புதிய நிபந்தனைகளுடன் புத்தெழுச்சி பெறும் Colombo Port City…!!
கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில், கடந்த சில வருடங்களாக பல்வேறு கருத்துக்கள், எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை, யாவரும் அறிந்த விடயமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி திட்டம் தொடர்பான பாரியதொரு சவாலுடனேயே இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எமது பூமியை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதில், பல தரப்பினருக்கும் உடன்பாடிருக்கவில்லை. இதில், இந்தியாவும் முக்கிய இடத்தை வகித்தது. இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தது.
உலகப் பிரசித்திபெற்ற சங்கிரிலா நிறுவனம், தனது ஹோட்டல் துறையை இலங்கையில் ஆரம்பிக்கும் போது, அதற்கான காணியைத் தெரிவு செய்து, அதனைத் தனக்குச் சொந்தமாகவே கொள்வனவு செய்ய எத்தணித்தது. இது 2002 முதல் 2004ஆம் ஆண்டுக் காலப்பகுதியாகும். இதன்போது காணி அமைச்சராக இருந்த தற்போதை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, வெளி நிறுவனமொன்று, காணி கொள்வனவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்ட வரையறைகளைப் பயன்படுத்தி, அக்காணியை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கவே நடவடிக்கை எடுத்திருந்தார்.
அத்துடன், பிறிதொரு வெளிநாட்டு நிறுவனம், இலங்கையில் தனது முதலீட்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதாயின், அந்நிறுவனத்தால், காணிக் கொள்வனவு செய்ய முடியாது என்றும் அதிகபட்சமாக 99 வருடக் குத்தகையின் அடிப்படையிலேயே, காணியைப் பெற்று தனது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என்ற சட்ட வரையறைகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.
அந்த வகையில், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கமைய, எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தினாலும் இலங்கையின் காணிகளைக் கொள்வனவு செய்ய முடியாது. குத்தகையின் அடிப்படையிலேயே, காணிகளைக் கொள்வனவு செய்ய முடியும் என்ற நிலைமை, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த துறைமுக நகரத் திட்டத்தைப் பொறுத்தவரையில், இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கும் மேற்படி திட்டத்துக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகின்றது. காரணம், துறைமுகத் திட்டத்துக்கான காணியானது, முற்றாக கடலை நிரப்பியே உருவாக்கப்படுகிறது. இவ்வாறு நிரப்பப்படும் கடல், இலங்கைக்குச் சொந்தமாகவுள்ள போதிலும், அதனை நிரப்பி அமைக்கப்படும் காணி, இலங்கைக்குச் சொந்தமானதா? இல்லையா? என்பது தொடர்பில், இலங்கைச் சட்டதிட்டங்களில் குறிப்பிடப்பட்டில்லை.
இதனால், துறைமுக நகரத் திட்டத்துக்காக நிரப்பப்படும் காணி, அதனை நிரப்பியெடுக்கும் சீன நிறுவனத்துக்கா? அல்லது இலங்கைக்கா சொந்தம் என்பதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. எனவே தான், இத்திட்டத்துக்கு ஏற்கெனவே கைச்சாத்திட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம், 20 ஹெக்டெயர் காணித்துண்டொன்றை சீன நிறுவனத்துக்கு சொந்தமாகவே வழங்கும் வகையில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும், இது தொடர்பில் அவதானம் செலுத்திய நிபுணர்கள், கடந்த அரசாங்கத்தின் போதான பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இலங்கைக்கு அருகில், சீன நிறுவனத்துக்குச் சொந்தமாக காணியொன்று இருப்பது, இலங்கைக்கு மாத்திரமன்றி, இந்தியாவுக்கும் அதுவொரு பாரிய பிரச்சினையாக உள்ளது.
அதனால், இத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டாம் என, பல வழிகளும் இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. துறைமுக நகரத் திட்டத்துக்கு மேலாக விமானங்கள் பறப்பதற்கும், சீன நிறுவனத்தினால் தங்களுக்குத் தடை விதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் இந்தியா தெரிவித்து வந்தது.
இவ்வாறான பல அழுத்தங்களை எதிர்நோக்கிய நல்லாட்சி அரசாங்கம், இப்பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தே, ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டது.
இருப்பினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகின்ற போதிலும், இதுவரையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை. மஹிந்த அரசாங்கத்தின் போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு குழறுபடிகள் இருப்பதாகவும் அவற்றை முற்றாக மாற்றியமைத்தே, திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதிக்கப்போவதாகவும் தெரிவித்து வந்த அரசாங்கத்தின் அமைச்சரவை, கடந்த திங்களன்று கூடி, பழைய ஒப்பந்தத்தில் மாற்றியமைக்க வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, புதிய ஒப்பந்தத்துக்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொண்டது.
அந்தவகையில், கொழும்பு துறைமுக நகரத்திட்டம் அல்லது பிரேரிக்கப்பட்ட நிதி நகர வேலைத்திட்டத்துக்காக 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்துக்காக முன்வைக்கப்பட்ட திருத்தங்களின் (விடய இல. 06, 07, 08 மற்றும் 09) சாராம்சம் வருமாறு,
அறுதி நிலங்கள்
கடந்த அரசாங்கத்தினால் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், C.H.E.C போர்ட் சிடி பிரைவட் லிமிடட் கம்பனிக்கு (வேலைத்திட்ட கம்பனிக்கு) 20 ஹெக்டெயார் காணியினை, அறுதி அடிப்படையில் வழங்குவதுடன், மிகுதி இடங்களினை 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.
புதிய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அறுதி அடிப்படையில் எவ்வித இடங்களும் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், வேலைத்திட்ட கம்பனிக்கு வழங்கப்படும் அனைத்து காணிகளும், 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளன. இக்காணிகளில், 20 ஹெக்டெயர் தேவையின்றேல், மேலும் 99 வருடத்துக்கு, வேலைத்திட்ட கம்பனியால் குத்தகைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கைத் துறைமுக அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்கு
புதிய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினால் உண்மையான சொத்து அபிவிருத்திகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது. தற்கால இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்தின் கீழ் அனுமதி கிடைத்துள்ள செயற்பாடுகளுக்கு மாத்திரம் அதன் பொறுப்புக் கூறல் மட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால், நிரப்பப்படுகின்ற பூமிகளை மிகவும் பொருத்தமான நிறுவனமான நகர அபிவிருத்தி அகதிகார சபையிடம் பொறுப்பளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் பங்கு
இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தினை திருத்தம் செய்தல் உட்பட அரசாங்கத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றும் பொறுப்பு, புதிய ஒப்பந்தத்தின் கீழ், துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சிடம் கையளிக்கப்படும். பழைய ஒப்பந்தத்துக்குப் பதிலாக, மைத்திரி தரப்பினரின் புதிய ஒப்பந்தம் ஒன்று, பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வேலைத்திட்ட கம்பனிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ளது.
நிரப்ப முன்மொழியப்பட்டுள்ள பூமிகளின் சட்ட நிலைமை
புதிய சட்டத்தின் கீழ், இப்பூமியானது – கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் பகுதியொன்றாக இனங்காட்டப்படுவதோடு, அது, கொழும்பு மாநகர சபையிடமிருந்து பிரேரிக்கப்பட்ட நிதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ் நிரப்பப்படுகின்ற அனைத்து பூமிகளும், ஜனாதிபதியினால் UDA சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரித்து, அதன் பின்னர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கி கொடுக்கப்படுவதுடன், அவ்வதிகார சபையின் ஊடாகவே, இப்பூமியானது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும். குறித்த பூமிப் பகுதியானது, 99 வருட குத்தகைக்கு ஒப்படைக்கப்படுவதற்கு முன்னரே இந்நடைமுறை அமுல்படுத்தப்படும்.
மீனவர்களின் வருமானத்துக்கு ஆதரவு வழங்கும் வேலைத்திட்டம்
புதிய ஒப்பந்தத்தின் கீழ், மீனவ மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சுடன் ஆலோசித்து, மீனவர்களின் வருமானத்துக்கு ஆதரவு வழங்கும் வேலைத்திட்டத்துக்காக குறித்த சீனக் கம்பனியினால் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், அத்தொகையானது, பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் உரிய தரப்பினருக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயன்பாடுகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு வியூகம்
புதிய ஒப்பந்தத்தின் கீழ், வேலைத்திட்ட பூமிப் பரப்பு வரையான அனைத்து பயன்பாடுகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புக்கான வீயூகம் வகுப்பது தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பினை இலகுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக, நீண்டகாலத் தீர்வொன்றின் அடிப்படையில், சீனக் கம்பனியின் ஊடாக, அரச – தனியார் இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் தகுதியினை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
நிரப்பப்படுகின்ற பூமி முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு
இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு நிதியினை பயன்படுத்தும் போது, அரசாங்கத்தின் பொறுப்பினை இலகுபடுத்துவதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, சொத்துக்களுக்கான முகாமைத்துவக் கம்பனியொன்றினைத் தாபித்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பில் கவனம் செலுத்த, புதிய ஒப்பந்தங்களின் கீழ், மேற்படி சீனக் கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது.
காணி அபிவிருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
சுகாதார நலன்புரி மத்திய நிலையம் மற்றும் ஆரோக்கியசாலைகள், கண்காட்சி, மாநாட்டு மண்டபங்கள், கொழும்பு சர்வதேச நிதி மத்திய நிலையம் ஆகியவற்றை அவ்விடங்களில் அமைப்பதற்கு ஏதுவான முறையில் மேற்கூறப்படுகின்ற கட்டுப்பாடுகளினை விஸ்தரிப்பதற்கு, புதிய ஒப்பந்தத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதேபோன்று, கொழும்பு துறைமுகத்தின் வடக்கு மற்றும் மேற்கு கப்பல் துறைகளின் அபிவிருத்தி தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது. அதற்கும் மேலாக, ஆரம்பத்தில் நிரப்பப்படுகின்ற பூமிகள் உட்பட புதிய கொழும்பு சர்வதேச நிதி மத்திய நிலைய கட்டடத்தை தாபிப்பதற்கும், நிரப்பப்படுகின்ற இடங்களில் கட்டங்களை தாபிப்பதற்கான தொழில்நுட்ப சான்றுகளை உறுதி செய்து, அது தொடர்பான பரிசீலனை முடிந்தவுடன், இலங்கை அரசாங்கத்தை புரிந்துணர்வுக்கு ஏற்படுதல் மற்றும் இணக்கத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகளின் கீழ், புதிய முதலீட்டினை மேற்கொள்வதற்கும், சீனக் கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது.
கோரிக்கைகள்
தேவையான சூழலியல் அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்தால் முடியாது போனமையாலும் வேலைத்திட்டத்தை நிறுத்தியமையால் ஏற்பட்ட நட்டத்தினை மீட்டுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட இழப்பீட்டு கோரிக்கைகளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் சீன விஜயங்களின் போது ஏற்படுத்தப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் விலக்கிக்கொள்வதற்கு, சீனக் கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது.
இழப்பீடுகளை குறைத்துக் கொள்வதற்காக, நிரப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற காணிகளின் அளவினை அதிகரித்தல் மற்றும் 62 ஹெக்டெயர் என்ற இலங்கை அரசாங்கத்தின் உரிமையினை குறைக்காமல், தமக்கு உரித்தான பெறுமானத்துக்கு மேலதிகமாக விற்பனை செய்வதற்கு முடியுமான 2 ஹெக்டெயர் நிலப்பரப்பினை பெற்றுத்தருமாறு சீனக் கம்பனியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இவை, இரவு மோட்டார் வாகனப் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் வீதிகள் போன்ற தேவையற்ற வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பூமிகளில் இருந்து வழங்கப்படும்.
துறைமுக நகரத்துக்காக மேலும் 28 ஹெக்டெயர் பூமிப் பரப்பினை, இவ்வருடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட புதிய பாரிய திட்டத்தினுள் வழங்க குறித்த கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதிகள்
சீனக் கம்பனிகள் மூலம் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளுடன், முழுமையான புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடொன்றினை மேற்கொள்வதற்கு, 2015ஆம் ஆண்டு பாரிய நகர மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதிய சுற்றுச்சூழல் நிபந்தனைகள்
2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் சுற்றுச்சூழல் தடைகள் மதிப்பீட்டின் கீழ், கடற்கரை காப்புறுதித் திணைக்களத்தின் மூலம், சுய அபிவிருத்திப் பத்திரத்தில் 42 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
நிரப்பப்படுகின்ற 269 ஹெக்டெயர் பூமிப் பரப்புக்காக பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் நடத்தப்பட்ட, 2015ஆம் ஆண்டின் பொது மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக பிரபல்யப்படுத்தப்பட்ட, புதிய சுற்றுச்சூழல் தடைகள் மதிப்பீட்டின் கீழ், சுற்றுச்சூழல் தடைகளினை குறைத்துக்கொள்வதற்கான 70 நிபந்தனைகள், கடற்கரை காப்புறுதித் திணைக்களத்தின் புதிய அபிவிருத்திப் பத்திரத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன.
நிலைமாற்றம்
சிங்கப்பூர் மற்றும் டுபாய்க்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் நோக்கில், நிதி நகரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக, இப்பூமிப் பரப்பினை பயன்படுத்துவதாக சீன அரசுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம், கடல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.
இதற்காக, டுபாயில் நடைமுறைப்படுத்தும் வகையிலான கடற்கரை நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்குத் தேவையான புதிய சட்ட திட்டங்களை அரசாங்கம் முன்மொழியவுள்ளது. இந்நிதி நகரம், இலங்கைக்கான பிரதான வருமான மார்க்கமாகவும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்பதிலும் ஐயமில்லை.
இவ்வாறான பல மாற்று நிபந்தனைகளுடன், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிலையில், வெகு விரைவில், இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் அறிவிப்பாகும்.
எவ்வாறாயினும், எமது நாட்டையோ, எமது நாட்டுக்குச் சொந்தமான கடற்பரப்பையோ, எவரும் உரிமை கொண்டாடாத வகையிலும் இலங்கையர்கள் இதனால் சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காத வகையிலும், இந்த வேலைத்திட்டம் அமைந்தால் திருப்தியே என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
Average Rating