புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ஜப்பானிய விருந்தினர்களை பாலசிங்கம் அலட்சியப்படுத்தினர்: பிற்காலத்தில் விளைவு பாரதூரமாக அமைந்தது!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-11)
நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
தமது வீரப் போராட்டங்களையும், தமிழ் மக்களது ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகளையும் உலகறியச் செய்வது அவர்களது நோக்கமாக இருந்தமையால் பல்வேறு தலைநகரங்களை அவர்களும் விரும்பியே தேர்ந்தெடுத்தனர்.
இப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியன செயற்பாட்டில் இருந்த வேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் என்ன நடந்தது? என்பதை அறிவதும் அவசியமானது.
அதாவது உலகத்தின் முன்னால் சமாதானம் பேசுவதாக காட்டிக்கொண்ட அவர்கள் தமது போராட்ட களத்தில் எவ்வாறு நடந்துள்ளார்கள்? என்பதை சமகாலத்தில் புரிந்து கொள்வதும் முக்கியமானது.
அந்த வகையில் இதே இணையத் தளத்தில் தொடர்ந்து வெளிவரும் தமிழினி அவர்களின்‘ கூர்வாளின் நிழலில்’நூலில் வெளியான கட்டுரைகளில் வெளியிடப்பட்டுள்ள அனுபவங்களையும் கவனத்தில் கொள்வது இன்றைய அரசியல் அவலத்தின் பின்னணியை சரிவரப் புரிந்து கொள்ள உதவும்.
நோர்வேயில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் சந்திப்பினைத் தொடர்ந்து ஜேர்மனியில் தமது 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள்.
2003ம் ஆண்டு பெப்ரவரி 7ம்,8ம் திகதிகளில் பேர்லின் நகரில் இடம்பெற்றது.
இச் சந்திப்பிற்கு முதன் நாள் காரைநகர் கடற்பாகத்தில் புலிகளின் இரண்டு கப்பல்கள், மீன்பிடி படகுகள் போன்றவற்றின் நடமாட்டத்தினை இலங்கைக் கடற்படை அடையாளம் கண்டது.
உடனேயே அவற்றினைப் பரிசோதனை செய்யப்போவதாக கடற்படை மிரட்டியது. புலிகள் அனுமதி மறுத்ததோடு நோர்வே தலைமையிலான கடல் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்தார்கள். இதனால் அவர்கள் வரும் வரை கடற்படை காத்திருக்க நேரிட்டது.
பேர்லின் பேச்சுவார்த்தைகளில் கலந்தகொண்ட அரச தரப்பினர், நிலமைகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க எண்ணினர்.
கண்காணிப்புக் குழுவினர் கப்பல்களைப் பரிசோதிக்க அனுமதித்தனர். ஆள் இல்லாமல் இருந்த கப்பல்களுக்குள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்காணிப்புக் குழுவினர் கண்டனர்.
கப்பலில் வந்த புலிகளின் உறுப்பினர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தாமும் தற்செயலாக உயிர்தப்பியதாக கண்காணிப்பு உறுப்பினர்களும் தெரிவித்தார்கள்.
இருப்பினும் இவை கடற்படையால் மிகவும் திட்டமிடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் வேளை இத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக பின்னர் செய்திகள் கசிந்திருந்தன.
மிகவும் நெருக்கடியான சூழலில் இடம்பெற்ற பேர்லின் பேச்சுவார்த்தைகளில் மனித உரிமை அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. நாலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது
மனித உரிமை அம்சங்கள் குறித்த ஆலோசனையைப் பெற முன்னாள் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சார்ந்த இயன் மார்டின் அவர்களிடம் அதற்கான திட்டங்களைப் பெறுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனவே பேர்லின் பேச்சுவார்த்தைகளில் அதற்கான பொறிமுறை, போராளிகளுக்கு மனித உரிமைகளைப் பேணல் தொடர்பான பயிற்சிகள், அரச தரப்பில் மனித உரிமை தொடர்பான சட்டமூலங்களைக் கொண்டு வருதல் என்பன பேசப்பட்டன.
இச் சந்தர்ப்பத்தில் சிறுவர்களைப் பேராளிகளாக மாற்றும் புலிகளின் முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டன.
இதற்காக ஐ நா சபையின் ‘யூனிசெவ்’ என அழைக்கப்படும் சிறுவர் பிரிவு புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.
இப் பிரச்சனையில் தம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயம் சர்வதேச அளவில் ஏற்படக்கூடாது என்பதில் புலிகளும் கவனமாக இருந்ததால் ஒத்துழைப்பு வழங்க தாமும் தயாராக இருந்தனர்.
சிறுவர்கள் இயக்கத்தில் இணைவதற்கு இரண்டு காரணங்கள் இருந்ததாக புலிகள் தரப்பில் கூறப்பட்டது. அதாவது போரட்டத்தில் இருந்த பற்றுறுதி காரணமாக தாமாக இணைந்தனர் எனவும், அடுத்ததாக வறுமை இன்னொரு காரணம் எனவும் தெரிவித்தார்கள்.
இப் பிரச்சனை நோர்வேயின் கண்காணிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறுவர்கள் மத்தியில் பயம், பீதி என்பது அதிகமாக காணப்பட்டது.
வறுமைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது பிள்ளைகளை புலிகளிடம் ஒப்படைக்க தயாராக இருந்தார்கள்.
ஏனெனில் அவர்கள் வறுமையால் வாடுவதை விட புலிகளிடம் செல்வது குறைந்த பட்சம் உணவு வேளைக்குக் கிடைக்கும் என எண்ணினார்கள்.
அது மட்டுமல்ல அவர்களுக்கு கல்வி, கட்டுப்பாடு, ஆங்கில மொழி அறிவு போன்றனவற்றையும் அவர்கள் வழங்கியிருந்தனர்.
நோர்வே காண்காணிப்புக் குழு அதிகாரி ஒருவரின் அனுபவம் இவ்வாறு அமைந்திருந்தது.
15 வயதான சிறுவன் ஒருவன் புலிகளால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தான். பின்னர் கண்காணிப்பு அதிகாரிகளின் வற்புறுத்தலால் விடுவிக்கப்பட்டிருந்தான்.
அந்த அதிகாரி அவனது வீட்டிற்குச் சென்று தாயிடம் விசாரித்தபோது அப் பெண் அவன் சுயமாகச் சென்றான் என தெரிவித்திருந்தார்.
அப் பையனின் தேவைக்காக சப்பாத்து, நூல்கள் போன்றவற்றை அவர்கள் வழங்கியிருந்தனர்.
அப் பையன் கெட்டிக்காரனாக இருப்பதாக அவர்களது அபிப்பிராயம் இருந்தது. பாடசாலைக் கல்வி முடிந்ததும் மேலும் கல்வியைத் தொடருமாறு அறிவுரை கூறி அவர்கள் திரும்பினர்.
சில மாதங்களின் பின்னர் அவன் மீண்டும் புலிகளிடம் சென்றுவிட்டான். ஆறு மாதங்களின் பின்னர் அந்த அதிகாரி அப் பையனை புலிகளின் போராளியாக, மாவீரர்களின் துயிலுமிடங்களைக் காவல் செய்யும் ஒருவனாக காண நேர்ந்தது.
இந்த அதிகாரியை கண்டதும் சுற்றும் முற்றும் பார்த்தபின் சில நிமிடங்களின் பின்னர் தனக்கு உதவி செய்தமைக்கு நன்றி எனத் தெரிவித்து, தனக்கு அங்கே இருப்பதுதான் விருப்பம் என்றான்.
நானாகவே இந்த வாழ்க்கையைத் தேர்வு செய்தேன். தான் ஆங்கிலமும், சந்தைப்படுத்தல் தொடர்பான கல்வியையும் கற்பதாக கூறினான்.
எனவே சிறுவர் தொடர்பான பிரச்சனை பல்வேறு சிக்கலான அம்சங்களைக் கொண்டது. அதனை வெறும் மனித உரிமைப் பிரச்சனையாக, குறிப்பாக வறுமையில் வாழும் சிறுவர்கள் குறித்து அவ்வாறு பார்க்க முடியாது என்பது அவர்களது அபிப்பிராயமாக இருந்தது.
இதன் பின்னணியில் பாலசிங்கம் சிறுவர்களை போராட்டத்தில் இணைப்பது குறித்த வாதங்களின்போது அவற்றை எதிர்த்ததோடு தாம் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையங்களை நடத்துவதாக நியாயப்படுத்தினார்.
பேர்லின் பேச்சுவார்த்தைகளின் முடிவில் 6வது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை யப்பானில் 2003ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதன் பிரகாரம் முதல்நாள் பேச்சுவார்த்தைகளில் கடலில் மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு இரு தரப்பிலுமுள்ள கடற்படையின் உயர்மட்ட உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என்போர் அதற்கான வரைமுறைகளைத் தயாரித்தனர்.
இரண்டாவது நாள் பேச்சுவார்த்தைகளிற்கு யப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி SIHRN என அழைக்கப்பட்ட உடனடி மனித நேய மற்றும் புனர் வாழ்வு தேவைகளுக்கான அமைப்பின் பொருளாதார ஆலோசகர் என்ற வகையில் தலைமை தாங்கினார்.
இச் சந்தர்ப்பத்தில் அங்கு கலந்துகொண்ட தமிழ்ச்செல்வன் அரசின் தாமதப் போக்குக் குறித்து பல குற்றங்களை அடுக்கிச் சென்றார்.
உடனடித் தேவைகளுக்கென தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசு பணம் ஒதுக்கவில்லை. புனர்வாழ்வை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு வலையங்களிலிருந்து ராணுவம் விலகவில்லை.
இவ்வாறாக தொடங்கிய காலை விவாதங்கள் மாலையில் மனித உரிமை அம்சங்கள் குறித்து வாதிக்கத் தொடங்கியது.
அரசு தரப்பும், புலிகள் தரப்பும் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய திட்டங்களுக்கான அம்சங்கள் இயன் மார்டினால் தயாரிக்கப்பட்டிருந்தது. இவை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பேசுபொருளாக தீர்மானிக்கப்பட்டன.
• அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மனிதநேய கடப்பாடுகள் என்பவற்றை இரு தரப்பினதும் அதிகாரிகள் தமது செயற்பாடுகளின் போது கடைப்பிடிக்கும் கோட்பாடுகள்.
• மனித உரிமைக் கோட்பாடுகளை மதித்துச் செயற்படும் பொருட்டு புலிகள் தரப்பு போராளிகள், பொலீஸ், சிறைச்சாலை அதிகாரிகள் என்போருக்கு பயிற்சி வழங்குதல் என்பதுடன் விசேடமாக ஐ நாடுகள் சிறுவர் அமைப்பின் கோட்பாடுகள், அகதிகள் அமைப்பின் கோட்பாடுகள், செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச மனித நேய சட்டங்கள் பற்றிய பயிற்சிகள்.
• இலங்கை மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளைப் காத்திரமான விதத்தில் நாடு முழுவதும் கண்காணிக்கும் ஆற்றலைப் பலப்படுத்தும் பிரேரணைகளை மேற்கொள்ளல்.
இதனைத் தொடர்ந்து நீண்ட காலப் பிரச்சனைகள் குறித்து அதாவது அரசியல் தீர்வு குறித்த விவாதங்களுக்கு பேச்சுவார்த்தைகள் திரும்பின. சமஷ்டி அரசியல் தீர்வில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளின் அடிப்படைகள் குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இச் சந்தர்ப்பத்தில் தமது தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் குழுவின் விபரங்களை பாலசிங்கம் அறிவித்தார்.
இக் குழுவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் உயர்மட்டத்தைச் சேர்ந்த 21 உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இவர்களே எதிர்வரும் காலங்களில் அரசியல் தீர்வு குறித்த ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வர். குறிப்பாக சமஷ்டி முறைகள் பற்றி அறிந்து கொள்வர்.
இவ் ஆய்வுகளின் முடிவில் ஐக்கிய சமஷ்டி இலங்கையில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வை முன்வைப்பர்.
ஜப்பானிய பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் குறித்து எரிக் சோல்கெய்ம் அவர்களின் கருத்து இவ்வாறு இருந்தது.
இப் பேச்சுவார்த்தைகளின் போது ஜப்பானியர்கள் மதிய உணவை மிகவும் பிரமாதமான விதத்தில் தயாரித்துப் படைத்திருந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பினரைத் தவிர ஏனையோர் அதாவது இலங்கை அரச தரப்பினர், நோர்வே மற்றும் யப்பானியர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வு குறித்து அங்கு கலந்துகொண்ட உலகப் பத்திரிகையாளர்கள் புலிகள் யப்பானியர்களைப் புறக்கணித்தார்கள் என செய்திகளை வெளியிட்டிருந்தனர்.
இவ் விருந்தினைப் புறக்கணித்த புலிகள் தரப்பினர் அங்கிருந்த இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட உணவினைத் தனது கோட்டல் அறைக்கு எடுத்து பகிர்ந்துகொண்டனர்.
யப்பானியர்களால் புலிகளின் இச் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது அவர்களின் ராஜதந்திர பிரச்சனை என எண்ணினார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் இன்னொரு ராஜதந்திரப் பிரச்சனை எழுந்தது. சில பத்திரிகையாளர்களை பாலசிங்கம் தனது அறைக்கு அழைத்து அவர்களுக்கு குடிபானங்களை வழங்கி கௌரவித்தார்.
இச் செயல்களை ஏற்றுக்கொள்ளாத யப்பானியர்கள் அச் செலவுகளை வழங்காது தவிர்த்தார்கள்.
பேச்சுவார்த்தைகளின் பின்னர் யப்பானின் முக்கிய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் பாலசிங்கம் கலந்துகொள்ளாது தவிர்த்தார். இவை எதிர்காலத்தில் பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்த தவறவில்லை.
அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளையும் இதேபோன்றே தவிர்த்தார்கள். அதன் விபரங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating