வேறு திசைக்கு திரும்பும் கதை…!!

Read Time:18 Minute, 56 Second

article_1471319169-2தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நின்று நிதானித்து நிலைமைகளைப் புரிந்து கொள்ள, சிலவேளைகளில் – ஒரு தோல்வி அவசியமாக இருக்கிறது. தோல்விகளிடம் கற்றுக்கொண்டவர்கள், அநேகமாக வெற்றிபெறத் தவறியதில்லை.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் அரசியல் பயணம், ஏறக்குறைய 30 வருடங்கள் கொண்டவை. 1988 ஆம் ஆண்டு, வடக்கு – கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதோடு, அவரின் பிரதிநிதித்துவ அரசியல் ஆரம்பமாகியது. அதாவுல்லாவின் நாடாளுமன்ற அரசியல் வாழ்க்கை 15 வருடங்களாகும். 2000 ஆம் ஆண்டு – முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றார். முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் அதற்குக் கைகொடுத்தது. பிறகு 2000, 2001, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலே போட்டியிட்டு, தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இந்தப் பயணத்தில் பிரதியமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக – பல பதவிகளை வகித்தார். இப்படி உச்சத்தில் நின்று கொண்டிருந்தவர், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அந்தத் தோல்வி, அதாவுல்லாவுக்கு அவசியமானதாகும்.

அரசியலில் அதாவுல்லா ஓர் ஆச்சரியக் குறியாக இருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக அரசியலைத் தொடங்கியவர், பின்னாட்களில் அந்தக் கட்சிக்கு எதிராகவே அரசியலைச் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளானார். முஸ்லிம்களுக்குள் ஓர் ஆலமரம் போல் வளர்ந்து நின்ற முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக, தேசிய காங்கிரஸ் என்கிற ஒரு கட்சியை ஆரம்பித்து, அரசியல் வித்தை காட்டினார். அதனால், அரசியலில் அதாவுல்லா ஓர் ஆச்சரியக் குறியாக இருந்தார் என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானதாக இருக்காது.

முஸ்லிம் அரசியல் அரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிர்க்கடை போட்டவர்களில் குறித்துச் சொல்லத்தக்கவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா. அஷ்ரப்;புக்குப் பிறகு, அபிவிருத்தி அரசியலின் ருசியை கிழக்கு முஸ்லிம்களுக்குக் காட்டியவராக அதாவுல்லாவைச் சொல்வார்கள். அபிவிருத்தி என்கிற பெயரில் ஒரு கல்லைக்கூட நட்டுவைக்க முடியாமல் இருந்த காலங்களில், அதாவுல்லா மாடிகளைக் கட்டிக்கொண்டிருந்தார். ஆயினும், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோற்றுப் போனார்.

எல்லாத் தோல்விகளுக்குப் பின்னாலும் சில கதைகள் இருக்கும். அந்தக் கதைகள் கசப்புக்களாலும், வலிகளாலும் நிறைந்திருக்கும். அதாவுல்லாவின் தோல்விக்குப் பின்னாலுள்ள கதைகளும் அதற்கு விதிவிலக்கானவையல்ல.

ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு ஒரு தளம் தேவையாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, தனது சொந்த ஊரான அக்கரைப்பற்றினை தனக்கான தளமாகத் தேர்வு செய்து கொண்டார். அதனால், அக்கரைப்பற்று தொடர்பில் – அவர் அதிக கரிசனை கொண்டார். அக்கரைப்பற்றை அபிவிருத்திகளால் நிறைத்தார். அக்கரைப்பற்றினை வைத்து தனது அரசியலைச் செய்ய முடியும் என்று அவர் நம்பினார். இதன் உச்ச நிலையாக, ஒரு கட்டத்தில் அக்கரைப்பற்றினை ‘மட்டுமே’ அவர் நம்பத் தொடங்கினார். அதாவுல்லாவின் தோல்விக்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.

இன்னொருபுறம், தனது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் மாற்று அரசியலைச் செய்தவர்களையெல்லாம் அதாவுல்லா மூர்க்கமாக எதிர்த்தார். தனக்கு எதிரான அரசியல் செயற்பாட்டாளர்களை அடக்கத் தொடங்கினார். அதாவுல்லா, ‘பண்டா குழு’ வை வைத்திருந்ததாக தேசிய ஊடகங்களிலும் ஒரு காலத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான குழுக்களின் செயற்பாடுகள் – ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் போயின. இதுவும், அதாவுல்லாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அரசியல்வாதிகளுக்கு எப்போதும் விமர்சனங்கள் பிடிப்பதில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவையும் ஊடகங்கள் விமர்சித்தன. அவரின் தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டின. ஆனால், அவற்றினையெல்லாம் அதாவுல்லா காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அவ்வப்போது, தன்னை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை பொதுவெளியில் திட்டித் தீர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். அநேகமாக, அதாவுல்லாவை ஊடகவியலாளர்களால் தொடர்பு கொள்ள முடியாதிருந்தது. ஊடகவியலாளர்களுக்குப் பதிலளிப்பதை அதாவுல்லா வேண்டுமென்றே தவிர்த்து வந்தார். இந்த நிலைவரமும் – அதாவுல்லாவின் தோல்வியில் கணிசமான பங்கு வகித்தது.

இன்னொருபுறம், அதாவுல்லா அதிகாரத்தில் இருந்தபோது, அவரோடு இருந்தவர்களில் சிலர், அதாவுல்லாவைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாததொரு இரும்பு வேலியை உருவாக்கி வைத்திருந்தார்கள். இதனால் அவர்களை மீறி, அதாவுல்லாவை சாதாரண மனிதர்கள் யாரும் சந்திக்க முடியாததொரு நிலை உருவாகியிருந்தது. இந்த நிலைவரமானது, மக்களிடமிருந்து அதாவுல்லாவை தூரப்படுத்தியது. அதாவுல்லா தோற்றுப்போவதற்கு இதுவும் ஒரு காரணமானது.

இறுதியாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு, அந்தச் சூட்டோடு சூடாக – ஐ.ம.சு கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் பொதுத் தேர்தலிலே அதாவுல்லா போட்டியிட்டபோது, மஹிந்த மீது கொண்ட ஒட்டுமொத்தக் கோபத்தையும், அதாவுல்லா மீது – அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் தீர்த்துக் கொண்டனர். விளைவு, 16771 விருப்பு வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்ட நிலையில், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தோற்றுப் போனார்.

இந்தத் தோல்வி – அதாவுல்லாவை மிகக் கடுமையாகப் பாதித்தது. தனது ஊரான அக்கரைப்பற்று மீது, அதாவுல்லா கடுமையான அதிருப்திகளை வெளிப்படுத்தினார். தனது ஊர், தன்னைத் தோற்கடித்து விட்டதாக அவர் ஆதங்கப்பட்டார். 15 வருடங்களாக நாடாளுமன்ற பிரதிநிதிநித்துவ அரசியலில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த பந்தயத்தில், அதாவுல்லா சறுக்கி விழுந்தபோது எதிராளிகள் கோஷமிட்டார்கள். அதாவுல்லாவின் கதை முடிந்தது என்றார்கள். பொதுவான அபிப்பிராயங்களும் அப்படித்தான் இருந்தன. ஆனால், கதை இப்போது வேறு திசைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டமானது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டமாகும். அதனால், முஸ்லிம் அரசியல் செயற்பாட்டுக்கான பிரதான தளமாகவும் இந்த மாவட்டம் உள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்றும் அம்பாறை மாவட்டத்தைக் கூறுவார்கள். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான அரசியலை – ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அதாவுல்லா செய்து வந்தார். ஆனால், அதாவுல்லாவின் தோல்விக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில், மு.காவுக்கான எதிர் அரசியல் இல்லாமல் போனது. கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான மூன்று முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பானவர்களாவர். இதனால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏகபோக அரசியல் உரிமையொன்று உருவாகியுள்ளதாக பலரும் பேசிக்கொண்டனர்.

இவ்வாறானதொரு நிலையில்தான் அதாவுல்லாவின் பக்கம் ஒரு மெல்லிய காற்று வீசத் தொடங்கியது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது, ஐ.ம.சு.கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகும். ஆயினும், மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்குப் பின்னர், அதாவுல்லாவுக்கும் ஐ.ம.சு.கூட்டணிக்கும் இடையிலான உறவு தேக்கமடைந்திருந்தது. ஐ.ம.சு.கூட்டணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்டமையினால், அந்தக் கூட்டணியில் அதாவுல்லாவுக்கு இடம் கிடைக்காது என்று பலரும் நம்பினர். ஆனால் யாரும், எதிர்பாராத வகையில், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியை – ஐ.ம.சு.கூட்டமைப்பானது தன்னுடைய பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகச் சேர்ந்துக் கொண்டதோடு, அதாவுல்லாவுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களையும் ஜனாதிபதி வழங்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலைவரமானது மு.காவின் ஏகபோக அரசியல் கனவில் இடியை இறக்கி விட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு அம்பாறை மாவட்டம் சார்பில் கிழக்கு மாகாணசபையில் மூன்று உறுப்புரிமை உள்ளன. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர் அலி மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் – அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இவர்களில் ஆரிப் சம்சுதீன் – முஸ்லிம் காங்கிரஸில்

இணைந்து கொண்டார். மாகாணசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் படி, இவ்வாறு ஒருவர் கட்சி மாறும் போது, அவரின் மாகாணசபை உறுப்புரிமையை அவருடைய கட்சியினால் இல்லாமல் செய்ய முடியும். ஆனாலும், ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கின்றமையினால், ஆரிப் சம்சுதீனின் மாகாணசபை உறுப்புரிமையினை நீக்கி விடாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் இருந்தது. ஆனால், மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்புடன் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சி இணைந்த கையோடு, ஆரிப் சம்சுதீனின் மாகாணசபை உறுப்புறுமையினை நீக்கியுள்ளதாக அந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது – அதாவுல்லாவுக்கு பெரு வெற்றியாகவும், மு.காவுக்கு விழுந்த மற்றொரு இடியாகவும் அமைந்துள்ளது.

இதனையடுத்து, அதாவுல்லாவின் மாகாணசபை உறுப்பினரும், அவருடைய தேசிய காங்கிரஸ் கட்சி அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை – கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் பிரசதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராகவும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராகவும் உதுமாலெப்பையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இதேவேளை, இறக்காமம் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, அதாவுல்லாவின் கட்சி சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எம்.ஐ. மன்சூர் என்பவருக்கு ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதாவுல்லாவின் பக்கமாக வீசத் தொடங்கிய மெல்லிய காற்றானது, தற்போது வேகம்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இன்னொருபுறம், அதாவுல்லாவுக்கு ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கதையொன்று உலவுகிறது. இது உத்தியோகபூர்வமற்றதொரு கதையாயினும், ஐ.ம.சு.கூட்டமைப்புக்குள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு குறிப்பிடத்தக்கதொரு இடமொன்று மீளவும் உருவாகி உள்ளதை இதன் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

மைத்திரியும் – ரணிலும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை நடத்திச் செல்கின்றபோதிலும், தனித்தனியே இருவரும் தமது கட்சி அரசியலையும் வெற்றிகரமாக நடத்த வேண்டிய தேவையும் உள்ளது. இந் நிலையில், ஐ.தே.கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்துள்ளமையினால், மு.காவுக்கு எதிர் பாசறையில் அரசியல் செய்கின்றவரும், முஸ்லிம்களின் வாக்குகளில் ஒரு தொகையினை தன்வசம் வைத்திருப்பவருமான அதாவுல்லாவினை அரவணைக்க வேண்டிய தேவை – ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவரான மைத்திரிக்கு ஏற்பட்டுள்ளமை தவிர்க்க முடியாது.

அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த நிலைவரமானது அதாவுல்லாவுக்கு ஒரு புனர்ஜென்மத்தைக் கொடுப்பதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னைப் பற்றிய சுய விமர்சனத்தினைச் செய்து கொள்ள, அதாவுல்லாவுக்குக் கிடைத்திருக்கும் மிக சிறந்த காலம் இதுவாகும்.

தனது தவறுகளையெல்லாம் அடையாளம் காண்பதற்கும், அவற்றினைச் சரிசெய்து கொள்வதற்கும், அதாவுல்லாவுக்கு கிடைத்திருக்கும் இந்தத் தோல்வி நல்லதொரு வாய்ப்பாகும்.

தோல்விகளிலிருந்து வாய்ப்புக்களைப் பெறுகின்ற அதிஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூண்டுக்குள் நின்று காளையைச் சீண்டியவருக்கு நேர்ந்த கதி…!! வீடியோ
Next post உங்கள் அழகை அதிகமாக்கும் எலுமிச்சை… இதில் இம்புட்டு ரகசியமா…!!