என்ன செய்யப் போகிறார் மைத்திரி?
ஜனசட்டன என்ற பெயரில் பாதயாத்திரை மற்றும் கூட்டம் என்று, அரசாங்கத்துக்கு எதிரான, பெரியளவிலான போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் நடத்தியிருக்கும், இந்த அரசியல் நடவடிக்கை குறித்து அரசாங்கத்தின் தரப்பில் இருந்து வெளியிடப்படும் கருத்துக்களில் தாம் எதற்கும் அஞ்சவில்லை என்பது போன்ற தொனியை அவதானிக்க முடிகிறது.
என்னதான் கொக்கரித்தாலும், 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
கால்கடுக்க நடந்தாலும் சரி, வாய்கிழியக் கத்தினாலும் சரி, நாம் ஒன்றும் எமது பயணத்தை நிறுத்திவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருக்கிறார்.
இரண்டு தரப்புகளுமே தமது பயணத்தை தடுத்து நிறுத்தி விடப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றன.
தம்மைப் பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறைகளில் அடைத்தாலும், தமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்று கூறியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
அதுபோலவே, எத்தகைய பாதயாத்திரைகளை, போராட்டங்களை நடத்தினாலும், தமது பயணத்தை நிறுத்த முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்திருக்கிறார்.
ஆக மொத்தத்தில், இரண்டு தரப்புகளின் பயணங்களும், நிறுத்தப்படப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு பிளவுகள் தோன்றியிருக்கின்றன.
இதற்கு முன்னரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடையும் நிலையில் தான் இருந்தது. ஆனாலும், அவ்வப்போது கையாளப்பட்ட சில நடவடிக்கைகளால் அந்த உடைவுகள் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
பாதயாத்திரைக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தோன்றியிருக்கும் ஆழமான பிளவுகளை அடுத்து இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு கையாளப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் மீண்டும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை பாதயாத்திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுமட்டும்தான் அவருடைய இலக்கு அல்ல!
அதற்கும் அப்பால், தன் மீதும் தன்குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் தான் அவர் வீதியில் இறங்கினார்.
ஒரு பக்கத்தில் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், அதிகார முறைகேடுகள் குறித்த விசாரணைகள் சரியாக முன்னெடுக்கப்படவில்லை என்ற விசனங்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன.
இன்னொரு பக்கத்தில் அப்பாவிகளான தம் மீது அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு கூறிவருகிறது.
கடந்த ஆட்சிக்கால மோசடிகள், முறைகேடுகள் குறித்த விசாரணைகள் முழுவீச்சில் நடத்தப்படவோ, அதற்கெதிரான சட்டநடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்படவோ இல்லை என்பது உண்மைதான்.
இந்த நடவடிக்கைகளை அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தான் முன்னெடுக்க வேண்டும். ஆனால் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்த எல்லா அரச நிர்வாகங்களும் அதனுள் இருந்து வெளியே வந்து தான் இதனைச் செய்ய முடியும்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில், எல்லா அரச துறைகளுக்குள்ளேயும், அவரது ஆதரவாளர்கள் உட்புகுத்தப்பட்டனர். அதனால், தற்போதைய அரசாங்கம்தான் நினைத்தவாறு எதையும் வேகமாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
எனினும் இந்தக் காரணத்தைக் காட்டி தற்போதைய அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கோ, முன்னைய ஆட்சிக்காலத்தில் தவறு செய்தவர்கள் தப்பிக் கொள்வதற்கோ இடமளிக்க முடியாது என்பதே, அரசியல் சார்பற்றவர்களின் நிலையாக உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களை சட்டச்சிக்கல்களில் இருந்து பாதுகாக்க அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைப்பதற்கான ஓர் ஆயுதமாகவும் இந்தப் பாதயாத்திரையைப் பயன்படுத்திக் கொண்டார்.
எனினும், இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளால் அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ளாது என்று அறிவித்திருந்தாலும், இந்தப் பாதயாத்திரையும் அதில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களும் அரசாங்கத்துக்கு ஒரு பீதியை ஏற்படுத்தவே செய்தது.
பாதயாத்திரைக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ என்ன செய்யப் போகிறார் ? அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு கையாளப் போகிறார் என்பதே முக்கியமான கேள்விகளாக இருக்கின்றன.
இதுவரையிலும் அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தொடுத்திருந்த போருக்கும் இப்போது தொடுத்திருக்கின்ற போருக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது.
மீண்டும் வீதியில் இறங்குவோம், அப்போது வெறும் கையுடன் திரும்பிச் செல்லமாட்டோம் என்று அவர் குறிப்பிட்டது. அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்பதைத் தான்.
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்தும் அவர் பேசியிருக்கிறார். சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு நடந்த கதியே இவர்களுக்கும் ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
தற்போதைய அரசாங்கம் என்பது, மைத்திரிபால சிறிசேன – ரணில் ஆகியோரை உள்ளடக்கியதே தவிர, ஐ.தே.கவை மட்டும் கொண்டதல்ல.
இதற்கு முன்னர், ஐ.தே.க அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுவதாக காட்டிக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ இப்போது, மைத்திரிபால சிறி்சேனவையும் இலக்கு வைத்துத் தாக்கத் தொடங்கியிருக்கிறார்.
அதைவிட, தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது, அரசாங்கத்தில் உள்ள எல்லோருக்கும் எதிரான செயற்பாடேயாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக சூளுரைத்துள்ள ஒருவரை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு தொடர்ந்தும் தனது குகைக்குள் வைத்திருக்கப் போகிறது என்று தெரியவில்லை.
கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இதற்கு முன்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதானால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதை மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை.
அதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நடவடிக்கைகள், அவரது அரசியல் மீள் எழுச்சிக்கு துணைபோவதாகவும், அதனை நியாயப்படுத்துவதாகவும் இருந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்.
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், இரண்டு தெரிவுகளை வைத்திருக்கிறார். ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தபடியே, தனது அதிகாரத்தை மீளப் பெறுவது.
இரண்டாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெளியே வந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு அதிகாரத்தைப் பெறுவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால், மஹிந்த ராஜபக்ஷவை அதற்கு வெளியே கொண்டு வருவதற்கு அவரது அணியினர் முயற்சிக்கின்றனர்.
எனினும், தனதும் தனது குடும்பத்தினரினதும் அரசியல் நலன்கருதி, அவ்வளவு இலகுவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியே வர மஹிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை தூக்கி வெளியே போட்டால் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார்.
அப்போது, ஏற்படக்கூடிய அனுதாப அலையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு, புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.
எனினும், புதிய அரசியல் கட்சியா- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியா என்ற இறுதியான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷ தனது கையில் வைத்திருக்கவில்லை.
அதனை அவர் மைத்திரிபால சிறிசேனவிடமே விட்டு வைத்திருக்கிறார். இந்த யதார்த்தத்தை மைத்திரிபால சிறிசேனவும் உணர்ந்தேயிருக்கிறார்.
அவ்வப்போது மஹிந்த ராஜபக்ஷ எல்லை மீறி அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் விமர்சனம் செய்கிறார் என்றால், அதற்கான துணிச்சலைக் கொடுத்திருப்பது மைத்திரிபால சிறிசேனதான்.
தனக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்; அவ்வாறு எடுத்தால் அது தற்கொலைக்குச் சமமானதாக இருக்கும் என்று மஹிந்த ராஜபக்ஷ நினைக்கிறார்.
மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் இது ஒரு தர்மசங்கடமானநிலை தான். மஹிந்த ராஜபக்ஷவின் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் முடியாமல், அவர்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியாமல் திணறுகின்ற நிலையைத்தான் காண முடிகிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்டம் எல்லை கடந்து போகத் தொடங்கியுள்ள நிலையில், ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து அவர் பேசத் தொடங்கியிருக்கின்ற நிலையில், இனிமேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மௌனத்தைக் கடைப்பிடித்தால், அது மைத்திரிபால சிறிசேனவின் பலவீனமாகவே பார்க்கப்படும்.
அது அவரது தலைமைத்துவ ஆளுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating