சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொலை செய்ய முயன்ற மகள்: சிசிடிவி காட்சி..!!(வீடியோ)
சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கில் கொலை முயற்சிக்கான ஆதாரமாக வீடியோ வெளியானதை அடுத்து பெண் மருத்துவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையை சேர்ந்தவர் ராஜகோபால்.
மருத்துவரான இவருக்கு மகள் ஜெயசுதா மற்றும் மகன் ஜெயபிரகாஷ் உள்ளனர். கீழ்ப்பாக்கத்தில் ஆதித்யா என்ற மருத்துவமனையை மகன் ஜெயபிரகாஷ் நடத்தி வருகிறார். அதேபோல் மகள் ஜெயசுதா திருப்பூரில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் ராஜகோபாலுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகனுக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராஜகோபாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் உயிருக்கு போராடும் தந்தையை பார்க்க ஜெயசுதா மற்றும் அவரது மகன் ஹரி ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தந்தையை பார்க்க ஜெயசுதாவை மருத்துவர்கள் அனுமதித்தனர். ஜெயசுதா மற்றும் மகன் உள்ளே சென்றதும் அங்கு பணியில் இருந்த செவிலியரை வெளியே அனுப்பி விட்டனர்.
பின்னர் தந்தை ராஜகோபாலிடம் பேசுவது போல் நடித்து மகள் ஜெயசுதா ஏற்கனவே தயாராக எடுத்து வந்த சொத்து பத்திரங்களை எடுத்து உயிருக்கு போராடும் தந்தையின் கையை பிடித்து கைரேகைகளை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தந்தை ஜெயபிரகாஷிடம் சொல்லிவிடுவாரோ என்று நினைத்து தந்தை என்றும் பாராமல் அவரது உடலில் பொருத்தப்பட்டு இருந்த உயிர் காக்கும் குழாயை துண்டிக்க முயன்றார்.
அப்போது திடீரென மற்றொரு செவிலியர் ராஜகோபால் அறைக்கு வந்தார். இதனால் ஜெயசுதா தந்தையை கொல்லும் முயற்சி நடக்கவில்லை. பின்னர் மருத்துவர்கள் வந்த உடன் ஜெயசுதா மற்றும் அவரது மகன் ஹரி ஒன்றும் தெரியாதது போல் வெளியே வந்து விட்டனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் 2015 நவம்பர் 2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயபிரகாஷ் கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது சகோதரி ஜெயசுதா தந்தையை கொல்ல முயற்சி செய்யும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி டெல்லியில் உள்ள மருத்துவ கவுன்சிலுக்கு விரிவாக அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளுடன் ஜெயபிரகாஷ் அனுப்பி வைத்தார். மருத்துவ கவுன்சில், வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தது. மருத்துவர் ஜெயசுதாவிடம் விசாரணை நடத்தி உள்ளது.
இதுகுறித்து ஜெயபிராகாஷ் கடந்த ஜனவரி மாதமே கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ஜெயசுதா மீது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலை முயற்சி வழக்காக பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் போலீசார் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் மருத்துவர் ஒருவர் தனது தந்தையை சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்யும் நோக்கில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்ேபாது வெளியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating