இத்தாலி: நிலநடுக்கத்தில் 10 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிப்பு..!!
இத்தாலியின் மையப் பகுதியில் பெருஜியா நகரம் உள்ளது. அதன் அருகேயுள்ள அமாட்ரிஸ் நகரில் இன்று அதிகாலை 3.36 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 1.36 மணி) கடும் பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் பூமி கடும் இரைச்சலுடன் குலுங்கியது. அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். பூகம்பம் ஏற்பட்டதை உணர்ந்த அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே அமாட்ரிஸ் நகரில் பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்தனர். பூகம்பத்தில் ரோடுகளில் பிளவு ஏற்பட்டு துண்டானது. பாலங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் உயிர் பிழைக்க ஓடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதற்கிடையே அமாட்ரிஸ் நகரில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் தெரிவித்துள்ளது.
பெருஜியாவில் இருந்து தென்கிழக்கே 76 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
இன்று ஏற்பட்ட பூகம்பத்தால் ஆங்காங்கே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அமாட்ரிஸ் நகரின் பாதி பகுதி முற்றிலும் அழிந்து விட்டது. ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ரோடுகள் துண்டானதால் மற்ற பகுதிகளுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அமாட்ரிஸ் நகர மேயர் செர்ஜியோ பிரோஷ்ஷி தெரிவித்துள்ளார்.
நகரில் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளாக காட்சியளிக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். ரோடுகள், பாலங்கள் இடிந்ததால் மீட்பு குழுவினர் உடனடியாக வருவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
இன்று அமாட்ரிஸ் நகரில் ஏற்பட்ட பூகம்பம் கடுமையானது என இத்தாலி பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சி அறிவித்துள்ளது. கடுமையான சேதங்கள் ஏற்பட்டதை உறுதி செய்துள்ளது.
மேலும் 10 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
அமாட்ரிஸ் நகரம் மலைகள் சூழ்ந்துள்ள பகுதி. எனவே பூகம்பத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண் மற்றும் பாதைகள் வீடுகளின் மீது சூழ்ந்து கிடப்பதாகவும் அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏற்பட்ட பூகம்பத்தால் தலைநகர் ரோம் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதற்கு முன்பு இத்தாலியில் கடந்த 2009-ம் ஆண்டில் அகுய்லா பகுதியில் 6.3 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 300 பேர் பலியாகினர்.
2012-ம் ஆண்டு மே மாதம் எமிலியா ரொமாக்னா பகுதியில் 10 நாட்கள் தொடர்ந்து ஏற்பட்ட நில நடுக்கத்தில் 23 பேர் உயிரிழந்தனர் 14 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating