மைத்திரி வைத்திருப்பது பிரம்மாஸ்திரமா?
மாத்தறையில் நடந்த ஐ.தே.க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த எச்சரிக்கை தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும், சூடான விவாதங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது.
கூட்டு எதிரணியினர் புதிய கட்சியை ஆரம்பித்தால், அவர்களைப் பற்றிய இரகசியங்களை அம்பலப்படுத்த நேரிடும் என்றும், அதற்குப் பின்னர் அவர்களால் வீதியில் நடமாடக்கூட முடியாமல் போகும் என்றும் ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நேரடியாக யாரையும் இலக்கு வைத்து விடுக்கப்பட்டதா அல்லது பொதுப்படையாக விடுக்கப்பட்டதா என்பது தெளிவற்றதாகவே உள்ளது.
அதாவது மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட தனிப்பட்ட எச்சரிக்கையா? அல்லது அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என்பதே குழப்பமாக உள்ளது. அதைவிட, ஜனாதிபதியிடம் உள்ள இரகசியம்தான் என்ன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
அந்த இரகசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிந்தால் வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்திருக்கிறார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில. ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் அந்த இரகசியத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
அதேவேளை, ஜனாதிபதி கூறிய அந்த இரகசியம் என்ன என்று ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விதமாகக் கற்பனை செய்து எழுதத் தொடங்கியுள்ளன. எனினும், ஊடகங்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட இரகசியம் ஏதோ ஜனாதிபதியிடம் இருப்பதாகவே தோன்றுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ள அந்த இரகசியம், கட்சியைக் காட்டிக்கொடுத்த சம்பவமாக இருக்கலாம்ƒ போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களாக இருக்கலாம்ƒ நாட்டுக்கு கேடு விளைவித்த விடயமாக இருக்கலாம். இப்படி எதுவாகவும் அந்த இரகசியம் இருக்கக் கூடும்.
எவ்வாறாயினும் அந்த இரகசியங்கள் ஒன்றும், சாதாரணமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அவற்றை வெளியில் கொண்டு வந்தால் அவர்கள் வீதியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய இரகசியமாக அது இருந்தால் மாத்திரமே அவ்வாறான நிலை ஏற்படக்கூடும். எனினும், நிச்சயமாக, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அவரால் அல்லது அவரது குடும்பத்தினரால், அவரது சகாக்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மோசமான செயலையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உயர் இரகசியமாகக் காப்பாற்றி வருகிறார் போலத் தெரிகிறது.
ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஏகப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை தற்போதைய அரசாங்கம் சுமத்தி விட்டுள்ளது. பில்லியன் கணக்கான மோசடி, ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்புகளாகவும் வேறு சொத்துக்களாகவும் அவை பதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன. டுபாய் வங்கி, சீசெல்ஸ், உகண்டா, அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளிலும் இந்த பணம் முதலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும், இதுவரையில், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டதாக கூறப்பட்ட பில்லியன் கணக்கான ரூபாவைக் கண்டுபிடிக்க, அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளின் உதவிகளையும் கூட மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பெற்றுக் கொண்டிருந்தது.
ஆனாலும், அந்த நிதிக்குற்றப் புலனாய்வு நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டளவுக்கு வெற்றிகரமானதாக அமையவில்லை. பதுக்கப்பட்ட சொத்துக்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் எதிர்நோக்கப்படுகிறதா? அல்லது, அவற்றை மீட்பதற்கு அரசாங்கம் தயங்குகிறதா என்பது தெரியவில்லை.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அரசாங்கத்தினால் சுமத்தப்பட்ட பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. டுபாய் வங்கி விடயத்தில் அரசாங்கத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன ஏற்கனவே செய்தியாளர் மாநாட்டில் ஒப்புக் கொண்டிருந்தார்.
டுபாய் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் பற்றிய இரகசியங்களை கண்டறிவதற்கு வங்கியிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். அதற்காக அந்தப் பதுக்கல் குற்றச்சாட்டு பொய்யானதாகி விடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், வெளிப்பார்வைக்கு அந்தக் குற்றச்சாட்டு வலுவிழந்து போயிற்று. வெறுமனே குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் மாத்திரம், முன்னைய ஆட்சியாளர்கள் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டு விடாது.
ஏனென்றால், இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த நிலையிலும் தான், மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியினரும் துணிச்சலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது ஆட்சிக்கால மோசடிகள், முறைகேடுகளை நிரூபிக்க முடியாது என்ற அதீத தைரியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அது இந்த அரசாங்கத்தின் பலவீனம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறிப்பிட்டிருக்கின்ற இரகசியமும் இதுபோன்ற நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகளாகவே இருந்தால், அவை எதுவும் நாட்டு மக்களால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படப் போவதில்லை.
அவ்வாறான ஆதாரமற்ற நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்வு என்ற வகைக்குள்ளேயே அடக்கப்பட்டு விடும். இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றாகவே தெரியும். அதிதீவிர அரசியல் களத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் அவருக்கு இது போன்ற சாதாரண விடயங்கள் கூடத் தெரியாமல் போகாது.
எனவேதான், ஜனாதிபதி கூறிய அந்த உண்மை அல்லது இரகசியம் மிகவும் பாரதூரமான ஒன்றாக, இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று நம்பமுடிகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தாம் எவ்வாறு நடத்தப்பட்டேன் என்பது தொடர்பாக, ஏற்கெனவே பல இரகசியங்களை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு இடமளித்து விட்டு, ஊடகங்களுக்கு அவர் வழங்கிய பேட்டி, மஹிந்தவின் அடுத்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதுபோல, வேறு சில சந்தர்ப்பங்களிலும் அவர், முன்னைய ஆட்சிக்காலத்தில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவமானங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்னும் பல விடயங்களை இப்போது கூற விரும்பவில்லைƒ என்றோ ஒருநாள் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதுபோலத்தான், இந்த இரகசியமும் இருக்க வேண்டும். மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கின்ற மிகப்பெறுமதியான அந்த உயர் இரகசியம் என்ன என்பது மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாக இருக்கிறது.
இதுவாக இருக்கலாமோ? அதுவாக இருக்கலாமோ? என்று ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், எதற்காக இந்த இரகசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறார் என்பது இன்னொரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் இதுவரையில் மிகக் கடினமான பல சூழல்களில், முரண்பட்டு வந்திருக்கின்றனர். ஆனாலும், இந்த இரகசியம் மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, இதனைத் தனது பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்த மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதிகார ஆசையில் இருந்து விடுபடாத மஹிந்த ராஜபக்ஷ, என்றோ ஒருநாள் தனக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுப்பார் என்பது, மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியாமல் இருக்காது. எனவேதான், அவரை அடக்குவதற்கான இறுதி அஸ்திரமாக இந்த இரகசியத்தை அவர் மறைத்து வைத்திருக்கலாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, புதிய கட்சியை உருவாக்கும் முனைப்பில் மஹிந்த ராஜபக்ச இருக்கின்ற நிலையில்தான், அந்த இரகசியத்தை அம்பலப்படுத்துவேன் என்ற எச்சரிக்கையை ஜனாதிபதி வெளியிட்டிருக்கிறார்.
அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைய விடாமல் பாதுகாப்பதற்கான கவசமாகவே, மைத்திரிபால சிறிசேன இந்த இரகசியத்தை பயன்படுத்த முனைகிறார். இது ஒருவகையில் கட்சிசார் நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமாகவும் பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கைக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது, அச்சுறுத்தல்கள்தான் புதிய கட்சிகளை உருவாக்குவற்கான ஊக்கங்களாக அமைந்திருப்பதாகவும் புதிய கட்சியை ஆரம்பிப்பது அனைவருக்கும் உள்ள உரிமை என்றும் பட்டும் படாமல் கூறியிருக்கிறார்.
அதாவது, தான் கட்சியை ஆரம்பிக்கப் போகிறேன் என்று கூறாமல், யாரோ உருவாக்கப் போகிறார்கள் என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது புதிய கட்சியை உருவாக்குவதில் அவருக்கு உள்ள தயக்கத்தை காட்டுகிறது.
அதுமாத்திரமன்றி, ஜனாதிபதி கூறிய அந்த இரகசியம் பற்றி, மஹிந்த ராஜபக்ஷ வாய் திறக்கவுமில்லை. இதிலிருந்து மைத்திரியின் கையில் உள்ள அந்த இரகசியம், பிரம்மாஸ்திரமாக இருப்பதற்கான வாய்ப்புகளை அவ்வளவு இலகுவாக நிராகரிக்க முடியவில்லை.
மைத்திரி வெளியிடப் போகும் இரகசியம் என்ன?
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating