விளையாட்டுக்களில் அரசியல் பின்புலத்தின் முக்கியத்துவம்…!!
இனம், நிறம், மதம், சாதி, குலம், வர்க்கம், அரசியல் எல்லாவற்றையும் கடந்தது தான் விளையாட்டு. அதனால் தான் ‘விளையாட்டென்பது, நல்லிணக்கத்துக்கான சிறந்த கருவி’ என்ற வசனத்தை, உலகில் உள்ளோரில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருப்பர். சிவில் யுத்தம் காரணமாக பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இலங்கையில், நல்லிணக்க முயற்சிகளின் போது, விளையாட்டுகள் என்பவை முன்னிறுத்தப்படும் போதும், இதேபோன்ற வசனங்கள் தெரிவிக்கப்பட்டன. எல்லாப் பிரிவினைகளையும் தாண்டி, மக்களை ஒன்றிணைக்கும் ஒன்றாகத்தான் விளையாட்டுப் பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஆண்டுவந்த அரசாங்கங்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான முரண்பாடுகள் உச்ச நிலையில் காணப்பட்டபோது, இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்தவர்கள் ஏராளம் பேர். அதேபோல், இலங்கை அணியை ஆதரித்தவர்கள் மீது, ‘ஒடுக்குமுறையாளர்களைப் பிரதிநிதித்துவப்படும் ஓர் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களே?’ என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. அப்போதெல்லாம், அதற்கான பதிலாக, ‘விளையாட்டும் அரசியலும் வேறு. இரண்டையும் கலக்காதீர்கள்’ என்ற பதில் வழங்கப்பட்;டது.
ஆனால், உண்மையிலேயே அரசியல் கலப்பற்றவையா விளையாட்டுகள்? அவ்வாறான கலப்புக் காணப்பட்டால், விளையாட்டுக்களில் பெறப்படும் முடிவுகளில் அவை என்னவாறான தாக்கத்தைச் செலுத்துகின்றன? ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், இந்தக் கலந்துரையாடலென்பது அவசியமானது.
இதைப் பற்றி ஆராய்வதற்கு முன்பதாக, ஒரு விடயம் தெளிவானது. விளையாட்டுகளில் அரசியல் கிடையாது. உசைன் போல்ட்டின் வேகத்திலும் மைக்கல் பெல்ப்ஸின் நீச்சலிலும் அஞ்சலோ மத்தியூஸின் துடுப்பாட்டத்திலும் ரங்கன ஹேரத்தின் சுழற்பந்து வீச்சிலும் அரசியல் கிடையாது. ஆனால், அவர்கள் விளையாடும் போட்டிகளை நடத்துவதிலோ அல்லது அவர்களை விளையாட வைப்பதிலோ அரசியல் கிடையாது என உறுதியாகக் கூற முடியாது.
பிரேஸிலில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதென்பதே கலந்துரையாடலுக்குரியது தான். அதுவும், அந்நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியிலும், இந்தப் போட்டிகளை அந்நாட்டு மக்கள் எந்தளவுக்கு வரவேற்கிறார்கள் என்பது முதற்கேள்வி. போட்டிகளை நடத்துவதற்காக ஏராளமான பணத்தைச் செலவளித்து உருவாக்கப்பட்ட விளையாட்டரங்குகள், 2004ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்ஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டு, தற்போது கைவிடப்பட்டுள்ள அரங்குகள் போல் ஆகாது என்பதற்கான வாய்ப்புகள் இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆகவே, சாமானிய மக்களைப் பொறுத்தவரை, இப்போட்டிகள் எந்தளவுக்கு சுமையாக அமையுமென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மக்களைப் பாதிக்குமென்று தான் பொதுவான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை ஒருபுறமிருக்க, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் மிக முக்கியமானவை, அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான சிமோன் மானுவலின் சிறப்பான பெறுபேறுகள். அவருக்கு 2 தங்கங்களும் 2 வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. ஒருவருக்கு நான்கு பதக்கங்கள் கிடைப்பதில் என்ன பெரிய விடயம் என்று ஆராய்ந்தால், இப்பதக்கங்களைப் பெற்ற மானுவல், கறுப்பின வீராங்கனையாவார். அமெரிக்காவின் வரலாறென்பது, திரும்பிப் பார்க்க முடியாத ஒன்று. அங்கு வாழ்ந்த கறுப்பினத்தவர்கள் சந்தித்த கொடுமைகள், வார்த்தைகளால் மாத்திரம் விவரிக்கப்பட முடியாதன. அவ்வாறான கொடுமைகளில் ஒன்று தான், நீச்சல் துறைகளிலிருந்து கறுப்பினத்தவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டமை ஆகும்.
இதில் குறிப்பிடத்தக்கதாக, ஒஸ்கார் விருதுகளில், சிறந்த நடிகை பிரிவுக்கு முதன்முதலாகப் பரிந்துரைக்கப்பட்ட நடிகையான டொரோத்தி டான்பிரிட்ஜ், நீச்சல் தடாகமொன்றில் தனது கால்; பெருவிரலை வைத்தமைக்காக, நீச்சல் தடாகத்திலிருந்து நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது என்ற மரபுவழிக் கதையொன்று உள்ளது. இது நடந்ததா என்பதை 100 சதவீதமும் உறுதிப்படுத்தும் தகவல்கள் கிடையாது என்ற போதிலும், அந்தக்காலத்தில் நிலவிய நிலைமை காரணமாக, இது நடந்திருக்கக்கூடியமைக்கான வாய்ப்புகள் அதிகமெனவே கருதப்படுகிறது. மறுபக்கமாக, 1964ஆம் ஆண்டில் புளோரிடாவில், வெள்ளையினத்தவர்களும் கறுப்பினத்தவர்களும் ஒன்றாக நீந்திக் கொண்டிருந்த நீச்சல் தடாகத்துக்குள், அது அமைந்திருந்த ஹொட்டலின் முகாமையாளர், அமிலம் ஊற்றியமை, நடந்த ஒன்று. அதன் புகைப்பட ஆதாரங்களும் உண்டு. இவ்வாறாகத் தான், நீச்சல் துறையில், கறுப்பினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை காணப்பட்டது.
இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது, மானுவலின் சாதனையென்பது, சாதாரணமான ஒன்று கிடையாது. இவ்வாறான சூழ்நிலையிலிருந்து, தனக்குக் காணப்பட்ட கட்டமைப்புரீதியான எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி, அவர் புரிந்துள்ள சாதனையென்பது, நிச்சயமாகவே முன்னிறுத்திக் காண்பிக்கப்பட வேண்டிய ஒன்று.
அவரை முன்னிறுத்துவதனூடாக, அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகளை மூடிமறைப்பதாக அமையாது. அத்தோடு, அவரை முன்னிறுத்துதலென்பது, அவ்வாறான நோக்கத்திலும் மேற்கொள்ளப்படக்கூடாது. அமெரிக்க ஜனாதிபதியாகக் கறுப்பினத்தவர் ஒருவர் நியமிக்கப்படுவதாலோ அல்லது கறுப்பினத்தவர்கள் மேற்கொள்ளும் அடைவுகளாலோ, கறுப்பினத்தவர்களுக்கு அமெரிக்காவில் காணப்படும் பாகுபாடுகள் இல்லையென்று ஆகிவிடாது. அந்நாட்டின் சட்ட அமுல்படுத்தலில், கறுப்பினத்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுவும் வெள்ளையினத்தவர்களில் ஒரு பகுதியினரால், கறுப்பினத்தவர்கள் இன்னமும் தாழ்வாக எண்ணப்படுகிறார்கள் என்பதுவும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாத ஒன்று.
இந்நிலைமை இவ்வாறிருக்க, சவூதி அரேபியாவைச் சேர்ந்த கரிமான் அபுலியாடயேல், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் பங்குகொண்டு, அந்தப் போட்டியில் பங்குகொண்ட முதலாவது சவூதிப் பெண்மணி என்ற ‘பெருமையை’ப் பெற்றுக் கொண்டார். மேற்கத்தேய ஊடகங்களாலும் சமூக ஊடக இணையத்தளங்களாலும், அவரது பங்குபற்றலென்பது, சவூதி அரேபியாவின் வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்பட்டு, அவர் வரலாறு படைத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின.
பெண்கள் இன்னமுமே இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்ற ஒரு நாட்டிலிருந்து, இவ்வாறான ஒருவர் பங்குபற்றுவதென்பது முக்கியமானதென்பதில் மாற்றுக் கருத்தேதுமில்லை.
அது அவ்வாறிருக்க, அமெரிக்காவைச் சேர்ந்த இப்திஹாஜ் முஹமட் என்ற பெண், வாள்வீச்சுப் போட்டிகளில் பங்குகொண்டார். அவரும், வரலாறொன்றைப் படைத்தார். அமெரிக்காவிலிருந்து ஹிஜாப் அணிந்து, ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய முதலாமவர் என்பதே அந்த வரலாறாகும். அவரது பங்குபற்றலையும், முக்கியமானதொன்றாக ஊடகங்கள் முன்னிறுத்தின.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகளைக் கொண்டவரான டொனால்ட் ட்ரம்ப்பினது, முஸ்லிம்களுக்கெதிரான பிரிவினைக் கருத்துகளுக்கு மத்தியில், இப்திஹாஜின் பங்குபற்றலென்பதும் முக்கியமானது.
இவர்களிருவரின் பங்குபற்றலென்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது, இவர்களைப் பயன்படுத்தி, மதவாதிகள் தங்கள் ஒடுக்குமுறைகளை மேலும் அதிகப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தாமலிருப்பது தான். கரிமான் அபுலியாடயேல், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியமை என்பதால் மாத்திரம், சவூதி அரேபியாவில் பெண்கள் ஒடுக்கப்படவில்லை என்ற கருத்து மாறுபடக்கூடாது. ஆண்களும் பெண்களும் சமமாக மதிக்கப்படும் நிலைமை அங்கு உருவாகும் வரை, அதற்கான அழுத்தங்களும் இறுக்கங்களும் தொடர வேண்டும். அதேபோல், இப்திஹாஜ், ஹிஜாப் அணிந்து பங்குபற்றியமை என்பது, தனது பாரம்பரியங்களைப் பின்பற்ற விரும்பும் ஒருவர் விடுத்த முக்கியமான செய்தி; ஆனால் அதற்காக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகளில், ‘கௌரவமாக’ உடை அணியவில்லை என்பதற்காகக் கொல்லப்படும், தண்டனைக்குள்ளாகும் பல்லாயிரக்கணக்கான மக்களது பிரச்சினையை மறந்துவிடக்கூடாது. இப்திஹாஜ் வேண்டுமானால், தானாக விரும்பி அந்த ஆடையை அணிந்திருக்கலாம். ஆனால், பல நாடுகளில், சமூக அழுத்தங்களாலும் உயிர் அச்சுறுத்தலாலும் வேறு வழியின்றி, ஹிஜாப் அணியும் பெண்களின் விடுதலை நோக்கிய பயணமென்பது, தடுத்து நிறுத்தப்படக்கூடாது.
இவர்களோடு ஒப்பிடும்போது, கறுப்பினத்தவர்களுக்கான உரிமைகள் என்பன, அமெரிக்காவில் ஓரளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தி நிற்பதால், சிமோனியின் வெற்றி, இன்னமும் இனிப்பான ஒன்று. ஆனால், இன்னமும் ஏராளமான பணிகள் ஆற்றப்பட வேண்டுமென்பதை மறந்துவிட முடியாது.
இவ்வாறு, விளையாட்டுக்களில் பெறப்படும் வெற்றிகள் ஒருபக்கமாக இருக்க, அவற்றின் பின்னாலிருக்கின்ற வரலாறுகள், அந்த முடிவுகளுக்கு இன்னோர் அர்த்தத்தைத் தருகின்றன. அந்த அர்த்தங்கள் தான், விளையாட்டின் உண்மையான முடிவுகள்.
விளையாட்டுகளென்பவை, உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கமளிப்பன. அவை, இவ்வாறான பின்புலங்களையும் வரலாறுகளையும் கொண்டிருக்கும் போது, அவற்றைப் பற்றியும் ஆராய்வதென்பது, மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முக்கியமான ஒன்று என்பதே நிதர்சனம்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating