் தமிழகம் எதிர்க்கிறது.
தமிழக அரசின் எதிர்ப்பு என்பதையும் மீறி இப்போது தமிழகத்தில் காவிரி நதி நீரைக் கர்நாடகம் கொடுக்கவில்லை என்பதும், புதிய அணை கட்டுகிறது என்பதும் விவசாயிகளின் போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே ஆகஸ்ட் 17 ஆம் திகதி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். அடுத்து 30.8.2016 அன்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையில் 25 ஆம் திகதி கர்நாட முதல்வர் சித்தாராமையாவை தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் நேரடியாக சந்தித்து ‘தண்ணீர் திறந்து விடுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ஆனால் கர்நாடக முதல்வரோ, ‘பெங்களூர் மாநகரத்துக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது. அதற்கே காவிரியில் தண்ணீர் இல்லை. நான் எப்படி தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட முடியும்’ என்று கையை விரித்து விட்டார். மீண்டும் உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்கிறது தமிழக அரசு. ஆனால் 46 ஆண்டுகால காவிரி நதி நீர் பிரச்சினை என்றைக்கு முடிவுக்கு வருமோ என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating