கிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை…!!
சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கமொன்றை முன்னிறுத்திக் கொண்டு, சிறுநரிகளும் ஓநாய்களும், புதிய பயணமொன்றை மேற்கொள்ள முயல்கின்றன. அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் தொடைகளும் தாடைகளும், பெரும் வேட்டையை நடத்தும் வலுவை இழந்துவிட்டன. இப்போது, அதனால் மான்களின் வேகத்துக்கு ஓட முடியாது. ஏதாவது, மீந்துபோன இரைகள் கிடைக்குமா என்று காத்திருக்க வேண்டும். நிலைமை அப்படியிருக்க, கிழட்டுச் சிங்கம் பெரும் வேட்டையை நடத்தும், அதனூடு தாங்களும் வயிற்றை நிறைத்துக் கொள்ளலாம் என்று சிறுநரிகளும் ஓநாய்களும் கனவு காண்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, கண்டியிலிருந்து கொழும்பு வரையில் நடத்திய ‘ஜன சட்டன’ என்கிற பாதயாத்திரை தொடர்பிலான உரையாடல் ஒன்றின் போது, இந்தப் பத்தியாளர் மேற்கண்ட உதாரணத்தைக் கூறினார்.
இலங்கை அரசியல் வரலாற்றில், குறிப்பாக தேர்தல் அரசியலில், பாதயாத்திரைகளும் பெரும் கூட்டங்களும் மாற்றங்களை ஏற்படுத்திய வரலாறுகள் உண்டு. கொழும்பிலிருந்து கண்டிக்குப் பாத யாத்திரை சென்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைக் கடந்து வந்திருக்கின்றோம். ஜெயவர்த்தனவால், பாதயாத்திரையை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் போனாலும், அவரின் இலக்கு எட்டப்பட்டது. தேய்ந்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் எழுச்சி அப்போது அப்படித்தான் ஆரம்பித்தது.
அதுபோல, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், தென்னிலங்கையில் அழுத்தங்களையும், அச்சவுணர்வையும் ஏற்படுத்திய பெரும் கூட்டங்கள், வடக்கிலும் கிழக்கிலும் ‘பொங்கு தமிழ்’ எனும் பெயரில் நடைபெற்றன. உண்மையில் அவை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அபிமானம் மற்றும் அரசியல் உரிமைப் போராட்டங்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்பிலான அறைகூவல்களை சர்வதேச ரீதியில் விடுக்கும் நோக்கிலேயே தமிழ் மக்களினால் நடத்தப்பட்டன. ஆனால், அதுவே, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரணில் அரசாங்கத்தை அகற்றி, தென்னிலங்கையில் மீண்டும் சந்திரிகாவின் கையை ஓங்க வைத்தது. அந்த மாற்றம் மக்கள் விடுதலை முன்னணியின் ஒத்திசைவோடு, மஹிந்தவை ஆட்சி அரங்கில் ஏற்றியது. அந்த அரங்கில் 10 வருடங்களாக நாம் கண்ட காட்சிகள் சொல்லி மாழாதவை. இப்போது அரங்கிலிருந்து இறக்கப்பட்டு அநாதையாக விடப்பட்ட மஹிந்தவை முன்னிறுத்தியே ‘ஜன சட்டன’ பாதயாத்திரை ஐந்து நாட்களாக நடந்து முடிந்திருக்கின்றது.
உண்மையிலேயே இந்தப் பாதயாத்திரை, தென்னிலங்கை அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமையைக் கொண்டிருக்கிறதா? குறிப்பாக, பாதயாத்திரை நடத்திய அணிக்குச் சாதகமான அம்சங்களைக் கொடுக்குமா என்று நோக்கினால் மாறுபட்ட பதில்களே கிடைக்கின்றன.
பாதயாத்திரை, நல்லாட்சி அரசாங்கத்தின் அராஜகத்துக்கு எதிராக நடத்தப்படுவதாகக் கூட்டு எதிரணி தெரிவித்தது. பாதயாத்திரையின் இறுதியில், உரையாற்றிய மஹிந்த, தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கத்தை நோக்கி ‘சர்வாதிகார அரசாங்கம், ஆட்சியாளர்கள்’ என்கிற தோரணையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். சரியாக 20 மாதங்களுக்கு முன்னர், மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக மைத்திரி, ரணில் உள்ளிட்ட பொது எதிரணியொன்று ஆட்சி மாற்றக் கோரிக்கையை மக்களிடம் கொண்டு வந்த போது கூறிய வார்த்தைகளை, இன்றைக்கு மஹிந்த திரும்பக் கூறிக் கொண்டிருக்கின்றார்.
கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரண்டு ஆண்டுகள் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்தன. அதன்மூலம், மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த பலரும், தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர்களானார்கள். ஆனால், மஹிந்தவின் பெரும் அபிமானிகளாக காட்டிக் கொண்டவர்களும் ஊழல் குற்றச்சாட்டுக்களை பெருவாரியாக எதிர்கொண்டவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்று மஹிந்தவோடு இணைந்துவிட்டு, மீண்டும் ரணிலிடம் வருவதில் சிக்கல்களை எதிர்கொண்டவர்களும் கூட்டு எதிரணியாக நாடாளுமன்றத்துக்குள் உட்காரவேண்டிய சூழல் உருவானது.
இந்தச் சூழல், தேசிய அரசாங்கத்துக்கும் அவசியப்பட்டது. குறிப்பாக, ரணில் கடந்த அரசாங்கத்தின் மீதான தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது, அவற்றை எதிர்கொள்வதற்காக திறன்குறைந்த எதிரணியை உருவாக்க முனைந்தார். அதுதான், வேறுவிதமாக மஹிந்தவை முன்னிறுத்திய கூட்டு எதிரணியாகவும் அமையப்பெற்றது.
ரணில், தேர்தல் அரசியல் வெற்றிகளை தக்க வைப்பதில் மாத்திரம் அக்கறை கொள்ளாமல், தென்னிலங்கை மீதான வடக்கு மற்றும் சர்வதேச அழுத்தங்களையும் வெற்றி கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருக்கின்றார். குறிப்பாக, வடக்கிலிருந்து எழும் அழுத்தங்களை கையாளுவதற்கும் தென்னிலங்கையில் கடும்போக்குத் தரப்பொன்றின் அவசியம் உண்டென்பதை அவர் உணர்ந்திருக்கின்றார். அதன்போக்கிலும், அவர் மஹிந்த அணியை, அதாவது கூட்டு எதிரணி இன்னமும் ஐந்து ஆண்டுகளுக்கு தக்க வைக்க நினைக்கின்றார். அதற்கு சுதந்திரக் கட்சிக்குள் சார்ச்சைகள் இருப்பது அவசியமானது என்பதையும் அவர் உணர்த்திருக்கின்றார்.
கூட்டு எதிரணியின் தேவை ரணிலுக்கு மாத்திரமல்ல, இன்னும் பல தரப்புக்களுக்கும் அவசியமாக இருக்கின்றது. இந்த இடத்தில் மைத்திரியின் நோக்கமும் எதிர்பார்ப்பும் எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்று பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி அவ்வளவு இலகுவாகத் தேடி வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தலைமைப் பதவியினை அடைவதற்கு சட்டரீதியான போராட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்று, அவர் நினைத்தார். ஆனால், நடந்ததோ வேறு வகையான மாற்றம். வெற்றிபெற்ற மைத்தியிடம் தோற்றுப்போன கூட்டம் ஒட்டிக்கொண்டது.
அப்போது, அவருக்குப் புதிய வடிவில் சில சிக்கல்கள் வந்தன. யாரை நோக்கி ஊழல்காரர், சர்வாதிகாரி என்று சொன்னாரோ, அவரோடு இருந்து உண்டு கழித்தவர்கள், இப்போது இவரோடு ஒட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதனைச் சரியாகக் கையாள வேண்டும். இல்லாது போனால், மஹிந்த மீதான அடையாளத்தை அல்லது அந்த அழுக்கினை தானும் கொண்டு சுமக்க வேண்டியிருக்கும் என்று கருதினார். அதன்போக்கில் நிகழ்த்தப்பட்ட ஊடாட்டங்கள் ஒரு வகையில் மஹிந்த அணியை உருவாக்குவதிலும் நிலைக்க வைப்பதிலும், குறிப்பிட்டளவு தாக்கம் செலுத்தின. இப்போது, மைத்திரியிடம் இருப்பது சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த என்கிற அபிமானத்தினை அகற்றுவதும்,
அதனூடு கட்சியைப் புதிய வடிவில் கட்டமைப்பதும் ஆகும். அதற்கான கால அவகாசமொன்றை அவர் பெற நினைத்தார். அதன்போக்கில், தேசிய அரசாங்கத்தின் கால எல்லையை ஐந்து ஆண்டுகளாக அதிகரிப்பதற்கான காரணத்தைத் தேடினார். கூட்டு எதிரணி என்கிற பேரில், மஹிந்த அணி முன்னெடுக்கும் சில விடயங்களை வைத்துக் கொண்டு அதனைச் சாதகமாக்கி விட்டார்.
இப்போது, அவர் சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் மஹிந்த விசுவாசிகளைக் களையெடுக்க ஆரம்பித்திருக்கின்றார். ஆனால், அது யாருக்கும் தெரியாத மாதிரியாக- கனதியாகத் தொடர்கின்றது. குறிப்பாக, கடந்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்த போதும், அவர்களைத் தேசியப் பட்டியல் மூலம் கொண்டு வந்து, அமைச்சராக்கியமையும் அதன் நோக்கிலாகும். அந்த முக்கியஸ்தர்கள் இப்போது மைத்திரி விசுவாசிகள். இவற்றையெல்லாம் மஹிந்த உணரவில்லையா, அவர் அவ்வளவு பெரிய முட்டாளா என்கிற கேள்விகள் எழலாம். இல்லை, மஹிந்த அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை.
அவர் மிகப்பெரிய திட்டமிடல்களோடு ஆட்சி அதிகாரத்தினைக் காத்திருந்து அடைந்த நபர். ஆனால், இன்றைக்கு அவர் எதிர்கொள்ளும் களம் புதியது. விசித்திரமானது. போர் வெற்றிக் கோசம் மாத்திரம் மக்களை கவருவதற்குப் போதுமானது என்று அவர் நம்பிக்கொண்டிருக்க, இல்லை அதனையும் மீறிய விடயங்கள் நாளாந்த வாழ்க்கைக்கு அவசியம் என்று, தென்னிலங்கை மக்கள் அவரிடம் சொல்லியிருக்கின்றார்கள். அதுதான், அவரைத் தோற்கடித்தது. இப்போது, அவர் சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கம். அவரின் ஒரே எதிர்பார்ப்பு, பெரும் சிங்கக் கூட்டமொன்றுக்கு தன்னுடைய மகன் நாமல் ராஜபக்ஷவை தலைவனாக்குவது.
அதற்கான வழிகள் எந்தப் பக்கத்திலிருந்தாவது திறக்குமா என்றுதான் இப்போது தேடிக் கொண்டிருக்கின்றார்.
அப்படிப்பட்ட நிலையில், அரசியல் அனாதைகளாகிவிட்ட சிலரும் சிறுநரிகளான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
நடத்தி முடிக்கப்பட்ட பாத யாத்திரையில் குறிப்பிட்டளவான மக்கள் அணி திரண்டனர்கள். அணி திரண்ட மக்கள் யார் என்கிற கேள்விக்கு ‘மஹிந்த விசுவாசிகள்’ என்கிற பதில் கிடைக்கும். உண்மை, தென்னிலங்கையில் மஹிந்த விசுவாசிகள் இன்னமும் இருக்கின்றனர். ஆனால், அது, சுதந்திரக் கட்சி என்கிற நிலையை தன்னகத்தே சீக்கிரத்திலேயே எடுத்துக் கொள்ளும் அளவுக்கானது அல்ல.
அதுபோல, ரணிலை எதிர்கொண்டு அதிகாரத்தை மீண்டும் அடைவதற்கான அடைவுகளையும் செய்யும்படி இல்லை. அதனைத் தாண்டி, இன்னும் மூன்று வருடத்துக்கு ஜனாதிபதி நினைத்தாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஆக, ஆட்சி மாற்றமொன்றுக்கான கோரிக்கைகள் சாத்தியப்படாது. நிலைமை அப்படியிருக்க, முதிர்ந்த வயதில் மஹிந்தவால் மிக ஈனமான கர்ஜனையை மாத்திரமே எழுப்ப முடிந்திருக்கின்றது. பாதயாத்திரையும் அதனையே பதிவு செய்திருக்கின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating