ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய, “சிவராசன்” ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள், ஆதாரங்களுடன்!! -10)
நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை வந்திருந்த காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றித்தான்.
நளினிக்கு இலங்கைத் தமிழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் அனுதாபமும் ஈடுபாடும் உண்டாவதற்கு முதன்மையான காரணம் முருகனின் பேச்சுகளே.
ஒரு புறம் நளினியுடனான காதலை வளர்க்கத் தொடங்கிய அதே சமயம், முருகன் தான் வந்த பணியையும் மறக்கவில்லை.
பொட்டு அம்மான், சுசீந்திரன், ரவி என்ற இரண்டு உதவியாளர்களை டிரெயின் செய்து முருகனுக்கு உதவியாக இருக்கும்படி அனுப்பிவைத்திருந்தார்.
முருகன், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான உளவு அமைப்பை மிக வலுவாக வேரூன்றச் செய்யும் பணிகளை ஆரம்பித்து, நிறையத் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, பொட்டு அம்மான் கேட்ட தகவல்களை அவருக்கு அனுப்பத் தொடங்கினார்.
சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழக உளவுப் பிரிவுக்கு முருகன் பொறுப்பு.
அந்த வகையில் அவருக்கு பாஸ், பொட்டு அம்மான். அதே சமயம், ராஜிவ் காந்தி படுகொலை என்னும் அசைன்மென்டுடன் தமிழகத்துக்கு வந்திருந்த சிவராசனுக்கும் வேண்டிய உதவிகள் செய்யவேண்டியது முருகனின் கடமை.
அந்த அசைன்மென்டைப் பொருத்தவரை சிவராசன்தான் அவருக்கு பாஸ். தனது பணி எத்தகையது, தனது பொறுப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது முருகனுக்கு நன்றாகத் தெரியும்.
சிறு பிசகும் இல்லாமல் சொன்ன வேலையை முடிக்க முனைப்புடன் செயல்பட ஆரம்பித்தார். அவரது முதல் திட்டம், கொடைக்கானலில் ஒரு டிரெயினிங் கேம்ப் அமைப்பதாக இருந்தது!
எங்கே முடிக்கலாம்?
எ ந்த ஒரு இயக்கமும் தமிழகத்தில் பயிற்சி முகாம் என்று சிந்திக்கத் தொடங்கும்போதே கொடைக்கானலை யோசிப்பது தவிர்க்க முடியாத விஷயம்.
உல்ஃபா போன்ற வடகிழக்கு மாநிலத் தீவிரவாத இயக்கம் கூட தமிழ்நாட்டில் கொடைக்கானலைத்தான் தமது பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
இதற்கு மிக எளிய காரணங்கள்தாம்.
முதலாவது, அந்த மலைப்பகுதியின் அடர்த்தி. யாரும் எளிதில் ஊடுருவ முடியாத தன்மை.
மறைவாகச் செயல்பட வசதியான இயற்கைச் சூழல். மக்கள் தொகை குறைவு. பிரச்னையில்லாத இடம்.
முருகனும் தமிழகத்தில் தங்கள் பணிகளைச் செய்ய ஆள்களைத் தயார் செய்வதற்குக் கொடைக்கானல்தான் சரியான இடம் என்று முதலில் நினைத்தார்.
இலங்கையிலிருந்து வரும்போது எடுத்து வந்திருந்த அந்த இரண்டு தங்கக் கட்டியை, புலிகள் வழக்கப்படி தம்பியண்ணாவிடம் கொடுத்து பணமாக மாற்றினார்கள்.
பத்து முதல் பதினைந்து லட்சம் ரூபாய் வரை அதில் கிடைத்தது.
அந்தப் பணத்தை வைத்து கொடைக்கானலில் ஒரு பண்ணையை விலைக்கு வாங்கி விடுவது.
தமிழ் நேஷன் ரீட்ரைவல் ஃபோர்ஸ் என்று ஒரு போர்டு மாட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து தங்கள் வேலையைப் பார்ப்பது. கொடைக்கானல் ஆதிவாசி இளைஞர்களைப் பிடித்து பயிற்சி கொடுத்து அவர்களைக் கொண்டு ராஜிவ் காந்தியைக் கொலை செய்வது.
இதுதான் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்த திட்டம். முருகன், சிவராசன், பொட்டு அம்மான் மூன்று பேருக்குமே இது தெரியும்.
இந்தத் திட்டத்தில் எந்தப் பிரச்னையும் இருக்காது, கொலை நடந்த பிறகும் புலன் விசாரணை என்று ஆரம்பித்தால் கொடைக்கானல் ஆதிவாசிகள்தாம் மாட்டுவார்கள், தங்களை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று கணக்கிட்டு, பரபரவென்று அதற்கான பணிகளைத் தொடங்கினார்கள்.
ஆனால் இதனைக் கேள்விப்பட்ட உடனேயே பிரபாகரன் பொட்டு அம்மானிடம் உடனே இந்த ஏற்பாட்டைக் கைவிடச் சொல்லி உத்தரவிட்டார்.
‘கூடவே கூடாது. இந்திய மண்ணில், முன்னாள் இந்தியப் பிரதமரை நாம் கொல்லத் திட்டமிட்டிருக்கிறோம். நாம் என்னதான் பயிற்சியும் பணமும் கொடுத்தாலும் இந்தியர்கள் அதைச் செய்ய விரும்பமாட்டார்கள்.
விஷயம் தெரிந்ததும் விலகிவிடுவார்கள். அல்லது காரியத்தைக் கெடுப்பார்கள். கண்டிப்பாக இந்தியர்கள் யாரும் இந்தச் செயலில் ஈடுபடவே கூடாது.
அவர்களுக்கு இறுதிவரை இந்தத் திட்டம் தெரியவும் கூடாது. கொலைப் பணியை நாம்தான் செய்தாக வேண்டும். இது நமது பணி. நமக்குத்தான் இதன் முக்கியத்துவம் தெரியும், புரியும்.
இந்தியர்களை ரகசியமாக நமது தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, திட்டத்துடன் அவர்களை நேரடியாகச் சம்பந்தப்படுத்தவே கூடாது!
யாராவது ஓர் இந்தியப் பெண்ணை உதவிக்கு வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் கொலையை நமது தற்கொலைப் படைப் பிரிவினர்தாம் மேற்கொண்டாக வேண்டும்.’
அந்த ‘யாராவது ஓர் இந்தியப் பெண்ணை உதவிக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்னும் உத்தரவுக்கான விடைதான் நளினி! ‘எதைச் செய்தாலும் அந்த ‘இந்தியப் பெண்ணின்’ போர்வையில் செய்வது.
ஆனால் செய்வது நாமாக இருக்கவேண்டும். இப்படிச் செய்வதன்மூலம் நாமும் மாட்டிக்கொள்ள மாட்டோம், பிரச்னையில்லாமல் பணியும் முடியும்’ என்று பிரபாகரன் சொன்னார்.
அதன்படியே திட்டம் வகுக்கப்பட்டது. மறுபுறம், ராஜிவ் காந்தியை எந்த இடத்தில் வைத்துக் கொல்லலாம் என்று தீர்மானிக்கும் பொறுப்பு சிவராசனிடம் தரப்பட்டது.
சிவராசனின் நண்பரான தோப்புத்துறை ஜகதீசனுக்கு சகோதரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் கல்யாண சுந்தரம்.
இந்தக் கல்யாண சுந்தரம் டெல்லியில் ‘பிரசிடெண்ட் டிராவல்ஸ்’ என்னும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். பிரசிடெண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்றால், மணி சங்கர ஐயரின் மனைவி.
அந்த வகையில் தோப்புத்துறை ஜகதீசனுக்கும் மணி சங்கர ஐயரை நன்றாகத் தெரியும். சிவராசன் போட்ட கணக்கு இதுதான். தோப்புத்துறை ஜகதீசன் மூலம் மணி சங்கர ஐயரை நெருங்கி, பரிச்சயப்படுத்திக்கொள்வது.
அவர் மயிலாடுதுறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவர்.
தவிரவும் ராஜிவ் காந்திக்கு நெருங்கிய நண்பர். என்னதான் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, பிரசாரத்துக்கு ராஜிவ் தமிழகம் வரும் வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், மணி சங்கர ஐயர் எப்படியாவது வரவழைத்தே தீருவார் என்று சிவராசன் நம்பினார்.
மணி சங்கர ஐயரும் அப்போது தனது ஆதரவாளர்களிடம் ‘ராஜிவ் கண்டிப்பாக வருவார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
ராஜிவ் காந்தி தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் வர முடியாது போனால்கூட கண்டிப்பாகத் தமது நண்பருக்காக மயிலாடுதுறை தொகுதிக்கு வராமல் இருக்க மாட்டார்!
அப்படி வரும்போது மணி சங்கர் ஐயர் உதவியுடன் ராஜிவை நெருங்க முடியும். மாலையிட முடியும். விஷயத்தை முடிக்க முடியும்.
காரியத்தை முடித்துவிட்டுத் தப்பிக்கவும் மயிலாடுதுறை மிகச் சிறந்த இடம்.
சிறிது தூரப் பயணத்திலேயே வேதாரண்யத்தைத் தொட்டுவிட முடியும். அங்கிருந்து இலங்கை செல்வது வெகு சுலபம்.
இவ்வாறு சிவராசன் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மே மாதத் தொடக்கத்திலேயே மயிலாடுதுறையில் ஒரு பொதுக்கூட்டத்தில், ‘பிரசாரத்துக்கு பத்தாம் தேதி ராஜிவ் மயிலாடுதுறை வருகிறார்’ என்று மணி சங்கர ஐயர் அறிவித்தார்.
இந்தச் செய்தி மறுநாள் காலை தினத்தந்தி நாளிதழில் வெளியானது.
இது தமிழ்நாடு காவல் துறை இயக்குநருக்கே வியப்பாக இருந்தது. அவர் உடனே க்யூ பிராஞ்ச் பிரிவை அழைத்து, இப்படிச் செய்தி வந்திருக்கிறதே, நமக்கு ஏதாவது தகவல் தெரியுமா என்று கேட்டார்.
க்யூ ப்ராஞ்ச் அதிகாரிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியைத் தொடர்புகொண்டு தினத்தந்தி செய்தி பற்றி விசாரித்தார்கள்.
வாழப்பாடி அடித்துச் சொன்னார். கண்டிப்பாக ராஜிவ் வரும் வாய்ப்பே இல்லை! உண்மையில் ராஜிவ் வருவதற்கு வாய்ப்பில்லாமல் இல்லை. அவர் வரவேண்டாம் என்று வாழப்பாடி ராமமூர்த்தி மிகவும் விரும்பியதுதான் காரணம்.
வாழப்பாடி ராமமூர்த்தி
தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலை அப்படிப்பட்டது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு அப்போது கவர்னர் பர்னாலாவின் ஒப்புதலே இல்லாமல் ஜனாதிபதி வெங்கட்ராமனால் கலைக்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.கவுடன் தேர்தல் கூட்டணி வைத்தால் காங்கிரசுக்கு நல்லது என்று எடுத்துச் சொல்லி வாழப்பாடிதான் முன்னின்று அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இச்சூழலில், ராஜிவ் காந்தி தமிழ்நாடு வருவாரேயானால், ஏதாவது விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்கலாம். வெறுப்பில் இருக்கும் தி.மு.க. தொண்டர்கள் குறைந்தபட்சம் கறுப்புக்கொடி காட்டினால்கூட தர்ம சங்கடம்தான்.
எனவே அவர் ராஜிவிடம், ‘நீங்கள் இப்போது தமிழ்நாடு வரவேண்டிய அவசியமே இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும் நன்றாக வேலை செய்திருக்கிறோம்.
நாம் ஜெயிப்பது உறுதி. வேறு பலவீனமான மாநிலங்களில் நீங்கள் கவனம் செலுத்தலாம். தமிழகத்தைப் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருந்தார்.
ராஜிவுக்கு இது பற்றிப் பெரிய அபிப்பிராயமோ, அபிப்பிராய பேதமோ கிடையாது. அவருக்குத் தமிழ்நாடு முழுதும் சுற்றாவிட்டாலும் மூன்று தொகுதிகளுக்காவது தான் வரவேண்டியது அவசியம் என்று நினைத்தார்.
முதலாவது அவர் அன்புடன் ‘ஆன்ட்டி’ என்று அழைக்கும் மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர்.
அடுத்தது, மணி சங்கர ஐயரின் மயிலாடுதுறைத் தொகுதி.
மூன்றாவது ப. சிதம்பரத்தின் சிவகங்கை. மூன்று பேரும் அவருக்கு மிகவும் முக்கியமானவர்கள்.
கட்சியைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்கள். தேர்தல் பிரசாரத்துக்குத் தாம் போகாவிட்டால் வருத்தப்படக்கூடியவர்கள்.
அவர்கள் தொகுதிகளுக்கு மட்டுமாவது போய்விட வேண்டும் என்று ராஜிவ் நினைத்தார். ஆனால் வாழப்பாடி விடாமல் அவரை வரவேண்டாம், வரவேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
இச்சமயத்தில் பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுகள் பல மாநிலங்களில் முடிவடைந்திருந்தன.
ஒரிஸா, தமிழகமெல்லாம் இரண்டாம் கட்டத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருந்த மாநிலங்கள். காங்கிரஸ் கட்சியில் அன்றைக்கு ராஜிவ் காந்தியின் தேர்தல் பிரசாரத் திட்டங்களை வகுக்கும் பொறுப்பு மார்க்கரெட் ஆல்வாவிடம் இருந்தது.
அவர், இரண்டாம் கட்டத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் தொகுதிகளையும், அதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களையும் ஒரு பட்டியலிட்டு, 13.5.91 அன்று ராஜிவுக்கு அனுப்பினார்.
அதிகமான தொகுதிகள், மிகக் குறைவான பிரசார நாள்களே இருந்த நிலையில் மார்க்கரெட் ஆல்வாவே சில தொகுதிகளைக் குறிப்பிடாமல், முக்கியம் என்று அவர் நினைத்த தொகுதிகளை மட்டும் பட்டியலில் குறிப்பிட்டு, ‘இவற்றில் எங்கெங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
ஆனால் தமிழகத்துக்கு ஒரு நாள்தான் தர முடியும்’ என்று ராஜிவிடம் கேட்டார்.
ராஜிவ் காந்தி பட்டியலை வாங்கி வேகமாக ஒரு பார்வை பார்த்தார். அதில் தமிழகத் தொகுதிகளுள் வாழப்பாடி ராமமூர்த்தியின் கிருஷ்ணகிரி, மணி சங்கர ஐயரின் மயிலாடுதுறை, சிதம்பரத்தின் சிவகங்கை எல்லாம் இருந்தன.
ஒன்று மட்டும் இல்லை. ராஜிவ் மெலிதாகப் புன்னகை செய்தார். Include Aunty’s Constituancy என்று எழுதிக் கையெழுத்திட்டுத் திருப்பிக் கொடுத்தார்.
அது மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர்.
ஆன்ட்டி
மா ர்க்கரெட் ஆல்வாவுக்கு அது தர்ம சங்கடம்தான். ஆனாலும் ராஜிவின் விருப்பம் என்பதால் மீண்டும் சுற்றுப்பயணத் திட்டத்தைச் சற்று மாற்றி அமைத்து 17.5.91 அன்று வேறொரு சார்ட் அனுப்பினார்.
அதன்படி ராஜிவின் தமிழ்நாடு சுற்றுப்பயணக் காலம் ஒன்றரை நாள்களாக நீட்டிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ராஜிவ், ‘கண்டிப்பாக ஒன்றரை நாள் முடியாது. ஒருநாள்தான்.
ஆனால் ஆன்ட்டியின் தொகுதி அதற்குள் வரவேண்டும். வேண்டுமானால் பிரபுவின் தொகுதியை நீக்கிவிடலாம்.’ என்று சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லை என்பது தவிர, இதனால் வேட்பாளர்களுக்கு மனச்சங்கடம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் மார்க்கரெட் ஆல்வாவுக்கு உண்டு.
அதன்படியே திட்டம் தயாரானது. இருபதாம் தேதி புவனேஸ்வரில் பயணம் செய்யும் ராஜிவ், மறுநாள் விசாகப்பட்டினத்தில் இறங்கி, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து, 21ம் தேதி இரவு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபெரும்புதூருக்கு வருவார்.
மரகதம் சந்திரசேகரின் தொகுதியில் பொதுக்கூட்டம். முடிந்ததும் இரவு ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை ஏழு மணிக்கு அதே ஹெலிகாப்டரில் பாண்டிச்சேரி.
அங்கிருந்து மயிலாடுதுறை. மயிலாடுதுறையிலிருந்து சிவகங்கை. அங்கிருந்து கிருஷ்ணகிரி வழியே பெங்களூர். பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் புதுடெல்லி என்று இறுதிப் பட்டியல் தயாராகி அறிவிக்கப்பட்டது.
பயணத் திட்ட விவரத்தைக் கண்டதுமே சிவராசன் யோசிக்கத் தொடங்கினார். திட்டமிட்டிருந்தபடி மயிலாடுதுறையில் ராஜிவைக் கொல்வது சிரமம்.
ஏனெனில் ராஜிவ் மயிலாடுதுறைக்கு வருவது பகலில். பகலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரச்னையில்லாமல் காரியத்தை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
முடித்தாலுமேகூட, தப்பிப்பது அதைவிட சிரமமாக இருக்கும். இரவு நேரக் கூட்டம்தான் சாதகம் என்று தீர்மானமாகத் தோன்றியது. எனவே வேறு வழியில்லை. 21ம் தேதி இரவு, ஸ்ரீபெரும்புதூர்தான்.
தொடரும்… –கே. ரகோத்தமன்
தொடரும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating