ஒரு வருட பூர்த்தியில் தற்காலிக எம்.பி பதவி…!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளும் புறமும் ஏற்பட்டிருக்கின்ற அழுத்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், தேசியப்பட்டியலுக்கு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே எனலாம். அதாவது, எம்.பி பதவி மறுக்கப்பட்ட மனத்தாங்கலில் இருந்த செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட புள்ளியில் இருந்தே, உட்கட்சி முரண்பாடுகள் வெளியில் வரத்தொடங்கின. இது நடந்தது நேற்றுப்போல் இருக்கின்றது. ஆனால் தற்காலிகமாக இரு எம்.பிக்கள் நியமிக்கப்பட்டு இம்மாதத்துடன் ஒரு வருடம் இனிதே பூர்த்தியடைகின்றது. காலம் என்பது பெரும்பெரும் தவறுகளை எல்லாம் எவ்வளவு சுலபமாக மறக்க வைத்து விடுகின்றது என்பதற்கு இதுவும் நல்லதொரு உதாரணமாகும்.
2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவடைந்த பின்னரே பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க மு.கா தீர்மானித்தது. அதன்பின் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட்ட மு.காவுக்கு வெகுமானமாக இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. இந்த இரண்டு ஆசனங்களுக்காக முன்னமே ஐந்து பேரின் பெயர்களை மு.கா முன்மொழிந்திருந்த நிலையில், மேலும் பல தனிநபர்களுக்கும் ஊர்களுக்கும் தேசியப் பட்டியல் எம்.பி தருவதாக தலைவர் ஹக்கீம் பகிரங்கமாகவே வாக்குறுதியளித்தார். ஆகக்கூடுதலாக இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களே கிடைக்குமென்பது நன்றாகத் தெரிந்த கணக்காகும். இப்படியிருக்க, பலருக்குத் தேசியப் பட்டியல் எம்.பி
தருவதாகச் சொன்னது, அப்போது பெரிய சாணக்கியம் என்று எடுத்துக் கொண்டாலும், அது மோசமான அரசியல் என்பதை, பின்னர் மு.கா தலைவரே உணர்ந்து கொண்டிருப்பார்.
தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாதவர்களுக்கு முதற்சுற்றில் எம்.பி பதவியை கொடுப்பது சட்டப்படி சிக்கலுக்குரிய விடயமாகும். ஆகையால் பல ஊர்களுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் எம்.பி பதவி கொடுக்கும் எண்ணம் தலைமைக்கு இருந்திருக்குமானால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? உண்மையாகவே யாருக்கு அல்லது எந்த ஊருக்கு எம்.பி பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டுமென்று அவர் நினைக்கின்றாரோ அவர்களது பெயரையே பட்டியலில் முன்மொழிந்திருக்க வேண்டும். ஹசனலிக்கோ பஷீருக்கோ அல்லது நிசாமுக்கோ எம்.பி பதவி கொடுப்பதில் இஷ்டமில்லை என்றால் அவர்களது பெயர்களைப் போட்டிருக்கத் தேவையில்லை. மாறாக, மு.காவிற்கு அரசியல் அதிகாரம் இல்லாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும். அட்டாளைச்சேனை போன்று நெடுங்காலமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஊர்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை போட்டிருக்க வேண்டும்.
ஆனால் மு.கா தலைவர் ஹக்கீம் மேற்சொன்ன மூவரது பெயர்களுடன் தனது சகோதரர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மற்றும் நெருங்கிய கூட்டாளி சட்டத்தரணி
எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரின் பெயர்களையும் உத்தேச பட்டியலில் உள்ளடக்கியிருந்தார். ஆனால், உயர்பீடத்தின் ஒப்புதலுடனேயே கட்சிக்குள் எல்லாம் நடப்பதாக தலைவர் அடிக்கடி கூறிவருகின்ற நிலையில், இவ்வாறான தீர்மானம் ஒன்றை ஏன் எடுத்தார் என்று ஆரம்பத்திலேயே ஹசனலியும் பஷீரும்
சண்டை பிடித்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. தேர்தல் முடிந்த பிற்பாடு, தேசியப்பட்டியல் எம்.பி பதவிகேட்டு ஹக்கீமின் வீட்டிற்கு ஆதரவாளர்கள் படையெடுக்கத் தொடங்கினர். இந்த நெருக்கடியான சூழலில் கட்சிக்கு கிடைத்த இரண்டு ஆசனங்களுக்கும் தலைவர், தனது சகோதரனையும் கூட்டாளியையும் எம்.பியாக தற்காலிகமாக நியமித்தார்;. இது கட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே கிளப்பிவிட்டது. ஆனால், இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என்பதை அறியாத்தனமாக மு.கா தலைவர் நடந்து கொண்டதாக சொல்லவும் முடியாது. தேசியப்பட்டியல் சார்ந்த செயற்கையான போட்டியை ஏற்படுத்திவிட்டு, அப்போது உருவான நெருக்கடிகளைக் காரணம் காட்டித் தனது விருப்பத்துக்குரிய இருவரை எம்.பியாக நியமிக்கும் சாணக்கியத்தில் அவர்; வெற்றிகண்டார் என்பதே உண்மை. சமகாலத்தில், தேசியப்பட்டியல் எம்.பி பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மூவரும், அதைக் கேட்க முடியாத புறச்சூழ்நிலைகளை கட்டமைத்து விட்டார்.
மேற்குறிப்பிட்ட இருவரையும்
எம்.பிக்களாக நியமித்ததற்கு தலைவரால் சொல்லப்பட்ட காரணம், மு.காவின் வரலாற்றில் அழியாத சொல்லாடல்களாகும். ‘ஐ.தே.கவுக்கு எம்.பிக்களின் பெயர்களை அவசரமாக அனுப்ப வேண்டி இருப்பதாலும் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் தீர்க்கமான முடிவெதனையும் எடுக்க அவகாசம் இல்லை என்பதாலும் எனது நம்பிக்கைக்குரிய இருவரை நியமித்துள்ளேன்’ என்ற தொனியில் அவர் கருத்துரைத்தார். அப்படியென்றால், இருபது வருடங்களாக கட்சிக்காக உழைத்த தவிசாளர்;, இருபத்தைந்து வருடங்களாக கட்சி வளர்த்த செயலாளர், அதைவிட அதிக காலம் கட்சிக்காக பாடுபட்ட மூத்த போராளிகளான உயர்பீட உறுப்பினர்கள், நிசாம் காரியப்பர் எல்லோரையும் நம்பிக்கை குறைந்தவர்கள் அல்லது நம்பிக்கையற்றவர்கள் என்று தலைவர் மறைமுகமாகச் சொன்னார் என்பதாகவல்லவா எடுத்துக்கொள்ள வேண்டும். கட்சியை வளர்த்தவர்களைக் காட்டிலும் யார் யாரையோ நம்பிக்கை மிகுந்தவர்களாகக் காட்டியதைக் கூட விளங்கிக் கொள்ளவும் தட்டிக் கேட்கவும் முடியாதவர்களாகவே கிழக்கைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்.
ஏதேதோ கற்பிதங்களைப் பொதுவெளியில் சொல்லிவிட்டு, ஹபீஸூம் சல்மானும் 2015 ஓகஸ்ட் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவ்விருவரும் ‘தற்காலிகம்’ என்ற அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டார்கள். ‘மறுஅறுவித்தல்வரை’ என்றோ, ‘சுழற்சி முறையான நியமனம்’ என்றோ குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஹக்கீமின் சகோதரர் ஹபீஸின் விடயத்தில் தற்காலிகம் என்பது கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக இருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் 19ஆம் திகதி அவர் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார். டாக்டர் ஹபீஸ் பொதுவாகவே ஒரு மென்மையான போக்குடையவர். நல்ல பழக்கவழக்கங்கள் தெரிந்தவர். எனவே ஊடகங்கள் இதுபற்றி விமர்சிக்கத் தொடங்கியதையடுத்து, தலைவர் அவரை இராஜினாமாச் செய்யச் சொல்லிக் கேட்பதற்கு எத்தனித்த உடனேயே தனது
எம்.பி பதவியை டாக்டர் ஹபீஸ் இராஜினாமாச் செய்து, அவர் மீதான நம்பிக்கையையும் கௌரவத்தையும் காப்பாற்றினார்.
அந்த வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி வந்தபோது,’ஒரு ஊருக்கு இரண்டு எம்.பிக்கள் வழங்குவது நியாயமில்லை’ என்று மு.கா தலைவர் கூறினார். அதிகாரமில்லாத பகுதிகளுக்கு
எம்.பியை வழங்கவுள்ளதாகவும் கூறினார். குடும்ப ஆட்சியை விமர்சித்து ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தில், ஒரு குடும்பத்துக்குள்ளேயே இரண்டு
எம்.பிகளை வைத்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஓர் ஊருக்கு இரண்டு எம்.பி
கதைசொல்வது எந்தவூர் நியாயம் என்று கேட்பதற்கு மு.கா உயர்பீட உறுப்பினர்களுக்கு திராணி இருக்கவில்லை. அதேபோன்று, அதிகாரமில்லாத இடங்களுக்கு அதிகாரம் வழங்குவது என்று முன்னரே எண்ணியிருந்தால் உத்தேச தேசியப்பட்டியலில் அவ்வாறானவர்களை உள்ளடக்கி இருக்க வேண்டும்? என்பதையும் அவர்கள் தலைவரிடம் கேட்டு, மக்களுக்குச் சொல்லவும் இல்லை. எது எவ்வாறாயினும், திருமலை தௌபீக்கிற்கு அந்தத் தேசியப்பட்டியல் எம்.பியைக் கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு செயற்பாடு என்றே கூறவேண்டும்.
ஆனால், அடுத்த தேசியப் பட்டியல் எம்.பியான சல்மான் இன்று வரைக்கும் தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்யவில்லை. அதற்கான உத்தரவை தலைவர் விடுத்ததாகவும் தெரியவில்லை. சல்மான் பதவியேற்று இம்மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. அதாவது, சல்மானின் விடயத்தில் ‘தற்காலிகம்’ என்பது, ஒரு வருடமாகின்றது.
சட்டத்தரணி சல்மான் மறைந்த தலைவர் எம்;.எச்.எம் அஷ்ரப்பினாலேயே கட்சிக்குள் கொண்டு வரப்பட்டவர். முன்னர் ஒரு தடவை தேசியப் பட்டியலில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுப் பின்னர் அப்பதவியை உரிய காலத்தில் இராஜினாமாச் செய்தவர். மு.கா தலைவர்கள் வசமிருந்த அமைச்சுக்களின் கீழான நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர் என்ற பல நற்சான்றுகள் அவருக்கு இருக்கின்றன. இதற்கப்பால், முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் ஒரு போராளி என்றோ கட்சியின் வளர்ச்சிக்காக களத்தில் தியாகங்களைச் செய்தவர் என்றோ அவரைக் கூற முடியாது என்பது மு.கா சிரேஷ்ட உறுப்பினர்களின் நிலைப்பாடாகும். இப்படியிருக்க, சல்மானுக்கு எம்.பி பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டிய தேவை எங்ஙனம் உருவானது? என்ற கேள்வி மக்களிடையே இருக்கின்றது. அதற்கான பதிலை தலைவர் சொல்லவில்லை.
இதற்கு முன்னரும் வடக்கு, கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களும் தேசியப் பட்டியல் மூலம் எம்.பிக்களாக மு.காவினால் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அதற்கெல்லாம் ஏதாவது முகாந்திரங்கள் இருந்தன. குறிப்பாக, லிபரல் கட்சியைச் சேர்ந்த அசித்த பெரேராவுக்கு மு.கா தேசியப்பட்டியல் எம்.பியை வழங்கி இருக்கின்றது. ஆனால், அசித்த பெரேராவுக்கு ஏன் வழங்கினோம்? அவர் கட்சிக்கு என்ன செய்தார் என்பதை எல்லாம் மறைந்த தலைவர் அஷ்ரப் பகிரங்கமாகவே மேடையில் விளக்கிக் கூறினார். ஆனால், மேற்படி இருவரையும் நியமித்தது ஏன் என்பதற்கு ‘நம்பிக்கை’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு தெளிவான விளக்கங்கள் எதையும் தலைமை அளிக்கவேயில்லை. ‘இதோ இராஜினாமா செய்ய வைக்கப் போகின்றேன், அதோ தீர்வு காணப்போகின்றேன்’ என்று சொல்லி ஒரு வருடத்தை இழுத்தடித்ததுதான் மிச்சம்.
மு.கா தலைவரும் மக்களும் இந்நிலைமையை சரியாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உண்மையாகவே, மிகவும் கிராக்கி நிறைந்த ஒரு பதவியான தேசியப் பட்டியல் எம்.பியை வைத்துப் புதுப்புது சிக்கல்களை உருவாக்காமல், இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஹக்கீம் முயற்சித்திருக்கலாம். அதாவது, கடந்துபோன ஒரு வருடத்தில் செயலாளருக்கும் தவிசாளருக்கும் சுழற்சி அடிப்படையில் எம்.பியை வழங்கியிருக்கலாம். இவர்கள் இடையில் இராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்று நம்பிக்கையின்மை இருந்தால், ஒரு சட்டத்தரணி அல்லது உலமா சபையின் முன்னால் வைத்து இணக்கக் கடிதத்தை பெற்றிருக்கலாம். அவ்வாறில்லாவிட்டால், தேசியப்பட்டியலில் அரசியல் அதிகாரமில்லாத ஊர்களை சேர்ந்தவர்கள் மற்றும் கட்சி கைமாறு செய்ய வேண்டியவர்களின் பெயர்களைப் போட்டு அவர்களில் ஓரிருவருக்கு சுழற்சி முறையில் வழங்கியிருக்கலாம். இப்படிச் செய்திருந்தால், இப்பதவியால் முரண்பட்டவர்கள், எம்.பியை
எதிர்பார்த்திருக்கும் ஊர்கள் மற்றும் தனிநபர்கள் என்று எத்தனையோ பேரை இந்த ஒரு வருடத்தில் திருப்திப்படுத்தியிருக்கலாம். ஆனால், அந்தச் சாணக்கியம் சறுக்கிப் போக, கட்சியின் வளர்ச்சிக்கு உதவாத வகையில் இவ்விரு பதவிகளும் பயன்படுத்தப்பட்டமை கண்கூடு.
சரி, நடந்ததை விடுவோம்‚ அப்போதும் ஒரு வினா எழுகின்றது. சல்மானுக்கு எம்.பி பதவி கொடுத்து ஒரு வருடமாகியும் இன்னும் ஏன் அவரை இராஜினாமாச் செய்யுமாறு தலைவர் பணிக்கவில்லை என்பதே அந்த வினாவாகும். உண்மையிலேயே, அடுத்ததாக அந்த தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது குறித்துத் தீர்மானம் எடுப்பதிலும் சிக்கல் இருக்கின்றதுதான். அதுமட்டுமன்றி சல்மான் எம்.பியிடமிருந்து றவூப் ஹக்கீம் நினைத்தவுடனேயே அப்பதவியை பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் உள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் சொல்கின்றனர்;. அது உண்மையென்றால், ஒன்றில், தலைவர் ஹக்கீமின் பிடி ஏதாவது சல்மானிடம் இருக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால், தலைவருக்குள்ள அதிகாரங்கள் பலமற்றவையாக இருக்க வேண்டும். அப்படியாயின், கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியை உரிய காலத்தில் இராஜினாமாச் செய்ய வைப்பதற்கான பொறிமுறைகள் கட்சியின் யாப்பு ரீதியாக உருவாக்கப்பட வேண்டும். தேசியப்பட்டியல்
எம்.பியாக நியமிக்கப்படுவோரை காலம் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்வதும் அதை பகிரங்கப்படுத்துவதும் அவசியமாகும்.
எது எவ்வாறாயினும் மக்கள் இதை மறந்து விட்டார்கள் என்று நினைத்தோ, காரணங்களைக் கூறியோ இன்னும் பல மாதங்களுக்கு இந்தப் பதவியை இப்படியே இழுத்துச் செல்ல யாராவது நினைத்திருந்தால், அது சாணக்கியமல்ல.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating