மரம் வளர்த்தல்…!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ‘மரம்’ என்ற வார்த்தைக்கும் மிகப் பெரிய தொடர்பு இருக்கின்றது. பொதுவாக மு.கா என்றவுடனேயே அஷ்ரப் என்ற மாமனிதன், மரம் என்ற சின்னம் ஆகிய விடயங்கள் அடிப்படை ஆதரவாளர்களுக்கும் போராளிகளுக்கும் நினைவுக்கு வரும். அக்கட்சியின் வளர்ச்சியில் சில ‘உயர்திணையானவர்கள்’ செய்த பங்களிப்பை விட, ‘ஆயிரம் விளக்குடன் எழுந்து வந்தான்’ என்ற எழுச்சிப் பாடலும் ‘மரம்’ என்ற சின்னமும் செய்த பங்களிப்பு அதிகமானது.
சிலபோது தேர்தல் காலங்களில் இந்தச் சின்னத்தை மறந்து வேறு சின்னத்தில் கட்சி போட்டியிட்டாலும், இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதற்கெதிராக பல சின்னங்கள் களத்தில் குதித்தாலும் மரம் என்ற சின்னத்தின் உட்பொதிந்துள்ள தாற்பரியங்கள் என்னவென்று இன்று அக்கட்சியில் இருக்கின்ற சிலருக்கு தெரியாது என்றாலும், மரம் என்ற அடையாளச் சின்னத்தை இன்னும் மக்கள் மனங்களில் இருந்து முற்றாகப் பிடுங்கி எறிய முடியாது போயிருக்கின்றது. இவ்வாறான ஒரு காலகட்டத்திலேயே ‘வீட்டுக்கு வீடு மரம்’ என்ற வேலைத் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்திருக்கின்றது.
உலக பசுமையின் அடிப்படைக் கூறாகவும், மு.காவின் சின்னமாகவும் இருக்கின்ற மரத்தை நாடெங்கும் ஆதரவாளர் வீடுகள் தோறும் நட்டுவளர்க்கும் இந்த வேலைத்திட்டம், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இது வெறுமனே மரத்தை நட்டு வளர்க்கும் வேலைத்திட்டம் மட்டுமல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கின்றது. அதாவது வீடுகளில் நடப்படும் மரங்களின் வளர்ச்சிப் படிமுறைகளை அவ்வூரில் உள்ள கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கண்காணிக்கின்ற சமகாலத்தில் அந்தக் குடும்பத்துடன் கட்சி மிக நெருக்கமான தொடர்புகளைத் தொடராகப் பேணி வரும். இதற்கமைவாக, கட்சிச் செயற்பாடுகளில் அவ்வீட்டிலுள்ள இளைஞர்களை உள்வாங்குதல், பரஸ்பர அர்ப்பணிப்பை உருவாக்குதல், தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி போன்ற விடயங்களில் அவர்களுக்கு வசதியேற்பாடுகளை செய்தல் போன்றவற்றை, இந்த வேலைத்திட்டத்தின் பிரதான குறிக்கோள்களாக மு.கா வகுத்துக் கொண்டிருக்கின்றது.
உண்மையாகவே, நவீன யுகத்தில் மரங்கள் குறைவடைந்து போனமையால் உலக மக்கள் சமுதாயம் மறைமுகமாகப் பாரதூரமான சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றன. சூரிய ஒளியில் காபனீரொட்சைட்டை உள்வாங்கி ஒட்சிசனை மரங்கள் வெளியிடுகின்றன என்பதை அறிந்து வைத்திருக்கும் நமது, சூழல் விரோத செயற்பாடுகளால் பச்சைவீட்டு விளைவும் புவி வெப்பமடைதலும் பெரிய சவால்களாக உருவெடுத்திருக்கின்றன. அண்மைக் காலங்களில் இலங்கையிலும் இந்நிலைமைகள் வெகுவாக அவதானிக்கப்பட்டுள்ளன. இதற்கான நீண்டகால தீர்வுகளில் ஒன்றாக மரம் நடுதல் செயற்றிட்டங்கள் இன்றைய நடைமுறைப் போக்காகவும் கருத்திட்டமாகவும் மாறியிருக்கின்றது. அந்த வகையில் நோக்கினால், மு.காவின் மரம் நடுதல் என்ற வேலைத்திட்டம் சூழல் பாதுகாப்பு மற்றும் ஆதரவாளர்களுடனான தொடர்பை பேணுதல் என்ற இரண்டு மாங்காய்களை வீழ்த்துவதற்கான ஒரு கல்லாக கையிலெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
யார் என்ன சொன்னாலும் இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு செயற்பாடாகும். ஓர் அரசியல் கட்சி என்பது சூழலியல் விடயங்களில் அக்கறை செலுத்துவது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வீடுகள் தோறும் மரம் நடுகின்ற வேலைத்திட்டத்தை முடுக்கிவிட்டுள்ள மு.கா தலைவரும் தளபதிகளும் மரத்தை நட்டோம், போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம் என்று இருந்து விட முடியாது. மரத்தை நடுவது மட்டுமல்ல அதனை வளர்ப்பதிலும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தொடக்கம் தலைவர் வரை எல்லோருக்கும் முக்கிய பொறுப்பிருக்கின்றது. ஏனென்றால், மக்கள் மனங்களில் ஆழ வேரோடியிருந்த ‘மரம்’ என்ற கட்சியின் சின்னத்தை அல்லது அதன் ஆகுபெயரான ‘மு.கா’வை சரியாக வளர்த்து பராமரிக்கத் தவறி விட்டதாக, பாரிய குற்றச்சாட்டுக்கள் இப்போதெல்லாம் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அதுபோல வீட்டுக்கு வீடு வைக்கப்படும் மரங்களையும் பராமுகமாக விட்டுவிட முடியாது.
மு.கா என்ற இந்தக் கட்சியை மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் 1980களில் ஆரம்பித்த போது, ‘பழம் தின்பது’ பற்றிய கனவுகள் அவருக்கு இருக்கவில்லை. அவரும் அவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் கட்சியை அதாவது மரத்தை உயிரைக் கொடுத்தேனும் வளர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். கிழக்கில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனுடைய உள்ளத்திலும் மரம், நட்டுவைக்கப்பட்டது.
முஸ்லிம் கட்சி ஒன்று உருவாக வேண்டுமென்ற தேவையும் அக்கால இளைஞர்களின் உத்வேகமும் இதற்கு உரமாக அமைந்தன. மரத்தை வளர்ப்பதற்காக அஷ்ரப்பும் அவருடன் அன்றிருந்த பலரும் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. கட்சிச் செலவுக்காக வீடுவீடாக உண்டியல் குலுக்கி, காட்போட் மட்டையில் படுத்துறங்கி, பயணிப்பதற்கு வாகனமில்லாமல் தடுமாறி, கட்சியையும் மரச் சின்னத்தையும் பதிவு செய்வதில் பல சவால்களை எதிர்கொண்டு… இப்படியாக அதனை வளர்த்தெடுத்தனர்.
ஆனால், தலைவரின் மரணத்துக்குப் பிறகு என்ன நடந்தது? சுருக்கமாகக் கூறினால். மரத்தை வளர்த்தவர்களில் பலர் மெதுமெதுவாக ஓரங்கட்டப்பட, பழந்தின்னிகள் வந்தார்கள். சிலர் மரத்திற்கு கீழே நின்றுகொண்டு பழங்களைப் பறித்தனர். இன்னும் சிலர் எதிர்ப்பக்கம் நின்றுகொண்டு கல்லெறிந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தப் பெருவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டுக் காலாகாலத்திற்கும் மக்களுக்கான கட்சியாக அதனை வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
அதைவிடுத்து, சிலர் பழங்களை எடுத்துக் கொண்டனர். சிலர் கிளைகளை முறித்து விறகுக்காக எடுத்துச் சென்றனர். மரத்தை தங்கள் இதயத்தில் வளர்த்த மக்களுக்கு, குறிப்பாக கிழக்கு மாகாண போராளிகளுக்கு அழுகிய பழங்களும் சில மாங்கொட்டைகளுமே கிடைக்கப் பெற்றன. தாம் வளர்த்த மரத்தில் இருந்து கிடைக்கும் பலாபலன்களை யாரோ அனுபவித்தாலும் பரவாயில்லை, அவர்கள் தம்முடைய அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்கு பாடுபடுகின்றார்கள் இல்லை என்பதே கட்சியை வளர்த்த போராளிகளினதும் அபிமானிகளினதும் கவலையாக இருக்கின்றது.
மு.கா கட்சி முன்னெடுக்கும் வீட்டுக்கு ஒரு மரம் வேலைத்திட்டம் மிகவும் முன்மாதிரியானது என்பதில் மறுபேச்சில்லை. கட்சிக்குள்ளும் புறமும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கின்றது என்பதற்காக, ஒரு சூழல்சார்ந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என்று தடைபோடவும் முடியாது. ஆனால், இந்த வேலைத்திட்டம் வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதன்மூலம் கட்சியின் அரசியல் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளும் குறித்துமே சில ஐயங்கள் இருக்கின்றன.
அதாவது, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக்கள் பழைய நிலையில் இல்லை. அஷ்ரப் எப்படியான கட்டமைப்புடன் ஒவ்வொரு ஊரிலும் கட்சியை (மரத்தை) வளர்த்தாரோ அந்த நிலைமை இப்போதைக்கு இல்லை. அதற்குப் பதிலாக கிழக்கு மாகாணத்தின் பல ஊர்களில், ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு மூன்று பிரிவாக கட்சியின் செயற்பாட்டாளர்கள் உடைந்திருக்கின்றார்கள். மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலும் இதனை அவதானிக்க முடிந்தது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள மு.கா முக்கியஸ்தர்கள் ஒன்றாகச் சேர்ந்த பிரதான நிகழ்வை நடாத்தாமல் ஆளுக்கொரு இடத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரத்தை நட்டுவைத்தாhர்கள்.
நிலைமை இவ்வாறிருக்கும் போது, மு.காவின் வேலைத்திட்டத்தின் கீழ் மரம் நடப்பட்டுள்ளதா? அதன் வளர்ச்சி சரியாக உள்ளதா? சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றதா? என்று, சரியான முறைப்படி மதிப்பிட வேண்டுமாக இருந்தால் கட்சியின் மத்திய குழுக்கள் மீள ஒழுங்குபடுத்தப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். அந்த மு.கா உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் பல மணித்தியாலங்களை இதற்காக செலவழிக்க வேண்டியிருக்கும். ஓர் ஊரில் 200 மரங்கள் நடப்படுகின்றது என்றால், அதனுடன் 200 வீடுகளின் மரங்கள் மட்டுமன்றி அவர்களது விவகாரங்களும் தொடர்புபடும். இவற்றை எல்லாம் இனங்கண்டு ஒவ்வொரு வீட்டின் தொழில், கல்விசார் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பது என்றால்… அது மிகவும் நல்ல கனவே! ஆனால் கட்சிக்குள் எல்லா மட்டங்களிலும் இருக்கின்ற முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு, உட்கட்சிப் பொறிமுறை சீரமைக்கப்படாவிட்டால், அபிவிருத்தித் திட்டங்களுக்காக நாட்டப்பட்ட அடிக்கற்கள் போல, உப்புக்குச்சப்பான மரங்களாவே இவை இருக்கும். இதேவேளை, மர நடுகை மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்கை மு.கா அடைந்தாலும் கட்சியின் இலக்குகள் அடையப்பட்டதாக அதைக் கருத முடியாது.
மு.கா கட்சி என்கின்ற பெரு விருட்சத்தைப் பற்றி இவ்விடத்தில் சொல்ல வேண்டும். ஒரு மரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அது இருந்தது அஷ்ரப் காலத்தில்! ஒரு மரம் என்றால் அது பல கிளைகள் இருக்கும், அதில் பழங்கள் காய்த்துக் குலுங்கும், சில பறவைகள் வாடிக்கையாக வந்து போகும், மரத்தின் விதைகளை எந்த இடத்தில் கொண்டு சென்று போட்டாலும் அங்கு முளைக்கும், அதனது வேர்கள் ஆழமாகவும் பரந்தும் நல்ல பிடிப்புடனும் இருக்க, மரம் நிமிர்ந்து நிற்கும். அதிலிருந்து கிடைக்கின்ற கனிகள் – மரத்தை நட்டவர்களுக்கும் அதைப் பராமரித்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதனை தனியே யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதில் வரும் பழங்களை தமது பைகளில் மாத்திரம் தலைவர் கூட நிரப்பிக் கொள்ள முடியாது. மரம் என்றால் – அதுதான் மரம். இப்பேற்பட்ட பண்புடனேயே அப்போது மு.கா என்கின்ற மரம் இருந்தது. இதை எந்தக் கொம்பனாலும் மறுக்க முடியாது.
ஆனால், பழங்களை எல்லாம் பறித்துக் கொண்டவர்கள் அதைப் பராமரிக்காமல், பசளை போடாமல் விட்டுவிட்டால்… மரம் ஓர் உண்மையான மரமாக நிமிர்ந்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. மரத்தை நட்டு வளர்த்தவர்களை துரத்தியடித்துவிட்டு, கிளைகளை உடைத்துவிட்டு, வேர்களை அறுத்துவிட்டு, கறையான்களுக்கு இடமளித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் பழம்பறிக்க வந்தவர்களை நம்பியும் வேடந்தாங்கல் பறவைகளை நம்பியும் மரத்தை வளர்க்கலாம் என்று நினைத்தால், அது சாத்தியமாகாது.
முஸ்லிம் காங்கிரஸ் என்பது, ஒரு காலத்தில் ஒரு சமூகத்துக்கே வாழ்வளித்த ஒரு மரமாகும். மு.கா தலைவர் ஹக்கீம் தொடக்கம் அவரது சகோதரர் தொட்டு இன்று கட்சிக்குள்ளே நாடாளுமன்றம், மாகாண சபை ஆகியவற்றின் ஆசனங்களை அலங்கரிக்கும் உறுப்பினர்களும் அதேபோன்று மு.காவில் இருந்து பிரிந்துசென்று அரசியல் செய்கின்ற மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் சந்தேகத்திற்கிடமின்றி, இந்த மரம் வாழ்வளித்து இருக்கின்றது. அது கற்பகதருவா அல்லது ஆலமரமா என்பதல்ல பிரச்சினை, அது எதுவாக இருக்க வேண்டுமோ அதுவாக இருந்தது. ஆனால், இன்று மரம் முறையான பராமரிப்புமின்றி, பார்ப்பதற்கே பரிதாபமாக நிற்கின்றது. மரத்தின் கனிகளைக் குறிவைப்பதை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக அதன் பராமரிப்பாளர்கள் இருப்பதும், தமக்கிடையே கனிச்சண்டை பிடித்துக் கொண்டிருப்பதும் பொது மக்களைக் கவலை கொள்ளச் செய்திருக்கின்றது.
ஆதலால், ‘வீட்டுக்குவீடு மரம்’ வேலைத்திட்டத்தின் கீழ், வீடுகளில் நடப்படுகின்ற மரங்களும் அந்த குடும்பங்களும் முறையாக பரமரிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக ஒரு காலத்தில் ஓங்கி வளர்ந்திருந்த ‘முஸ்லிம் காங்கிரஸ் என்ற மரமும்’ பராமரிக்கப்பட வேண்டியிருக்கின்றது. இவ்விரண்டு மரங்களும் முறையாக பராமரிக்கப்படாமல், அடி பலமிழந்து, பட்டுப்போய்விடக் கூடாது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating