புலிகள், ராணுவம் சண்டை நிறுத்தத்துக்கு தயார்
பயங்கர சண்டையால் மூதூரில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறி தவித்து வரும் பொது மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வசதியாக மனிதாபிமான அடிப்படையில் தங்களது தாக்குதலை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தாக்குதலை புலிகள் நிறுத்தினால் தாங்களும் தாக்குதலை நிறுத்தத் தயார் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் புலிகள் கூறுகையில், இரு தரப்பின் தாக்குதலுக்கு இடையே சிக்கி மூதூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியேறினாலும் அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மனிதாபிமான அடிப்படையில் மூதூரில் இருந்து எங்கள் படைகளை வாபஸ் பெறுகிறோம் என்று கூறினர்.
இதை இலங்கை ராணுவம் வரவேற்றுள்ளது. ராணுவ செய்தித் தொடர்பாளர் உபாலி ராஜபக்ஷே கூறுகையில், புலிகள் படைகளை வாபஸ் பெறுவது உண்மையானால், நாங்களும் தாக்குதலை உடனே நிறுத்துவோம். போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும் என்றார்.
இலங்கையின் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதால் ஆத்திரமடைந்த இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலைத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பிலும், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அப்பாவி பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ராணுவம் ஊடுருவ படாதபாடுபட்டு வருகிறது. அதேநேரத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தி வந்தனர் புலிகள்.
மேலும் பல முனைகளிலும் தாக்குதல் நடத்தி அங்குமிங்குமாக படைகளைப் பிரிக்க வைத்து ராணுவத்தினரை புலிகள் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இதனால் மேற்கொண்டு முன்னேற முடியாமல் ராணுவம் தட்டுத்தடுமாறி வருகிறது.
நிலைமை சிக்கலாகி வருதைத் தொடர்ந்து நார்வே அமைதித் தூதர் ஜோன் ஹென்ஸ்சென் பேயர் கொழும்பு வந்துள்ளார். இரு தரப்பையும் சந்தித்துப் பேசி நிலையைத் தணிக்க அவர் முயன்று வருகிறார்.
இந் நிலையில் முழு அளவிலான போருக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில்¬ முக்கிய அதிகாரிகள், மு¬ப்படைத் தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
புலிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது. பேச்சை நிறுத்தி விட்டு முழு அளவிலான போரை தொடங்க நேரம் வந்து விட்டது என்று ராஜபக்ஷே கூறியதாகத் தெரிகிறது. மேலும் ராணுவத்தை தயார் நிலையில் வைக்குமாறும் ராணுவத் தளபதிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து விடுமுறையில் சென்றுள்ள வீரர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தலைமைத் தளபதி உததரவிடடுள்ளார்.
இந் நிலையில் தான் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மூதூரில் தாக்குதலை நிறுத்த புலிகளும் தமிழர் பகுதியில் தாக்குதலை நிறுத்த ராணுவமும் முன் வந்துள்ளன.
மூதூரில் தாக்குதலை நிறுத்திவிட்டு புலிகள் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பி வருவதாகவும் அதேநேரத்தில் இதை சண்டை நிறுத்தம் என்று கூற முடியாது என்றும் புலிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக மனிதாபிமான அடிப்படையில், தாக்குதலை நிறுத்துவதாகவும் கூறியுள்ளனர்.