சித்தி கொடுமையால் கடற்கரையில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த பெண் டாக்டர்…!!
கன்னியாகுமரியில் சனி, ஞாயிறு நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து விடுவார்கள். கடற்கரையில் இவர்கள் திரிவேணி சங்கமம், சுனாமி பூங்கா, காட்சி கோபுரம் பகுதிகளில் திரண்டு நின்று கடலின் அழகையும், முக்கடலின் சங்கமத்தையும் ரசிப்பார்கள். மதிய நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கடற்கரையில் குறைந்து விடும். ஒரு சிலர் மட்டுமே கடலின் அருகில் சென்று அலையில் கால் நனைத்தப்படி இருப்பார்கள்.
அவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுலா போலீசார் கடற்கரையில் ரோந்து சுற்றி வருவார்கள். இன்று மதியமும் இதுபோல சுற்றுலா போலீசார் கடற்கரையில் ரோந்து வந்த போது ஒரு இளம்பெண் கடற்கரையில் திரிவேணி சங்கமம் பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார்.
தூரத்தில் இருந்து இதனை கவனித்த சுற்றுலா போலீசார் அந்த பெண், கடலில் இறங்கி அலைகளை நோக்கி நடந்து செல்வதை கண்டனர். உடனே அவர்கள் ஓடி சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தார். வாழப்பிடிக்கவில்லை என்று கூறி முகத்தை மூடியபடி மீண்டும் கதறினார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது.
சுற்றுலா போலீசார் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி அவரை கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் பக்குவமாக விசாரித்தனர். அப்போது அவர் பெண் போலீசாரிடம் சித்தி கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி இங்கு வந்ததாக கண்ணீர் மல்க தன் கதையை கூறினார்.
அந்த பெண்ணின் சொந்த ஊர் தர்மபுரியை அடுத்த தொப்பூர். தந்தை லாரி டிரைவராக உள்ளார். பெண்ணின் தாயார் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அதன்பின்பு தந்தை இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தது.
முதல் மனைவி மூலம் பிறந்த இப்பெண்ணை தந்தை ஹோமியோபதி மருத்துவம் படிக்க வைத்தார். டாக்டராகிவிட்ட இப்பெண் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் டாக்டரை அவரது சித்தி கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. தந்தையிடம் கூறியும் அவர் மனைவியை தட்டிக்கேட்கவில்லை.இதில் மனம் வெறுத்த பெண் டாக்டர் நேற்று காலையில் வேலைக்கு சென்றார்.
மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு நாகர்கோவிலுக்கு புறப்பட தயாராக இருந்த ரெயிலில் ஏறி இன்று காலை நாகர்கோவில் வந்திறங்கினார். அங்கிருந்து பஸ் மூலம் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார்.
இங்கு என்ன செய்வது என்று தெரியாமல் கடற்கரையில் நின்று விதியை நினைத்து மனம் நொந்து அழுது கொண்டிருந்தார். அப்போது தான் சுற்றுலா போலீசாரின் கண்ணில் பட்டு மீட்கப்பட்டார்.
இந்த விபரங்களை அறிந்து கொண்ட மகளிர் போலீசார், அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரை மீண்டும் தர்மபுரி அனுப்பி வைக்கவும், இது பற்றி பெற்றோருக்கு தகவல் கொடுக்கவும் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த பெண், இனி தான் பெற்றோர் வீட்டுக்கு போக போவதில்லை என்று கூறி கதறி அழுதார். இதை கண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் மகளிர் போலீசார் திணறினர். இன்று பிற்பகல் வரை அந்த பெண்ணை ஆறுதல் படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating