வயிற்றில் வலியா, ஒரே எரிச்சலா?.. போக்குவதற்கு எளிமையான டிப்ஸ்…!!
திடீரென்று நடுராத்திரியில் வயிற்றில் அமிலத்தை ஊற்றியதுபோல் எரிகிறதா? சாப்பிட்டால் வலி, வாய்க்குள் சிறு சிறு கொப்பளங்கள் இப்படி நாளுக்கு ஒன்றாய் உங்களைப் படுத்தி எடுக்கின்றனவா? இது நிச்சயம் கிரகம் படுத்தும்பாடு இல்லை. உங்கள் வயிற்றை நீங்கள் படுத்தியதால் பதிலுக்கு வயிறே உங்களைப் படுத்தும்பாடு இது. உங்களுக்கு வயிற்றுக்குள் புண் எதனால் வருகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்றவை எல்லாம் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகின்றன.
அதுபோல் க்ரெடிட் கார்டு தவணை, நான்காவது காதலும் தோல்வியில் முடிவது போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலும் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகின்றன.
சின்ன சின்னதாக சில காரியங்களை செய்தால் புண்பட்ட வயிறை ஆற்றிவிடலாம்.
* உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். லபக் லபக்கென விழுங்காதீர்கள்.
* நாக்கு பழுத்துப்போகும் அளவுக்கு அதிக சூடான பானங்களை குடிக்காதீர்கள். அதேபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது. இந்த பஸ் போனால் அடுத்த பஸ்ஸைப் பிடித்துவிடலாம். பொறுமையாகக் குடியுங்கள்.
* ஆவி பறக்க சுடச்சுட உணவுப்பொருட்களை சாப்பிடவே செய்யாதீர்கள். ஆக்கப்பொறுத்தது ஆறப்பொறுக்கவில்லையா பழமொழி உங்களுக்காகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பது உணருங்கள்.
* எப்படி அதிக சூடு ஆகாதோ அப்படித்தான் அதிகக் குளிர்ச்சியும் ஆகாது. ஸீரோ டிகிரியில் குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
* புளி, காரம் இவையெல்லாம் இனிமேலும் அதிகமாக வேண்டாம். பாதியாக குறையுங்கள்.
* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும். (பர்ஸிலும்தான்)
* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். ஜங்க் ஃபுட்களில் பஃப் மகா எமன். நான்கு நாட்களுக்கு செரிக்காத செர்னோபில் ஐட்டம் அது.
* எதையாவது பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறினால், உடனே கைவைத்துவிடாதீர்கள். கட்டளை வயிறிடமிருந்து வரவேண்டும். கண்களிலிருந்து அல்ல. நன்றாகப் பசிக்கும்போது சாப்பிடுங்கள். இனிமேல் கெடா வெட்டுக்கு ஒருவருடம் காத்திருக்கவேண்டும் என்று இன்றைய விருந்திலேயே முடிந்தவரை பாத்திகட்டாதீர்கள்.
* சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று மூன்று நாட்களுக்கு முன் வைத்த புளிக்குழம்பை ஃப்ரிட்ஜுக்குள் வைத்து வைத்து சாப்பிடாதீர்கள். அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.
* வேறு வழியில்லை. கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல் சிரிப்பு தெரபி மாதிரி எதையாவது முயற்சிசெய்யுங்கள். நல்லது.
* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். (எதையும் கலக்காமல்!)
மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating