கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என்ற பரிசோதனை அவசியமா?
பெண்கள் கர்ப்பம் அடைந்தகாலத்தில், கருவில் உள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என்று பரிசோதனைக்கு செல்லும் நேரத்தில் சொல்லக்கூடாது என்று தடைச்சட்டமே இருக்கிறது. கர்ப்பமடைந்த முதல் 3 மாதங்களில் ‘அல்டிரா சோனோகிராம்’ என்ற கருவி மூலம் பரிசோதனைக்கூடங்களில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி சோதனை நடக்கும்.
அந்த சோதனை என்பது, அந்த பெண் கர்ப்பமடைந்திருக்கிறாளா?, இல்லையா? என்று கர்ப்பத்தை உறுதிசெய்யும் சோதனையாகும். அடுத்த 3 மாதங்களில் இதே கருவி மூலம் மற்றொரு சோதனை நடக்கும். அதில், குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கிறதா?, இதயநோய் இருக்கிறதா?, நரம்பியல் நோயோ?, ஏதாவது சிகிச்சை அளிக்கமுடியாத நோயோ இருக்கிறதா? என்பதுபோன்று பல சோதனைகள் நடந்து குழந்தையின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படும்.
இதற்கு அடுத்தாற்போல, அடுத்த 3 மாதங்களில் பிரசவத்துக்கு அந்த பெண் தயாராகும் நிலையில் குழந்தையின் வளர்ச்சி, அது இருக்கும் நிலைமை போன்ற பல பரிசோதனைகள் நடக்கும். இந்த 3 பரிசோதனைகளிலும் கருவில் உள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என்று நிச்சயமாக பரிசோதனை செய்பவருக்கும், டாக்டர்களுக்கும் தெரியும். ஆனால், கண்டிப்பாக அதை வெளியே சொல்லக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அப்படி வெளியே சொன்னால், தண்டிக்கவும் சட்டம் வகைசெய்கிறது.
இந்த நிலையில், மேனகாகாந்தி புரட்சிகரமான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்ற சட்டத்துக்கு விரோதமாக தெரிவித்துவிடும் அனைத்து டெக்னிசியன்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியம். இதற்கு பதிலாக, ஏன் இந்த நடவடிக்கைகளிலேயே ஒரு முழுமையான மாற்றம் கொண்டுவரக்கூடாது?. ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன், இதுபோன்ற பரிசோதனைக்கூடங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்பதை அந்த கர்ப்பிணி பெண்ணிடமே சொல்லிவிட்டு, ஒரு பதிவேட்டில் அதை குறித்துவைத்து, பிரசவம் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கமுடியும்.
கருவில் இருக்கும் குழந்தை பெண் என்றால், பிரசவம்வரை தீவிரமாக கண்காணிக்கமுடியுமே என்று ஜெய்ப்பூர் மாநாட்டில் கூறியிருக்கிறார். மேனகாகாந்தியின் கருத்து, பலத்த விமர்சனத்தை கிளப்பிவிட்டது. ஆனால், இது முடிவான முடிவல்ல. அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்க எந்த கருத்துருவும் இல்லை என்று தன்னுடைய கருத்து என்று மட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால், மேனகாகாந்தி கூறிய கருத்து, நாடு முழுவதும் அவரது கருத்துகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துக்களை கிளப்பிவிட்டது.
ஆனால், நிச்சயமாக இது வரவேற்புக்குரிய கருத்துதான் என்றும் கூறுகிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கூறும் சமுதாயத்தில், கர்ப்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு அது ஆணா?, பெண்ணா? என்று தெரிந்துகொள்வதற்கான உரிமை நிச்சயம்வேண்டும். ஒரு பெண் கருவுற்ற நிலையில், 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம் என்று சட்டபூர்வமாகவே அங்கிகாரம் இருக்கிறது.
மேலும், அப்படியே கருவில் உள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என்று தெரிந்தபிறகு, ஒரு பெண் கருக்கலைப்பு செய்யமுற்பட்டால், அவருக்கு தீவிர ஆலோசனைகள் கூறி, அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுக்கலாம். உடனடியாக பதிவேட்டில் குறிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால், பெண் சிசுக்கொலை நிச்சயமாக தவிர்க்கப்படும். மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதும் ஊக்குவிக்கப்படும் என்பதால், குழந்தை இறப்பு விகிதமும் குறையும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating