உடலில் குண்டுத் துகள்களுடன் 410 பேர் விபரங்களை சபையில் சமர்ப்பித்தது கூட்டமைப்பு..!!
உடலில் குண்டுத்துகள்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.மற்றும் வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்து வரும் 410 பேரின் பெயர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் சமர்ப்பித்தது.
இந்தப் பட்டியலில் 132 பேர் பாடசாலை மாணவர்களாக உள்ளதாகவும் கூட்டமைப்பு சபையில் சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு,
கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் இவ்வாறு ஆபத்தான நிலையில் பலர் காணப்படுகின்ற நிலையில் அவர்களது விபரங்களை வழங்குவதற்கு அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் இழுத்தடிப்புக்களை செய்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று விலங்குத்தீனி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடைய உரையில் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஜூலை மாதம் எட்டாம் திகதி பாராளுமன்றில் பிரதமரிடத்திலான நேரடி கேள்வி நேரத்தின் போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது குண்டு மற்றும் ஷெல் வீச்சுக்களால் பாதிப்படைந்து அவற்றின் துகள்களுடன் ஆபத்தான நிலையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பல தரப்பட்டவர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு சத்திரசிகிச்சை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தேன். அச்சமயத்தில் விபரங்களை வழங்குமாறு பிரதமர் கூறியிருந்ததோடு மீள்குடியேற்ற அமைச்சர் சுகாதார அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து உள்நாட்டில் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். அத்தோடு தேவையேற்படின் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். அதன் பிரகாரம் நான் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு கடிதம் மூலம் விபரங்களை வழங்குமாறு கோரியிருந்தேன். 65 நாட்களாகிவிட்டன. வெறுமனே இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களே அந்த தகவல்களை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் யாழ்.மற்றும் வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 410 பேர் இவ்வாறு குண்டு துகள்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்களில் 132 பேர் பாடசாலை மாணவர்களாக உள்ளனர். அதிகளவானோர் இளம் வயதினைக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உடனடிச் சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஆகவே இந்தப்பட்டியலின் பிரகாரம் உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அதேநேரம் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்கள் இந்த விபரங்களை வழங்குவதற்கு பின்நிற்கின்றனர், அச்சப்படுகின்றனர். நல்லாட்சியிலும் மக்களுக்கான சேவையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் இவ்வாறு அச்சப்பட்டு பின்னிப்பதற்கான காரணம் என்ன? 65 நாட்கள் கடந்த நிலையில் அவர்கள் ஆகக்குறைந்தது எனது கோரிக்கைக் கடிதம் கிடைத்தது என்பதற்கு கூட பதிலளிக்கவில்லை என்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும்.
அவ்வாறிருக்கையில் தற்போது என்னால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முதற்பட்டியலில் கூறப்பட்டுள்ளவர்களின் விபரங்களுக்கு ஏற்ப அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டபோது விபரங்கள் கோரப்பட்டிருந்தன. அச்சமயத்திலும் விபரங்கள் என்னால் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதுபோன்று தற்போதே ஆட்சியாளர்களும் செயற்பட வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றனர்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் இராணுவத்தையோ பொலிஸாரையோ விசாரணைக்கு உட்படுத்தாது என ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் கூறியுள்ளனர். அவ்வாறாயின் அந்த அலுவலகத்தால் எந்த நியாயம் எமது மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்க முடியும். புதிய கட்சியொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ ஆரம்பித்தால் அவருடைய இரகசியங்கள் வெளியிடப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால எச்சரித்துள்ளார்.
ஆனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலேயே போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அதுதொடர்பில் உள்ளக விசாரணை செய்யப்படும் என்றே அரசாங்கம் கூறி வருகின்றது. இவ்வாறு முன்னாள் ஆட்சியாளர்களின் இரகசியங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் எவ்வாறு உள்ளக விசாரணையை நீதியான முறையில் முன்னெடுக்க முடியும் என்ற கேள்விக் யெழுப்புகின்றது.
கடற்படைக்கு அதிகாரம் எங்கிருந்து வந்தது 1985 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மன்னார் பள்ளிமுனையில் உள்ள 25 குருமார்களுக்கு வழங்கிய காணியை கடற்படையினர் சுவீகரிக்க முயற்சிகள் எடுத்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி ஒருவரால் கையகப்படு்த்தப்பட்ட காணியாகவும் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் தற்போது மன்னாரில் உள்ள கடற்படையினர் அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த அதிகாரத்தை வழங்கியவர்கள் யார்? கோப்புலவு, சம்பூர், வலிவடக்கு போன்ற பல பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்துவதற்கு பொதுமக்கள் காணிகளை கையகப்படுத்தும் நிலையில் இவ்வாறு காணிகளை சுவீகரிப்பதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றமை கண்டிக்கத்தக்கது என்றார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating