புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை? புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்கும் தந்திரமே!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-9)
முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர் (mark salter) இனால் எழுதப்பட்ட “TO END A CIVIL WAR” என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தற்போது இவ் இணையத் தளத்தில் வெளிவரும் சூழல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் தற்போது இலங்கையில் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்கவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவும், பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியை மீண்டும் பலப்படுத்தவும் மக்களிடம் அபிப்பிராயம் பெறப்பட்டு அரசியல் அமைப்பு சபையாக மாறியுள்ள பாராளுமன்றம் விவாதித்து வருகிறது.
இப் பின்னணியில் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு என்ன? என்ற கேள்வி பல தரப்பாராலும் முன்வைக்கப்படுகிறது.
புலிகள் தனித் தமிழீழம் கேட்டு ஆயுதப் போராட்டத்தினை நடத்தி பலத்த தோல்வி அடைந்த பின்னணியில் அக் கோரிக்கையும் அத் தலைவர்களின் மறைவுடன் மரணித்துவிட்டதா? அல்லது அது இன்னமும் வலுவுள்ள கோரிக்கையாக உள்ளதா?
தாய்லாந்து பேச்சுவார்த்தைகளின் போது உள்ளக சுயநிர்ணய கோரிக்கையினை உண்மையில் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரமா?
இல்லையேல் உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து இயக்கத்திற்குள் வலுவான ஆதரவுப் போக்கு காணப்பட்டதா? இத்தகைய கேள்விகளை தற்போது நாம் கேட்கவேண்டியுள்ளது.
ஏனெனில் தாய்லாந்து பேச்சுவார்த்தைகள், அதனைத் தொடர்ந்து பயங்கரவாத இயக்கம் என தடை செய்த அமைப்புகளோடு நேரடியாக பேசுவதில்லை என்ற கொள்கைப் போக்குள்ள அமெரிக்கா தனது உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிற்றேஜ் அவர்களை எந்த அடிப்படையில் சந்திக்க சம்மதித்தது?
விடுதலைப்புலிகளின் தனித் தமிழீழக் கோரிக்கை, அதனை அடைய அவர்கள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் வெளிப்படையாக அமெரிக்கா எதிர்த்து வந்தது.
இலங்கைக்கு நன்கொடை வழங்கும் நாடுகளின் மாநாட்டை நோர்வே தனது நாட்டில் நடத்தியபோது ராஜாங்க அமைச்சர் மிகவும் வெளிப்படையாகவே பிரிவினை சாத்தியப்படாது, பயங்கரவாதத்தினை கைவிடுகிறோம் என புலிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென அவர்கள் முன்னிலையிலேயே கோரிய போது புலிகள் அவை குறித்து மௌனமாக இருந்துள்ளனர்.
அத்துடன் புலிகள் தரப்பில் பிரதான பேச்சாளராக செயற்பட்ட பாலசிங்கம் அவர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையை நோக்கிய வழிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில்தான் ஒஸ்லோ பிரகடனம் வெளியாகியது.
அப் பிரகடனத்தில் பரந்த சாத்தியமான ஒருமித்த சமாதானத்தை நோக்கிய கருத்தினை சகல தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் வகையிலான பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசு இணங்கியது.
குறிப்பாக ஜனாதிபதி சந்திரிகா மற்றும் எதிர்க் கட்சியினர் இதன் முன்னேற்றங்களை அறிதல் அவசியம் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
ஓஸ்லோ பிரகடனம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகங்களில் ஐக்கிய இலங்கையின் சமஷ்டி அமைப்பில் சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுகளை எவ்வாறு எட்டுவது? என்பதை ஆராய்வது என்பதை ஏற்றுக்கொண்டனர்.
இதற்காக ஓர் உப குழு அமைக்கப்பட்டு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்ட அரசியல் அம்சங்களை நிறைவேற்றுவதற்கான வழி வகைகளை ஆராய்வது எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப் பிரகடனத்தில் வெளியிடப்பட்ட பல அம்சங்கள் தற்போதைய அரசினால் பொதுமக்கள் அபிப்பிராயத்தைக் கேட்டு வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்டுள்ளன.
ஒஸ்லோ பிரகடனத்தில் வெளியான அரசியல் கோரிக்கைகளில் சில பின்வருமாறு,
• மத்தியிலும், சுற்றிலும் அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது?
• மத்தியில் எவ்வாறு பகிர்வது?
• புவியியல் பிரதேசங்கள்.
• மனித உரிமைப் பாதுகாப்பு.
• அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறை.
• பொது நிதி நிர்வாகம்.
• சட்டம் ஒழுங்கு.
மேற்குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பாரும் ஏற்றுக்கொண்டது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
அதுவும் சமஷ்டி அடிப்படையில் தீர்வை நோக்கிச் செல்வது என்பது பல சிக்கல்களை நோக்கிச் செல்லும் வழியாக இருந்தது.
அதாவது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்பது புலிகளுக்கும், சமஷ்டியை ஏற்பது அரசிற்கும் அரசியல் தற்கொலையாகவே அமையும்.
எனவே இரு சாராருக்கும் ஏற்பட்ட இந்த உடன்பாடு குறித்து பலத்த சந்தேகம் அங்கு காணப்பட்டது. விடுதலைப்புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுள்ளார்களா?
என பாலசிங்கத்திடம் கேட்டபோது பிரபாகரனின் 2002ம் ஆண்டு மாவீரர் தின உரையை மேற்கோள் காட்டி புலிகளின் அரசியலின் இரட்டைத் தன்மையை விளக்கினார்.
அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்டையில் சுயாட்சி, சுய அரசு எட்டுவது முதலாது கட்டம்.
அரசாங்கம் இதில் நேர்மையாக பிரச்சனைகளை அணுகுமானால் இறுதித் தீர்வு ஐக்கிய இலங்கைக்குள் அமைந்ததாக அமையும்.
அரசு உள்ளக அம்சங்களைத் தடைசெய்யுமாயின், பிராந்திய அரசுக் கோரிக்கையை நிராகரித்தால் விடுதலைப்புலிகளுக்குள்ள மாற்று வழி சுதந்திர அரசே என்றார்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கி பாலசிங்கம் திரும்பியதும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகள் பற்றிய ஒன்றியம் நோர்வே தலைமையில் உருவாக்கப்பட்டு அலுவல்கள் தொடர்ந்தன.
புலிகள் தமது தற்போதைய மாற்றத்தை மக்கள் முன்னால் எவ்வாறு எடுத்துச் செல்வது? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போதைய நவீன உலகில் காணப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்துக்கள் எழுந்தன.
சுயாட்சி என்பது சமஷ்டிக் கட்டமைப்பிற்குள் மட்டுமே சாத்தியமாகும். சுயாட்சி, கூட்டாட்சி என்ற அடிப்படையிலான அரசுக் கட்டுமானமே தமது இலக்கு என புலிகளின் அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் விபரிக்கத் தயாரானார்கள்.
ஒஸ்லோ பிரகடனத்தில் காணப்பட்ட வாசகங்கள் சமஷ்டி பற்றி மட்டுமே குறிப்பிட்டதும் அதில் உள் அலகுகள் பற்றிய விபரங்கள் காணப்படாமையும் நோர்வேயினருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
அதாவது அரசியல் தீர்வை நோக்கிய பயணம் என்பதை விட சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சி என எண்ணினார்கள்.
ஏதாவது ஒரு புள்ளியில் இவை தோல்வி அடைந்தால் தம்மீது பழி விழாமல் காத்துக்கொள்வதற்கான தந்திரமே எனவும் கருதினார்கள்.
அவ்வாறு தோல்வி அடைந்தால் மாவீரர் தின உரையில் தெரிவித்தவாறு பிரிவினையை நோக்கிய நியாயங்களாக இத் தோல்விகள் மாற்றம் பெறும்.
தொடரும்…
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating