முன்னாள் போராளிகள் விவகாரம்: விஷேட வைத்தியர்களுடன் கலந்துரையாடல்..!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்காக விஷேட வைத்தியர்களுடன் மூன்று பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் பீ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இவர்களை பூரண வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன்போது இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பிலான உண்மைத் தன்மை பற்றி மட்டுமே ஆராயப்படவுள்ளது என கூறப்படுகின்றது.
அத்துடன், புனர்வாழ்வளிக்கப்பட்டு உயிரிழந்த போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, முதலில் அது தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து வட மாகாணத்தின் விஷேட வைத்தியர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்தப் பரிசோதனைகளை மாகாண மட்டத்தில் மட்டுமே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதோடு, அரச வைத்தியசாலைகளில் இதற்கான போதிய வசதிகள் இல்லாதவிடத்து, சுகாதார அமைச்சிடம் கோரி அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர், புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பலர், கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் போராளியான தமிழினி என அழைக்கப்படும் சிவகாமி ஜெயக்குமரனும் அண்மையில் இயற்கை எய்தினார்.
இந்தநிலையில், இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டபோது, மெல்லப் பாதிக்கும் வகையிலான இரசாயனம் கலந்த ஊசி மருந்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏற்றப்பட்டதாகவும், அதன் காரணமாகவே பலர் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பிலான மக்கள் கருத்தறியும் நிகழ்வொன்றில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தாங்கள் தடுப்பில் இருந்த போது தங்களுக்குத் தடுப்பூசி என தெரிவித்து சந்தேகத்திற்கு இடமான முறையில் ஊசி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
முன்னர் தன்னால் 100 கிலோ எடையுடைய பொருளைத் தூக்கிக்கொண்டு ஓடிச் செல்லக்கூடியதாக இருந்தது என்றும் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இப்போது பத்து கிலோ எடை கொண்ட பொருளைக்கூட தூக்க முடியாதிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
தடுப்பில் இருந்தபோது அந்த தடுப்பூசியின் மூலம் தங்களுக்கு ஏதோ விஷம் கலந்த மருந்து அல்லது இரசாயனம் கலந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டதாக அவர் முறையிட்டு, தங்களை முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
இதனையடுத்து. இந்த ஊசி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் பல தரப்பினராலும் எழுப்பப்பட்டிருந்தது. முன்னாள் போராளிகள் முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரி வடமாகாண சபையில் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating