மூதூர் மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்கின்றனர்

Read Time:3 Minute, 28 Second

Mutur-Slk.jpgஇலங்கையின் கிழக்கே மூதூர் பகுதியில் மோதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்புத் தேடி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி கந்தளாய் கிண்ணியா மற்றும் திருகோணமலை நகர் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கந்தளாயை சென்றடைந்த குடும்பங்கள் பல அங்குள்ள பாடசாலைகள் மற்றும் பொதுஇடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை ஐக்கியநாடுகள் அகதிகள் ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது.

திருகோணமலை சென் ஜோசப்ஸ் மருத்துவ நிலையத்தின் உதவியுடன் ஜெர்மன் வைத்திய குழுவினர் இவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். அதேவேளை மூதூர் கிழக்குப் பகுதியிலும் வான் தாக்குதல் நடப்பதால் அப்பகுதிவாசிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு இடமபெயர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே திருகோணமலையிலிருந்து மூதூருக்குச் சென்ற அரச தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களும் அங்கு உள்ளதாகவும், அவர்களின் நிலை தொடர்பாக அறிய முடியாதுள்ளதாகவும் இவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் வன்முறையின் காரணமாக இடம் பெயர்ந்து கந்தளாய் வந்தடைந்துள்ள முஸ்லிம்கள் சிலர், விடுதலைப் புலிகள் தங்களை பள்ளிக் கட்டிடத்திற்குள் செல்லுமாறு கூறியதாகவும் பின்னர் தங்களை அதில் இருந்து வெளியில் விடவில்லை என்றும் தெரிவித்தனர். அந்தக் கட்டிடத்தின் மீது புலிகள் தாக்கியதாகவும் தெரிவித்த சிலர், தாங்கள் உணவு, குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மூதூரில் இருந்து சண்டை காரணமாக வெளியாறும் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் சில இடங்களில் தடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், அவ்வாறு முஸ்லிம்கள் தடுக்கப்படக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மோதலில் ஈடுபடும் இரு தரப்பினருடனும் பேசுவதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக நோர்வே தரப்பினரின் ஊடாக விடுதலைப்புலிகளிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பொது இடங்களில்் புகைப்படம் ‘கிளிக்’-சௌதி அரசு அனுமதி
Next post ரம்ஸ்பெல்டு பதவி விலக ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை