பம்பலப்பிட்டியிலிருந்து ஹெம்மாத்தகம வரை ‘அந்த 4 நாட்கள்…!!
இரவு சாப்பாட்டுடன் வந்திருக்கின்றேன். படலையைத் திறம்மா’ என தன்னுடைய கணவனின் குரலை அலைபேசியில் கேட்டுவிட்டு ஓடோடிவந்த மனைவி, வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து படலையைத் திறந்தபோது, அவ்விடத்திலிருந்த வாகனமொன்று விர்றென்று கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்துவிட்டது.
படலையை இழுத்து மூடிய நான், படபடக்க கணவனின் அலைபேசிக்கு அழைப்பெடுத்தபோதும். அது, ‘நீங்கள் அழைக்கும் நபர் தற்போது தொடர்பில் இல்லை’ என்றே பேசியுள்ளது.
விடியும் ஒவ்வொரு பொழுதுகளும் என்ன நடக்குமோ என்ற காலம் மலையேறிவிட்டதாய் கூறுவதில் அர்த்தமில்லை. இருளும் ஒவ்வொரு இரவுகளும், காரிருளாகும் என்பதற்கு அர்த்தம் கற்பிப்பவனவாகவே நாட்டில் நடக்கும் சம்பவங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
காணாமற் போனவர்களை கண்டறிவதற்கான ஆணைக்குழுக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மேலான கேள்விகளுக்கு, இறுதிவரையிலும் கண்ணீரையே பதிலாக்கிக்கொண்டிருக்கின்றனர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உறவுகள்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் நிலவியிருந்த யுத்தம், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், அச்சம், பயம், சந்தேகம், வீடுகளை விட்டு வெளியேறி, வெளியேறியதை போலவே திரும்புதல் போன்ற சம்பவங்களெல்லாம் என்னவோ, முடிவுக்கு கொண்டுவரப்படாத நிலைமையே இருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் கடந்த 11ஆம் திகதியன்று, பெரும் நெருக்கடியான சூழ்நிலையில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரின் கையொப்பத்துடன் சட்டமாக்கப்பட்டது.
இந்த அலுவலகம், நல்லாட்சிக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவியளிப்பதற்காக நிறுவப்படுகின்றதா? அல்லது 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர், இடம்பெறுகின்ற காணாமல் ஆக்கப்படுதல் அல்லது கடத்தி சடலங்களாக மீட்கப்படுதல் போன்ற சம்பவங்களினால் பாதிக்கப்படும் உறவினர்களுக்கு ஆறுதல் படுத்துவதற்கான முன்னேற்பாடா என்ற சந்தேகம் வலுப்பெறத் தொடங்கிவிட்டது.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் கட்டவிழ்க்கப்பட்டிருந்த ஆட்கடத்தல்கள், வெள்ளை வான் கலாசாரம், கப்பம் கோரல்கள் மற்றும் கிரீஸ் மனிதர்களின் நடவடிக்கைகளால் விரக்திக்குள்ளான மக்கள் தான், இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் வழிசமைத்தார்கள். நாட்டில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அச்சம், பீதியற்ற ஜனநாயகச் சூழலை உருவாக்கி, இருண்ட யுகத்துக்கு முடிவு கட்டுவதற்குமான வரத்தையே, மக்கள் அளித்தார்கள். இந்த வரத்தால், நாட்டில் நிலவிய அச்சம், பீதி என்பன நீங்கி, ஜனநாயகக் காற்றை மக்கள் சுவாசிக்கத் தொடங்கிய போதிலும், சிற்சில தருணங்களில், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்களும் அரங்கேறாமலில்லை என்பது தான் யதார்த்தமாகும்.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த மொஹமட் சியாம் என்ற வர்த்தகர், கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம், தொம்பே பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு, உயர்நீதிமன்ற விசேட நீதியரசர்கள் குழாமால், மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பம்பலப்பிட்டியைச் சேர்ந்த மற்றுமொரு வர்த்தகரும் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்விரு படுகொலைச் சம்பவங்களும், ஒன்றோடொன்று தொடர்புபடாத போதிலும், படுகொலை செய்யப்பட்ட இருவருமே, பம்பலப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும் முஸ்லிம் வர்த்தகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனெல்ல – ஹெம்மாத்தகம பிரதேசத்திலிருந்து, புதன்கிழமை (24) மாலை, சடலமொன்று மீட்கப்பட்டது. கம்பளை – ஹெம்மாத்தகம பிரதான வீதியின் ருக்குலுகம என்ற கிராமத்தின் பிரதான வீதிக்கு பள்ளத்தில் கிடந்த நிலையிலேயே, அச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அப்பகுதிக்கு, விறகு வெட்டச் சென்ற பிரதேசவாசியொருவர், அப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதைக் கண்டு, பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, சடலம் மீட்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக அனுமானிக்கக்கூடிய வகையில், அச்சடலம் வீங்கிக் காணப்பட்டுள்ளதுடன், அழுகிய நிலையில் புழு வைக்கப்பட்டிருந்துள்ளது. அவ்விடத்தில் மூக்கை அரிக்கும் துர்நாற்றமும் வீசியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாருக்கோ, சடலத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
இது குறித்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பம்பலப்பிட்டியில் அண்மையில் கடத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர்கள் சிலருடன் விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு பறந்தது. பொலிஸாரின் சந்தேகமும் உறுதியாகும் வகையில், உறவினர்கள் அடையாளம் காட்டிவிட்டனர்.
வர்த்தகர் அணிந்திருந்த ஆடைகளில் சில, சடலத்துக்கு அருகில் கிடந்துள்ளன. ஆபரணங்கள் அப்படியே இருந்துள்ளன. இருப்பினும், சடலம் மீட்கப்பட்ட இடத்தில் வைத்தே, அவ்வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது, வேறு இடத்தில் வைத்து படுகொலை செய்துவிட்டு, சடலத்தை அவ்விடத்துக்கு கொண்டுவந்து போடப்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரையில் தகவலில்லை.
இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரி, இனந்தெரியாத நபர்கள் சிலரால், பம்பலப்பிட்டி, கொத்தலாவல ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மட் சகீப் சுலைமான் என்ற 29 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
இந்தோனேசியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து துணிகளை இறக்குமதி செய்து, வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அந்த வர்த்தகர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். சம்பவ தினமான 21ஆம் திகதியன்று இரவு, பம்பலப்பிட்டியிலுள்ள உணவகமொன்றில், தனது மனைவிக்காக சில உணவுகளைக் வாங்கிக்கொண்டு செல்வதற்காகச் சென்றுள்ளார்.
டுபாயிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்னரே நாடு திரும்பிய அவர், ஒரு மாதம் இங்கு தங்கிவிட்டுச் செல்வதே, அவருடைய நோக்கமாக இருந்துள்ளது. சுலைமான், தனது நண்பரொருவருடன் கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் பார்ட்டியொன்றுக்குச் சென்றுவிட்டே, அன்றையதினம் வீடு திரும்பியதாக அறியமுடிகின்றது. அவரது தந்தையும் தாயும், இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுவிட்டு, கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமையன்று தான் நாடு திரும்பியுமுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று இரவு 11.30 மணியிருக்கும், தனது மனைவிக்குக்கு, அவரது அலைபேசியிலிருந்து அழைப்பொன்றை மேற்கொண்டுள்ள சுலைமான், சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்திருப்பதாகவும் வீட்டின் பிரதான நுழைவாயிலைத் திறக்குமாறும், கூறியுள்ளார். அழைபேசியை துண்டித்துவிட்டு, வீட்டுக்குள்ளிருந்து வந்த மனைவி, பிரதான நுழைவாயிலைத் திறக்கும்போது, நுழைவாயிலுக்கு முன்னாலிருந்து, மிகவும் வேகமாக, வாகனமொன்று புறப்பட்டுச் சென்றுள்ளதை அவதானித்துள்ளார். அவரது வாகனம், நுழைவாயிலுக்கு முன்னாலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. ஏதோ விபரீதம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், படலையை இழுத்துமூடிவிட்டு, வீட்டுக்குள் சென்று தன்னுடைய கணவனின் அலைபேசிக்கு அழைப்பு எடுத்தபோது. அது செயலிழந்திருந்தது.
இதுதொடர்பில், உறவினர்களின் உதவியுடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் வந்து விசாரணைக்கு உட்படுத்திய போதுதான், பாரிய விபரீதமொன்று ஏற்பட்டுள்ளமைக்கான தடயங்கள் தென்பட்டுள்ளன. மனைவிக்காக அவர் வாங்கிவந்த சாப்பாட்டுப் பார்சலும், சுலைமானின் கைக்கடிகாரமும் வாகனத்துக்கு வெளியே வீசப்பட்டு விழுந்து கிடந்துள்ளது.
மோப்பநாய்களுடன் சென்ற பொலிஸார், சுலைமானின் வாகனம் இருந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவில், இரத்தக் கறைகள் இருப்பதை அவதானித்துள்ளனர். கடத்தல்காரர்களுடன் அவர் போராடியதை அடுத்தே, அவரது கைக்கடிகாரம் கழன்று விழுந்திருக்கலாம் என்றும் போராட்டத்தினால் ஏற்பட்ட காயத்தினாலேயே இரத்தம் சிந்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் அன்று சந்தேகம் வெளியிட்டனர்.
இது இவ்வாறிருக்க, 22ஆம் திகதி முற்பகல் 9 மணியிருக்கும், சுலைமானின் தந்தையினுடைய அலைபேசிக்கு, இனந்தெரியாத நபரொருவரிடமிருந்து அழைப்பொன்று கிடைத்துள்ளது. ‘உங்களது மகனைக் கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டுமாயின், இரண்டு கோடி ரூபாயை, கப்பமாக வழங்குங்கள்’ என்று கூறிவிட்டு, அழைப்பைத் துண்டித்துள்ளார். கேகாலை பிரதேசத்திலுள்ள பொதுத் தொலைபேசி அழைப்புக் கூண்டிலிருந்தே, அந்த அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை, பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர்.
அதே இலக்கத்துக்கு, மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய போதிலும், அவ்வழைப்புக்கு பதிலே இல்லை. எவ்வாறாயினும், சுலைமானை விடுவிப்பதற்காக கப்பம் கோரிய எவரும், அந்த ஒரேயொரு அழைப்பைத் தவிர, வேறு எந்த அழைப்பையும் மேற்கொள்ளவில்லை. அதன் பின்னரே, அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
சுலைமான் தொடர்பில், புதன்கிழமை பிற்பகல் வரையில், எந்தவிதத் தகவலும் இல்லை. இந்நிலையில், தன்னுடைய மகன் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் ரூபாயினைச் சன்மானமாக வழங்குவதாக, அவரது தந்தை, ஊடகங்கள் வாயிலாக, செய்தியொன்றை வெளியிட்டார். அச்செய்திக்கு பின்னரே, சுலைமான் படுகொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் அப்போது தெரிவித்திருந்தனர். இருப்பினும், கப்பம் கோரப்பட்ட தினமே, அந்த வர்த்தகர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று, அச்சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதை அடுத்து,
பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மாவனெல்ல பிரதேசத்தையும் அங்குள்ள வீதிகளையும் நன்கு அறிந்த எவரேனும், இந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டனர். கப்பம் கோரியவர்கள், எப்பிரதேசத்திலிருந்து அழைப்பை மேற்கொண்டார்களோ, அப்பிரதேசத்தில் இருந்து தான், சுலைமானின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரான சுலைமானின் இடுப்புப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாகவும் அவர் அணிந்திருந்த டெனிம் காற்சட்டை கீழே இழுக்கப்பட்ட நிலையில், அவரது உள்ளாடை தெரியும் வகையிலேயே சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். பிறப்புறுப்பின் சில இடங்களும் ஆங்காங்கே வீங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், சடலத்தில் எந்தவொரு வெட்டுக் காயமோ அல்லது, துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களோ காணப்படவில்லை என்று கூறிய சட்டவைத்திய அதிகாரி, பாரிய பொல்லு ஒன்றினால், தலையில் பலமாகத் தாக்கியதை அடுத்து, அவரது மூளை சிதைவடைந்து, அதிக இரத்தக் கசிவு ஏற்பட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்று கூறினார். எவ்வாறாயினும், குறித்த வர்த்தகர் கடத்தப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே, அவர் கொல்லப்பட்டு விட்டதாகவும், வர்த்தகரின் சடலத்தை நேற்றைய தினம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சட்டவைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
பாரியளவில், துணிகளை இறக்குமதி செய்து, வர்த்தகம் செய்துவந்த சுலைமானுக்கு, துணி வியாபாரத்தில் ஈடுபடும் மற்றுமொரு வர்த்தகரொருவர், நான்கு கோடி ரூபாயினைச் செலுத்த வேண்டியிருந்ததாகக் கூறப்படுகின்றது. தனது பணம் தொடர்பில் சுலைமான், பலமுறை ஞாபகப்படுத்திய போதிலும், அது குறித்து அந்த வர்த்தகர் அசட்டையீனத்தையே கையாண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில், சுலைமானால் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சுலைமானின் பிரதான கொடுக்கல் வாங்கல்காரர்களாக, தலைநகரில் உள்ள மொத்த விற்பனையாளர்களே காணப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அதுதவிர, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களிலுள்ள மொத்த துணி மற்றும் ஆடை விற்பனையாளர்களுடனும், சுலைமான், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் இருவருக்கு எதிராகவே, சுலைமான் பொலிஸ் முறைப்பாடுகளைச் செய்துள்ளார் என்றும் இவர்கள், தனக்கு கொடுக்க வேண்டியப் பணத்தைக் கொடுக்காமல் தன்னைப் புறக்கணிக்கின்றனர் என்றும், தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று, தனக்கு கிடைத்த காசோலையொன்று மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடியொன்று தொடர்பிலும், சுலைமானால் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தது. இம்முறைப்பாடுகள் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இப்பிரச்சினைகளுக்கும், சுலைமான் கடத்திக் கொலை செய்யப்பட்டதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில், இதுவரையில் 15 வர்த்தகர்களிடம் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, சுலைமானின் நண்பர்கள், சுலைமானால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தகர்கள் என்போரிடமும் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்கள், விசாரணைகள் முடிவடையும் வரையில் வெளிநாடு செல்லாதிருக்கும் வகையில், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், நேற்று வியாழக்கிழமையன்று, தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கிணங்கவே, மேற்படி வர்த்தகர்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. வர்த்தகரான சுலைமானின் அலைபேசியும் அவரது வாகனத்தின் சாவியையும், அவரைக் கடத்திச் சென்றவர்களே எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், சுலைமானின் அலைபேசிக்கு கிடைத்த அழைப்புகள், அதிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகள் தொடர்பிலும், விசாரணைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சுலைமானின் வீட்டுக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டிவி கெமராக்களின் பதிவுகளைக் கொண்டும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹம்மட் சகீப் சுலைமான் என்ற கதாபாத்திரம், தற்போது நாட்டின் பிரதான தலைப்பாக மாறியுள்ளது. அவர் பம்பலபிட்டியைச் சேர்ந்தவர் என்பதும் கோடீஸ்வர வர்த்தகர் என்பதுமே, அவரது செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணமாகியிருக்கிறது எனலாம். அவர் காணாமற்போன தினத்திலிருந்து சடலமாக மீட்கப்படும் வரையிலும், ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும், அவர் தொடர்பான செய்திகளையே பெரும்பாலும் வெளியிட்டன. இதுபோன்ற பங்களிப்பே, மொஹமட் சியாமின் கடத்தல் மற்றும் காணாமற்போன போதும் காணப்பட்டது.
இந்த இளம் வர்த்தகர், என்ன நோக்கத்துக்காகக் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. அதேநேரம், இக்கடத்தல் சம்பவம் குறித்து பலவித கேள்விகளும் எழுந்துள்ளன. 2015.01.08ம் திகதியோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஆட்கடத்தல், வெள்ளை வான் கலாசாரம் என்பன, மீண்டும் தலை தூக்குவதற்கான முன் சமிக்ஞையா இது? என்ற ஐயமும் ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் இவ்விடயம் குறித்து விரைவாகச் செயற்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது உரிய தரப்பினரின் கடப்பாடாகும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating