ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: பல்லக்கும் கால்நடையும்…!!
அவர்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். அதனால், நாங்கள் பேசினோம். நாங்கள் பேசியதால், அவர்களும் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் பேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பேசாமலிருந்து விட்டால், அவர்களும் தமது பேச்சுக்களை நிறுத்தி விடுவார்கள். அதனால் நாங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஆகவே நாங்கள் பேசுகிறோம்.
‘ஒரு கடல் துயரம்’ எனும் தலைப்பில், கடந்த மாதம் 21 ஆம் திகதி, தமிழ் மிரரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மிக தீவிரமான கடலரிப்பு, அதன் மோசமான விளைவுகள், மற்றும் கடலரிப்பின் பின்னணி என்று – ஏராளமான விடயங்களை அந்தக் கட்டுரையில் நாம் பேசியிருந்தோம். ஒலுவில் கடலரிப்பு தொடர்பாக, அலட்சியமாக இருந்துவரும் அரசியல்வாதிகளின் இயலாமைகளை அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அந்தக் கட்டுரை சமூக மட்டத்திலும், அரசியல் அரங்கிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. பலரையும் யோசிக்க வைத்தது. மக்களை எழுச்சியுறச் செய்தது. அரசியல்வாதிகளை பேசவும், சில இடங்களில் நடிக்கவும் வைத்தது. ஒட்டுமொத்தத்தில் ‘ஒரு கடல் துயரம்’ எனும் அந்தக் கட்டுரை – அதன் இலக்கினை ஏதோ ஓர் அளவில் எட்டியிருந்தது.
ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நாம் எழுதிய அந்தக் கட்டுரை வெளிவந்த தினம், கிழக்கு மாகாணசபை அமர்வு இடம்பெற்றது. அதுநாள் வரை, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் சத்தமின்றியிருந்த, கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள், நமது கட்டுரை வெளிவந்த அந்தத் தினத்தன்று – ஒலுலில் கடலரிப்பு பற்றிப் பேசினார்கள். கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் அவசர பிரேரணையொன்றினை அன்றைய தினம் சமர்ப்பித்து, சபையில் உரையாற்றிருந்தார். கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீரும் ஒலுவில் கடலரிப்பு தொடர்பாக சபையில் பேசினார் என்று, ஊடகங்களில் செய்திகள் காணக் கிடைத்தன.
ஒலுவில் கடலரிப்பு தொடர்பில், அப்பிரதேச மக்களினுடைய அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அனைத்தும் ‘பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை’ என்பது போலவே உள்ளன. கடலரிப்புக் குறித்து அந்தப் பிரதேச மக்களும் ஊடகங்களும் உரத்துக் குரல்கொடுக்கும் போது மட்டும், அரசியல்வாதிகளும் தங்கள் பங்குக்கு எங்காவது ஓர் இடத்தில் பேசி விட்டு, அதனை ஊடகங்களில் செய்திகளாப் பரப்பி விடுகின்றனர். அத்துடன் தமது கடமைகள் முடிந்து போய்விட்டதாக அவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால், உரிய விவகாரம் தொடர்பில் ஒன்றும் நடப்பதில்லை.
ஒலுவில் – அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமம். இங்குள்ள 90 வீதமான மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள். இந்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின்; சார்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பிரதியமைச்சர்கள். மற்றவர் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர். இன்னொருபுறம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நால்வர் உள்ளனர். அவர்களில் ஒருவர் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இந்த அமைச்சர் வாழும் பிரதேச செயலகப் பிரிவில்தான் – ஒலுவில் கிராமம் அமைந்துள்ளது. இதுபோக, கிழக்கு மாகாண முதலமைச்;சர் – முஸ்லிம் காங்கிரஸின்
பிரதித் தலைவர்களில் ஒருவராக உள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸின்; தலைவர் – இந்த ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சராக இருக்கின்றார்.
இத்தனை வரப்பிரசாதங்களையும், பதவி, பட்டங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தன்வசம் வைத்திருக்கும் நிலையில்தான், அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்டம் சார்பான கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், ஒலுவில் கடலரிப்பினைத் தடுக்கக் கோரி, கிழக்கு மாகாணசபையில் கண்ணீர் விட்டு அழுததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது எவ்வளவு பெரிய முரண்நகை.
ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தமது அரசியல் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி, தீர்வொன்றினைப் பெற்றுத் தருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு, ஒரு காலத்தில் அந்த ஊர் மக்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது அந்த நம்பிக்கையை அவர்கள் முற்றாக இழந்து விட்டனர். ‘ஒரு கடல் துயரம்’ என்கிற முன்னைய கட்டுரையிலும் இதை நாம் பதிவுசெய்திருந்தோம். இந்த நிலை காரணமாக, ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தினை, அந்தப் பிரதேச மக்களே கடந்த மாதம் 29ஆம் திகதி, தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.
ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினைத் தடுப்பதற்கு – உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், ஒலுவிலில் அமைதிப் பேரணியொன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை, ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபை தலைமையேற்று நடத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டார்கள். ஒலுவில் பெரிய பள்ளிவாசலில் அன்றைய தினம், ஒலுவில் கடலரிப்பினை மையப்படுத்திய வகையில், ஜும்ஆ பிரசங்கமும் இடம்பெற்றது.
அந்தப் பேரணியானது ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தில் அந்தப் பிரதேச மக்கள், தமது அரசியல் பிரிதிநிதிகள் மீது கொண்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடாகும். ‘நமது அரசியல்வாதிகளை இனியும் நம்பிப் பயனில்லை’ என்பதன் நிலைப்பாடுதான், அந்தப் பேரணிக்குள் அவர்களைத் தள்ளிவிட்டிருந்தது.
அன்றைய பேரணில் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், மிக உயர்ந்த பதவிகளை வகிப்போர், இளைஞர்கள், பொதுமக்கள் என்று எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டனர். ஒலுவில் கடலரிப்பு என்பது அனைத்து விதமான பேதங்களுக்கும் அப்பாற்பட்ட, தமது ஊரின் பொதுப் பிரச்சினை என்பதை, அந்த மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டமையினால்தான், அந்தப் பேரணியில் அவர்களால் ஒன்றுபட முடிந்தது.
இருந்தபோதும், குறித்த பேரணி நடக்காமலிருக்க வேண்டும் என்பதிலும் வெகு சிலர் அக்கறையாக இருந்தனர். அந்தப் பிரதேசத்தின் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரொருவர் இதில் பிரதானமானவர். ஒலுவிலில் இருந்து கடந்த முறை உள்ளுராட்சி சபைப் பிரதிநிதியாகவும் குறித்த நபர் தெரிவாகியிருந்தார். ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் குறித்த பேரணியை நடத்த வேண்டாம் என்றும், அந்தப் பேரணியை ஒழுங்கு செய்தவர்களிடம் மேற்படி நபர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், யாரும் அதனை நம்பவில்லை. திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. அதில் அந்தப் பிரமுகர் கலந்துகொள்ளவில்லை. வீதியில் ஓர் ஓரமாக நின்று, பேரணியை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒலுவில் பெரிய பள்ளிவாசலின் முன்பாக ஆரம்பித்த அந்தப் பேரணி, கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிவரை சென்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள், கடலரிப்பினால் தமது பிரதேசத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய கதைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இதன்போது, காணியொன்றுக்குரிய உறுதியினை அவர்கள் காண்பித்தார்கள். அந்த உறுதி மட்டுமே, தற்போது உரிமையாளரிடம் இருப்பதாகவும், உறுதிக்குரிய காணி கடலுக்குள் முற்றாக மூழ்கி விட்டதாகவும் கூறியபோது, கடலரின்பின் கோரத்தினைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த அமைதிப் பேரணியின் இறுதியில், அதன் ஏற்பாட்டாளர்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சென்று, மகஜரொன்றினைக் கையளித்தார்கள். ஜனாதிபதிக்கு விலாசமிடப்பட்டிருந்த அந்த மகஜரில் ஒலுவில் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஒப்பமிட்டிருந்தார். அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் அந்தப் பிரேiணையைப் பெற்றுக்கொண்டார். அதில் 04 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கோரிக்கைகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
01) ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியினால் ஏற்பட்ட கடலரிப்பினை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும்.
02) மீனவர்களின் தொடர்ச்சியான தொழிலை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் கடலரிப்பினை தடுப்பதோடு, அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படவும் வேண்டும்.
03) அவ்வப்போது ஏற்படும் கடலரிப்பினை தடைசெய்ய மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆய்வறிக்கையுமற்ற, சாத்தியப்பாடற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
04) ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், காலம் தாழ்த்தாது உடனடி தீர்வை வழங்கும் பொருட்டு, சுயாதீனமான ஆணைக்குழுவை நிறுவ வேண்டும்.
அந்த மகஜரின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மீன்பிடி நீர்வள அமைச்சர் மஹிந்த அமரவீர, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினைத் தடுப்பதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில், அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகள் நிச்சயம் பங்காற்ற வேண்டும். அந்த மக்களின் ஆதரவினையும், வாக்குகளையும் பெற்றுக் கொண்டவர்கள், இதிலிருந்து தப்பி விட முடியாது.
ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் அரசியல்வாதிகள் பேச்சுக்களோடும், மக்கள் – கடந்த வாரம் நடத்திய பேரணியோடும் நின்று விடவும் கூடாது. இந்த விவகாரம் பல்லக்கில் ஏற்றப்படும் வரை, நாம் பேசிக் கொண்டேயிருப்போம்.
குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தப் பிரதேசத்துக்கு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது பரிவாரங்களோடு வந்திருந்தார். இN தினம், அமைச்சர் றிசாத் பதியுதீனின் பிரதிநிதிகளும் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, ஒலுவிலுக்கு வந்து, அப்பிரதேச பள்ளிவாசல் நிருவாகத்துடன் பேசியிருந்தனர்.
Average Rating